விடுதலைப் போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்

0

அந்நிய ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டம் என்பது நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்கதாகும். இந்தியாவில் வணிகம் செய்ய வந்த இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனியும் அதனோடு போட்டியிட்டுக் கொண்டு வந்த ஃப்ரெஞ்சு, டச்சு, போர்ச்சுக்கீசிய நாடுகளின் கம்பெனிகளும் படிப்படியாகத் தங்களின் ஆளுகையை விரிவுபடுத்திக் கொண்டே வந்தபோது அவர்களின் ஆதிக்க வெறியை எதிர்த்து முதன்முதலாகக் குரல் கொடுத்து மைசூர்ப் போரில் உயிர்நீத்த மாவீரன் திப்புசுல்தான் முதல் 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கடற்படை மாலுமிகள் நடத்திய வீரஞ்செறிந்த தல்வார் போராட்டம் வரை இந்திய விடுதலைப் போராட்டம் என்பது ஈடுஇணையற்ற தியாகங்களுடன் நடை போட்ட வீர வரலாறாகும். இதனுள்ளே இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என மார்க்ஸ் குறிப்பிட்ட 1857 ஆம் ஆண்டு படைவீரர் எழுச்சி, தேபகா விவசாயிகளின் எழுச்சி, இண்டிகோ விவசாயிகள் எழுச்சி, மாப்ளாஸ் எழுச்சி, வார்லி பழங்குடியினரின் எழுச்சி என சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் வீறுகொண்டு எழுந்து அந்நிய நுகத்தடியை அகற்ற முன்வந்த தருணங்கள் எண்ணற்றவை உண்டு.
விடுதலைக்குப் பின் ஆட்சியதிகாரம் பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த வீர வரலாறுகள் அனைத்தையும் திரைக்குள் மறைத்து விட்டு ஏதோ காங்கிரஸ் கட்சி மட்டுமே ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்தது போன்றதொரு தோற்றத்தை வரலாறு என சித்தரித்து வந்துள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எழுந்த விடுதலைக்கான போர்க்குரல்கள் நாட்டின் பல பகுதிகளிலும் எழுந்தபோது அவை பல வித அமைப்புகளின் சார்பாக எழுப்பப்பட்டவை ஆகும்.
இவற்றில் பகத்சிங் தலைமையிலான ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு ராணுவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனுசீலன் சமிதி, யுகாந்தர் போன்ற ஆயுதக் குழுக்கள், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் என நாடெங்கிலும் விடுதலைப் போராட்ட உணர்வை வளர்த்தெடுத்த அமைப்புகள் ஆகும். (இவை போக இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லீம் லீக், கதார் கட்சி போன்றவையும் விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வகையில் பங்கெடுத்த அமைப்புகளாகும். இதில் விதிவிலக்கு – இந்து மகாசபை – அதன் வழிவந்த ஆர்.எஸ்.எஸ். போன்றவை பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தன.)
மிகக் கொடுமையான அடக்குமுறைக்குப் பேர்போன அந்தமான் சிறைக் கொட்டடிகளில் நிரம்பி வழிந்தவர்களில் 100க்கு 90 பேர் இத்தகைய அமைப்புகளின் உறுப்பினர்கள்தான். (அவ்வப்போது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலை பெற்று வந்த சவர்க்கார் இதில் விதிவிலக்கு) இதில் பொதுவான அம்சம் என்னவெனில் கட்சி தடை செய்யப்பட்டபோதும் சரி, தடை செய்யப்படாத போதும்சரி, தொழிலாளிகளையும், விவசாயிகளையும் அணிதிரட்டியே அந்நியர் ஆட்சியை அகற்ற முடியும் என்ற உறுதியுடன் நாட்டின் பல பகுதிகளிலும் சிதறிய வகையில் ஆங்காங்கே செயல்பட்டு வந்த  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவத்தை ஏற்றவர்களாய் இப்போராளிகள் சிறையிலிருந்து வெளியேறினார்கள் என்பதே ஆகும்.
இந்திய விடுதலையின் பொன்விழாவை ஒட்டி இவ்வாறு உருமாற்றம் பெற்ற 25 கம்யூனிஸ்டுகளின் வாழ்க்கைச் சித்திரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசி தொடராக வெளியிட்டு, பின்னர் தனியொரு நூலாக வெளிவந்தது. இந்த ஆங்கில நூல், விடுதலைப் போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள் என்ற தலைப்பில் பேரா. ஹேமா அவர்களின் சீரிய மொழிபெயர்ப்பில் தற்போது தமிழில் பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ளது.
இந்நூலில் கிழக்கிந்தியப் பகுதிகளில் செயல்பட்டு வந்த அனுசீலன் சமிதி என்ற ஆயுதக் குழுவைச் சேர்ந்த கணேஷ் கோஷ், ஹேமந்த கோஷால், பங்கிம் முகர்ஜி, சதீஷ் பக்ராஷி, நிரஞ்சன் சென்குப்தா, துர்காதாஸ் சிக்தார், யுகாந்தர் ஆயுதக் குழுவைச் சேர்ந்த அமலேந்து முகர்ஜி, பகத்சிங் தலைமையிலான ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு ராணுவத்தில் அங்கம் வகித்த பண்டிட் கிஷோரிலால், ஷிவ் வர்மா, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்த ஏ.கே. கோபாலன், கே.பி.ஜானகியம்மாள், பகவதி பாணிக்ரஹி, ஷாம்ராவ் பருலேகர், கோதாவரி பருலேகர், பி. கிருஷ்ணப் பிள்ளை, பி. ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் விடுதலைப் போராட்டங்களில் செயல்பட்ட மித்தா லால், விமல் ரணதிவே, அகல்யா ரங்கனேகர், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சமர் முகர்ஜி, புத்த மதத் துறவியாய் இருந்து பின்னர் விவசாயிகளின் இயக்கத்தைக் கட்டி வளர்த்த தத்துவ மேதை ராகுல சாங்கிருத்தியாயன் ஆகியோருடன் துவக்கத்தில் இருந்தே கம்யூனிஸத் தத்துவத்தை மேற்கொண்டு செயல்பட்ட ஜோதிபாசு, காஜி நஜ்ருல் இஸ்லாம், மேஜர் ஜெய்பால் சிங் மற்றும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ராணி ஜான்சி, பெண்கள் படைப் பிரிவிற்குத் தலைமை தாங்கிய கேப்டன் லட்சுமி செகால் ஆகியோர் அடங்கிய 25 கம்யூனிஸ்டுகளின் வாழ்க்கைச் சித்திரங்கள் இந்நூலை அழகு செய்கின்றன.
நள்ளிரவில் பெற்ற இந்திய விடுதலையானது அந்நிய ஆட்சியை மட்டுமே அகற்றியது. ஆட்சி அதிகாரம் முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமே பாதுகாப்பதாக மாறியது. 67 ஆண்டுகால விடுதலைக்குப் பின்பும் வாழ வழியின்றி, வயிற்றுக்குச் சோறின்றி கோடிக் கணக்கான மக்கள் வாடி வதங்கிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். அதே வேளையில் பொதுச்சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு வகிக்கும் அரசு இந்த மண்ணின் வளங்கள் அனைத்தையும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்த்து வரும் காட்சி தொடர்கிறது. இதில் கட்சி பேதம் ஏதுமில்லை என்பதை நாம் அனுதினமும் கண்டு வருகிறோம்.
நள்ளிரவில் பெற்ற இந்த விடுதலையும் கூட காங்கிரஸ் என்ற தனியொரு கட்சி பெற்றுத் தந்ததல்ல; கம்யூனிஸ்ட் கட்சி போன்ற எண்ணற்ற அமைப்புகள் தொடர்ந்து நடத்திய  வீரஞ்செறிந்த போராட்டங்களும் தியாகங்களும் இதில் அடங்கும் என்பதை வரும் தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் இந்நூல் அமைகிறது. இதில் கூறப்பட்டிருக்கும் 25 கம்யூனிஸ்டுகள் என்பது ஓர் உதாரணம் மட்டுமே. இவர்களைப் போன்ற எண்ணற்ற தோழர்கள் சிந்திய ரத்தமும், எழுப்பிய முழக்கங்களும் எழுத்தில் அடங்காதவை. உண்மையான வரலாற்றை இந்தத் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ள இந்நூல் நமது விடுதலைப் போராட்டத்தின் வீச்சைப் புரிந்து கொள்ள உதவியாய் அமையும். ஒரு சிறிய வேண்டுகோள்: இந்நூலின் ஒரு தொடர்ச்சியாக தோழர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற நூலை வாசிப்பது வரும் இளம் தலைமுறையினருக்கு மேலும் மிகுந்த தெளிவைத் தருவதாக அமையும் எனக் கருதுகிறேன்.

நன்றி: புத்தகம் பேசுது

Buy Now

Share.

About Author

Leave A Reply