நந்தவனம்

0

பலவகையான மலர்கள் பூத்து நறுமணம் வீசும் நந்தவனத்தை போல், தோழர் வெ.மன்னார் எழுதிய நந்தவனம் என்ற நூலும், வாசிக்கின்ற நமக்குள் பலவித சிந்தனைகளை, உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கச் செய்கின்றது. நாட்டில் மதக்கலவரங்கள் நிகழும் போது, அக்கினியை உமிழத்துடிக்கும் எரி மலையின் மீது நிற்பதை போன்ற பதற்றம் நமக்கு ஏற்படுவது இயல்பு. தற்போதைய அரசியல் சூழலில், மத்திய அரசின் அதிகார மையமாக, வகுப்பு வாத சக்திகள் இடம் பெற்றுள்ளன.

மதம் குறித்து, சுவாமி விவேகானந்தர் கூறும்போது, “மதம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது. அது சமூக விஷயங்களில் தலையிட எந்த உரிமையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், “சாமானிய மக்களின் உணவுக்கு உத்தரவாதம் தராத மற்ற அமைப்புகளைக் காட்டிலும், பாதி உணவையாவது உறுதிப்படுத்தும் தன்மை பொது உடைமை அமைப்புகளிடம் உள்ளதால் நான் ஒரு சோஷலிஸ்ட் . மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத பல்வேறு அமைப்புகளையும் பரீட்சித்து பார்த்து விட்டோம்.

இதையும் பரிபூரணமாக பரீட்சித்து பார்ப்பது தான் சரியாகும்” என்று தெரிவித்துள்ளார். அதையெல்லாம் மறந்துவிட்டு, மறுத்துவிட்டு, தற்போது வகுப்பு வாதம், அரசியல் அதிகாரத்துடன் ஒன்று சேர்ந்து, சமூகத்தையே மதவெறிக் களமாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் பங்கேற்ற குறிப்பிட்ட இயக்கங்களும், தனி நபர்களும் செய்த தியாகம் அளப்பரியவை.

1913 ல் அமெரிக்காவில் உள்ள ஆஸ்டோரியாவில் துவங்கிய கத்தார் இயக்கம் மிகப்பெரும் தியாகத்தை செய்துள்ளது. கத்தார் இயக்கம் உறுப்பினர்களை சேர்க்க அழைப்பு விடுக்கும் போது, இந்துஸ்தானத்தில் புரட்சி நடத்த, உற்சாகமும் வீரமும் கொண்ட புரட்சியாளர்கள் தேவையென்றும், இவர்களுக்கான ஊதியம் இறப்பு என்கின்ற வெகு மதியும், ஓய்வூதியமுமே;தியாகி என்கிற புகழ்பெற பணியாற்ற வேண்டும். என்று அறிவித்துள்ளது. இந்த தியாகமே அந்த அமைப்பின் அடையா ளமாக இருந்தது. புவி வெப்பமடைதல், பரு வகால மாறுதல்கள், சுற்றுப்புற சூழல் மாசடைவது என்று, உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான பிரச்சனைகளுக்குக் காரணகர்த்தாவாக இருப்பவை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளே என்று பல்வேறு ஆதாரங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவைப்படும் தண்ணீரைப் பெறுவது அவர்களின் உரிமை என்று பிரகடனப்படுத்தியுள்ளது ஐக்கிய நாடுகள் சபை. இந்தியாவில் 10 கோடி பேருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை முதலாளித்துவம் தனது லாப வேட்டைக்காக விற்பனைப் பண்டமாக மாற்றியுள்ளது. மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட போதிலும் கூட சமூகத்தில், மனித மனங்களில் சாதியம் உயிருடன் உள்ளது. தலித் மக்கள் மீது தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சாதிய அமைப்பில் ஏழ்மையில் உள்ள பஞ்சமர்கள் தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதார வளர்ச்சி இல்லாதவர்களாகவும், இருந்திட, மேல் அடுக்கில் உள்ள சூத்திரர், வைசியர், சத்திரியர், பிராமணர்கள் ஒன்றுபட்டு நிற்க எப்போதும் தயாராக உள்ளனர். சாதியடி நிலையில் உள்ள தலித் மக்கள் தான், உதிரி தொழிலாளிகளா கவும், பாட்டாளிகளாகவும் எண்ணிக்கையில் பெரும்படையாகவும் உள்ளனர். இவர்களைத் திரட்டவே தீண்டாமை எதிர்ப்பு போராட்டமும், வர்க்கப் போராட்டமும் பிணைந்துள்ளது என்று சரியாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கணித்துள்ளது. தீண்டாமையை எதிர்த்த போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தி வருகின்றது . உதிரிப் பாட்டாளிகளின் பொருளாதார கோரிக்கைகள் மற்றும் பண்பாட்டு தளங்களில் நாம் இவர்களை வென்று எடுக்க வேண்டும் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இது பரிசீலனை செய்ய வேண்டிய கருத்தாகும். தமிழறிஞர் என்று பெயர் சூட்டிக்கொண்டு, தமிழ்மண்ணில் வீறுநடை போட்ட திராவிட இயக்கங்கள், மேடையில் மைக்கிற்கு முன்பு செலவழித்த நேரத்தைக் கூட, தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தமிழ் மொழி வளர்ச்சி கண்டிட, தமிழ் படித்தவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும், அறிவியல் மொழியாக வும், அலுவல் மொழியாகவும் தமிழ் இருக்க வேண்டும். தேசத்தில் பெரும்பான்மையாக உள்ள பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிமை களாக உள்ளனர். பெண் என்ற பாரபட்சம் களைந்து, பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதே, பொது சிவில் சட்டத்தை நோக்கிய பயணமாகும். மாறாக பா.ஜ.க கொண்டுவரத்துடிக்கும் பொது சிவில் சட்டம், சிறுபான்மையின ரைக் குறிவைத்துள்ளது என்று தோழர் பிருந்தா காரத் எச்சரித்துள்ளதை நூல் சுட்டிக்காட்டியுள்ளது. 16 வது மக்களவைத் தேர்தலில் பன்னாட்டு, உள்நாட்டுப் பெரு முதலாளிகளின் சேவகனாக, பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து மோடியைப் பிரதமராக அமர்த்தியுள்ளனர். 31 விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சி, 282 இடங்களில் வெற்றிபெற்று அரியணையில் அமர்ந்துள்ளது. இடதுசாரிகள் மற்றும் பல எதிர்க்கட்சிகள் தேர்தல் சீர்திருத்தம், விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை என்று வலியுறுத்தி வருகின்றன என்பதை நூலாசிரியர் பொருத்தமாகப் பதிவு செய்துள்ளார்.நந்தவனம் கட்டுரைத் தொகுப்பு பல தரப்பினரும் படித்து உள்வாங்கி செயல்பட வேண்டிய புத்தகமாகும். இதன் ஆசிரியர் தோழர் வெ.மன்னாரையும், நூலை வெளியிட்ட பாரதி புத்தகாலயம் நிறுவனத்தையும் பாராட்டுவது வெறும் புகழ்ச்சியாகாது. ஏனெனில் சம காலத்திற்குத் தேவையான நூலாகும் இது.

நன்றி: தீக்கதிர்

Buy Now

Share.

About Author

Leave A Reply