அரசியல் பேசும் அயல் சினிமா

0

சமீபத்தில் வாசித்ததில், சினிமா பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்களில் சிறந்ததொன்றாக இதைச் சொல்வேன். சினிமாவின் அழகியல், நுட்பம், திரைக்கதை போன்றவை பற்றி பெரும்பாலான திரைப்பட நூல்கள் பேசும் போது அதற்கு மாறாக இந்நூல் சர்வதேசஅரசியல் சினிமாக்களைப் பற்றி உரையாடுகிறது.இதிலுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றையும் வாசிக்க வாசிக்க குருதி தலைக்கேறி உணர்ச்சிவசப்பட வேண்டியதாயிருக்கிறது. வல்லரசு நாடுகள் தங்களது ஆதிக்க அரசியல் அத்துமீறல்களின் மூலமாகவும் பின் காலனியாதிக்கத்தின் வழியாகவும் மூன்றாமுலக நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கும், சுரண்டும் இயற்கை வளம், மனித வளம் ஆகியவை தொடர்பான உண்மைகளையும் தகவல்களையும் அறிய மனம் கனத்துப் போகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பல்விதமான தந்திரங்களுக்கு மயங்கி நுகர்வுக் கலாசார வெறியில் இயங்கும் பொதுச்சமூகம் தாங்கள் நுகரும் பொருட்களுக்கு பின்னேயுள்ள மனித உரிமை மீறல்களை, அவைகளுக்குப் பின்னே உறைந்துள்ள ரத்தத்தை,கண்ணீரை உணர்ந்திராத குற்றவுணர்ச்சியை இந்நூல் எழுப்புகிறது. நாம் விரும்பி தின்னும் சாக்லேட், அருந்தும் குளிர்பானம், ஜம்பத்துடன் உபயோகிக்கும் செல்போன் என்று பலவற்றிலும் ஏழை நாடுகளுடைய மனிதர்களின் துயரங்கள் படிந்திருக்கின்றன. இந்த உண்மைகளை வெளிப்படுத்தும் 16 வகையான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை விரித்துச் சொல்லும் இந்த நூல் ஒவ்வொரு நபராலும் தவறாமல் வாசிக்கப்பட வேண்டியது.

விழித்திருக்கும் கணம் முழுவதும் நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் செல்போன், கணினி ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் கனிமங்களின் பெரும்பகுதியானது காங்கோ நாட்டிலிருந்து பெறப்படுகின்றன. சுரங்கங்களில் கனிமங்களை வெட்டுவதற்கான ஆபத்தான, சிரமமான பணிகளுக்காக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.சொற்பமான கூலியே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மனித உரிமை மீறல்கள் எதையும் கண்டுகொள்ள விரும்பாத பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டுப் போர்களுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் தங்களின் கச்சாப்பொருட்களின் வரத்து பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கின்றன. போரில் ஈடுபடும் ஆயுதக்குழுக்கள் கனிமங்களை ஐரோப்பிய தேசங்களுக்கு விற்று அவற்றின் மூலம் ஆயுதங்களை வாங்கி போர் செய்கிறார்கள். இந்த உண்மைகளை அறிய பயணிக்கும் ஒருவரைப் பற்றிய ஆவணப்படம் Blood In Mobile (2010). டென்மார்க்கைச் சேர்ந்த பிராங்க் என்கிற திரைப்பட இயக்குநர், கனிமச் சுரங்கங்களில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களா என்கிற உண்மையை அறிய காங்கோவிற்கு பயணிக்கிறார். போராளிக்குழுக்களின் வன்முறை மீதான அச்சத்தையும் தாண்டிச் சென்று தான் கேள்விப்பட்டது உண்மைதான் என அறிகிறார். தான் கண்ட உண்மைகளை பலத்த போராட்டத்திற்குப் பிறகு ஐ.நா. நிறுவனத்திடமும் செல்போன் நிறுவனத்திடமும் முன்வைக்கிறார். எதிர்பார்த்தது போலவே அவை கள்ள மெளனத்துடன் இந்த உண்மைகளைக் கடக்கின்றன.

இதைப் போலவே இன்னொரு ஆவணப்படமான The Dark side of Chocolate (2010) சாக்லெட் தயாரிப்பதற்கு அத்தியாவசியமான பொருளான கோகோ பவுடருக்காக, கோகோ தோட்டங்களில் பணியாற்ற சட்டவிரோதமாக கடத்தப்படும் ஆப்ரிக்க சிறுவர்களைப் பற்றி பேசுகிறது. இனிப்பான பொருளுக்கு பின்னிருக்கும் கசப்பான உண்மையிது. மாலி என்கிற மேற்கு ஆப்ரிக்க நாட்டிலிருந்து சிறுவர்கள் கடத்தப்பட்டு ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு கோகோ தோட்டங்களில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர். டென்மார்க்கைச் சேர்ந்த மிக்கி மிஸ்திராதி சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று ஒளித்து வைக்கப்பட்ட கேமிரா மூலம் இந்த உண்மைகளை பதிவாக்குகிறார். அவைகளை சம்பந்தப்பட்ட சாக்லேட் நிறுவனத்திடம் தெரிவிக்கிறார். என்ன நடந்திருக்கும் என்று நாம் யூகிப்பது பெரிய விஷயமில்லை. ‘கோகோ தோட்டங்கள் எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. அங்கு நிகழும் எதற்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது’ என்கிற அறிக்கையின் மூலம் தங்களின் பொறுப்பை அவை கைகழுவுகின்றன. இதைத்தான் இந்த ஆவணப்படம் விளக்குகிறது.

இப்படி ஒவ்வொரு கட்டுரையுமே முக்கியமான சமகால அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கியிருக்கும் திரைப்படங்களைப் பற்றி பேசுகிறது. இதில் என்னை மிகவும் கவர்ந்தது, How Cuba Survied Peak Oil (2006) என்கிற ஆவணப்படத்தைப் பற்றிய கட்டுரை. இப்படியெல்லாம் நிஜமாகவே நடந்திருக்குமா என்கிற வியப்பை ஏற்படுத்துகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கூபா மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது அமெரிக்கா. 90-களில் சோவியத் யூனியன் வீழந்ததும் அதுவரையான ஆதரவையும் இழந்து அடைக்கப்பட்ட கூண்டிற்குள் வாழும் நிலைக்கு செல்கிறது கூபா. 80 சதவீத இறக்குமதியையும் ஏற்றுமதியையும் இழக்கிறது. உலகம் வருங்காலத்தில் மிக கடுமையாக சந்திக்கப் போகும் எண்ணைய் பற்றாக்குறையின் உக்கிரத்தை 90-களிலேயே சந்திக்கிறது கூபா. எண்ணைய் இறக்குமதி குறைந்ததால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பேருந்துகள் ஓடவில்லை. நாடே இருளில் தவிக்கிறது. இந்தக் கடுமையான நெருக்கடியிலிருந்து கூபா எப்படி மீள்கிறது என்கிற அந்த வரலாற்றை அறிய வியப்பும் பிரமிப்புமாய் இருக்கிறது. கச்சிதமாக திட்டமிடப்படுகிற பசுமைப்புரட்சியின் மூலம் வர்க்க பேதமின்றி நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒற்றுமையுணர்வுடன் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். குறுகிய காலத்திலேயே உணவு உற்பத்தியிலும் எரிபொருள் உற்பத்தியிலும் தன்னிறைவை அடையும் சாகசத்தை நிகழ்த்துகிறது. இந்தக் கடினமான பாதையை இலகுவாக்குவது அரசின் திட்டங்களும் அதற்கு மக்கள் தரும் அபாரமான ஒத்துழைப்பும்.

***

நூலாசிரியரான இ.பா. சிந்தன் ஒவ்வொரு திரைப்படத்திற்குப் பின்னரும் உள்ள வரலாற்றுக் காரணங்களையும் அரசியல் தன்மைகளையும் மிக விரிவான தகவல்களுடன் விளக்குகிறார். அதாவது திரைப்படத்தைப் பற்றி பிரதானமாக பேசாமல் அவற்றின் பின்னுள்ள தகவல்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தந்திருக்கிறார். எனவே சம்பந்தப்பட்ட திரைப்படங்களையும் ஆவணப்படங்களையும் பார்க்கும் ஆவல் இயல்பாகவே வாசகருக்கு எழுகிறது. சமூக அக்கறையுடனும் அரசியல் பிரக்ஞையுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் சினிமா என்கிற வலிமையான ஊடகத்தைக் கொண்டு உலக அரசியல்களின் பிரச்சினைகளை வலிமையாகவும் அழுத்தமாகவும் பதிவாக்க முடியும் என்பதை நிறுவும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த நூலை வாசித்து முடித்தவுடனே இவை போன்ற அசலானதொரு அரசியல் சினிமா தமிழில் ஏதாவது வந்திருக்கிறதா என்று மனம் தன்னிச்சையாக யோசித்துப் பார்த்தது. ஒரு நீண்ட பெருமூச்சை தவிர வேறு விடை ஒன்றும் கிடைக்கவில்லை.

நன்றி: காட்சிப் பிழை

Buy Now

Share.

About Author

Leave A Reply