ஜிமாவின் கைபேசி

0

ஜிமாவை உங்களுக்குத் தெரிந்திருக்காது. உங்களைப் போன்ற ஒரு மாணவிதான் ஜிமா. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அனைத்தையும் தரும் அலாவுதீன் அற்புத விளக்கைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அது போன்ற ஒரு நவீன கைபேசி (செல்போன்) அவளிடம் இருக்கிறது. அதோட பேரு டிப்பி.

அந்த டிப்பி என்னவெல்லாம் செய்கிறது தெரியுமா?

கொசுவை விரட்டி அடிக்கும், மழை வருமா, வராதான்னு சொல்லும், கணக்கு சொல்லிக் கொடுக்கும், குடிக்கும் தண்ணி சுகாதாரமானதா என்று கண்டுபிடிக்கும், மருத்துவ ஆலோசனை தரும்… இன்னும் என்னவெல்லாமோ செய்யும்.

இவ்வளவும் வெறும் மாயமந்திரம் போல அல்லாமல், அறிவியல் கற்பனை மூலமாக நடக்கிறது. டிப்பி செய்வதெல்லாம் எதிர்காலத்தில் என்றைக்காவது ஒரு நாள் நடக்கலாம்.

இத்தனையையும் செய்யும் கைபேசி, ஒரு நாள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுகிறது. நமது கணினியை எல்லாம் பாதிக்கிறதே வைரஸ், அது போன்ற ஒரு தவறான மென்பொருள் நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளில் வைரஸ் தாக்குதலைத் தொடுக்கிறது. அப்படிப்பட்ட பாதிப்புதான் இப்போது டிப்பிக்கும் ஏற்பட்டிருக்கிறது.

தங்களுக்குப் பல உதவிகளைச் செய்த டிப்பிக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்த்து ஜிமாவின் தோழிகள் பதறிவிட்டார்கள். அப்படியானால், ஜிமாவின் மனது எப்படியிருந்திருக்கும்? பக்பக் என்று நெஞ்சு அடித்துக்கொண்டது.

அந்த வைரஸ் பாதிப்பை எப்படிக் குறைப்பது என்று டிப்பியே ஜிமாவுக்கு வழிகாட்டுகிறது. தன்னையே சீர்படுத்திக்கொள்வது எப்படி என்று வழிகாட்டும் அளவுக்குத் திறன் கொண்டது டிப்பி. ரொம்ப ஆச்சரியமா இருக்குல்ல.

கிரீன்லீஃப் என்ற ஆண்டிவைரஸ் மென்பொருளைத் தொட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிறது டிப்பி. வைரஸ் நீக்கப்பட்ட பிறகு, கணினியைச் செய்வது போலவே ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான பாஸ்வேர்ட் ஜிமாவுக்குத் தெரியாது. அய்யய்யோ என்ன செய்வது?

அதையும் டிப்பியே சொல்லிக்கொடுக்கிறது. எல்லோருக்கும் அல்ல, தன்னோட செல்லத் தோழி ஜிமாவுக்கு மட்டும்தான்.

டிப்பிக்கு ஏதாவது ஒன்று என்றால் ஜிமாவால் எதையும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு ஜிமாவும் டிப்பியும் நெருக்கம். டிப்பியின் உதவியுடன் பல புதிய விஷயங்களைப் பெற்ற ஜிமா, அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போலப் பள்ளி அறிவியல் கண்காட்சியில் வைத்த காட்சிப் பொருளுக்கு அமைச்சரிடம் முதல் பரிசு வாங்கப் போகிறாள். அந்த முக்கியமான நேரத்தில் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கிறது.

ஜிமாவின் வலது கை போலிருக்கும் டிப்பி தவறி விழுந்து, ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பக்கத்துக்குச் சிதறுகிறது. வேகவேகமாக அவற்றைத் தேடியெடுக்கிறாள் ஜிமா. அதற்கு அப்புறம் என்ன ஆச்சு? ஜிமாவின் உயிரைப் போல் இருந்த டிப்பிக்கு உயிர் வந்துச்சா? ‘ஜிமாவின் கைபேசி’ புத்தகத்தைப் படித்தால் தெரிந்துவிடும்.

இந்த அறிவியல் புனைக் கதையை எழுதியவர் கொ.மா.கோ. இளங்கோ. கதையின் முக்கியக் காட்சிகளைக் கண் முன் நிறுத்துகின்றன ஓவியர் ஜெயராஜின் கோட்டோவியங்கள்.

ஜிமாவின் கைபேசி, கொ.மா.கோ. இளங்கோ, புக்ஸ் ஃபார் சில்ரன்,

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018,

தொலைபேசி: 044-24332924

நன்றி: தி இந்து( தமிழ்)

Buy Now

Share.

About Author

Leave A Reply