சார்லி சாப்ளின்

0

கேரளத்தின் புகழ்பெற்ற சிறுவர் இலக்கியப் படைப்பாளியான பொதுவாலின் இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ஓவியரும், புனைவு எழுத்தாளருமான யூமா வாசுகி. இவர் சிறப்பான சிறுவர் இலக்கியங்களை மலையாளத்தில் இருந்து தொடர்ந்து மொழிபெயர்த்து வருபவர். ஒரு அரிய கலை மேதையான சார்லி சாப்ளின் குறித்த இந்த மொழிபெயர்ப்பு சரளமானதாகவும், ஒரு ஆழ்ந்த உணர்வை உருவாக்கும் விதமாகவும் உள்ளது. சிறுவர்கள் மட்டுமல்லாது அனைவரும் படித்து உத்வேகம் கொள்ளக்கூடியதாக இருக்கிறது இந்த மாபெரும் கலைஞனின் கலைப் பயணம்.

சார்லி சாப்ளின் சிறுவனாக இருந்ததிலிருந்து தொடங்கி வறுமை, புறக்கணிப்பு போன்ற பல துயரங்களின் இடையே கலைக்கான பாதையைக் கண்டறிந்து அத்துடன் பயணித்து அதன் உச்சநிலைகளை அடைந்து மரணிக்கும் வரை அவருடைய வாழ்க்கையின் பல்வேறு அரிய தருணங்களை ஒரு இயல்பான ஓட்டத்துடன் சித்தரிக்கிறது இந்த நூல். நாடக நடிகையான அவருடைய அம்மா ஹன்னாவிடமிருந்துதான் பாட்டு, கதை, நடிப்பு போன்ற எல்லா விஷயங்களையும் சார்லியும் அவரது சகோதரரும் கற்றனர். தெருவில் எதிரே கடந்து போகும் மனிதர்களுடைய நடைஉடை பாவனைகளை நன்கு கவனித்து அதை அம்மா குழந்தைகளுக்கு நடித்துக் காட்டும்போது அது சார்லியின் மனதில் ஆழப்பதிந்தது. அம்மாவைப் பின்பிற்றியே சார்லி கண்களையும் கைகளையும் சிறப்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார். அம்மாவுக்குத் தொண்டை சரியில்லாத ஒரு தருணத்தில் 5 வயதிலேயே மேடைக்குத் தள்ளப்பட்ட சார்லி, அம்மா சொல்லிக்கொடுத்த ஒரு பாட்டைப்பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தார். அப்போதே அவருடைய அசைவுகளும், முகபாவங்களும் பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவழைத்தன. அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ஒரு அழகு இருந்தது. அம்மாவிடமிருந்து அவர் கேட்ட யேசுவின் கதைதான் சகஜீவிகள் குறித்த நேசத்தை நிரந்தரமாக அவர் மனதில் பதித்தது.

அம்மாவின் உடல்நிலை கரணமாக அவர் பள்ளி வாழ்க்கையைத் தொடர முடியாமல் நாடகக்குழுவில் சேர்ந்தபோது அங்கு பல்வேறு அசைவுகளை வித்தியாசமாக நடித்துக்காட்டி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார். அச்சு எந்திரத்தின் ராட்சஸ அசைவுகூட அவருக்கு வேடிக்கையானதாக இருந்திருக்கிறது. வழக்கமான நகைச்சுவை பாணிகளை புறக்கணித்து ‘ஒரு வழியில் முன்னேறிக் கொண்டிருக்கிற ஒரு கருத்து முற்றிலும் நேர்மாறான மற்றொரு கருத்துடன் மோதும்போது அதிலிருந்து உருவானது நல்ல நகைச்சுவையாக இருக்கும்’ என்பதே அவருடைய வரையறையாக இருந்தது. சார்லி ஒரு காட்சியில் ஒரு பெரிய மனிதராக நாற்காலிக்கு பதில் பூனையின் மீது அமர்வார். இப்படி ஒரு வினோதமான முரண்தான் அவருடைய நகைச்சுவையின் அடிப்படையாக இருந்தது. வசனங்களுக்கு பதிலாக மௌனப்படங்கள் மூலமாக நகைச்சுவையில் ஒரு பெரிய ரசனை மாற்றத்தை உருவாக்கினார். பார்வையாளர்களை ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைத்து கேமிராவின் எல்லையற்ற சாத்தியப்பாடுகள் மூலம் சினிமாவை ஒரு இணையற்ற கலை அனுபவமாக மாற்றினார். Making a Living Kids Auto Race at Vencie, The Kid, The Gold Rush சுரளா ஆகிய படங்களிலிருந்து தான் அவருடைய புகழ்பெற்ற நாடோடி பாத்திரம் உருவானது. அந்த வேடத்தின் மூலம் அவர் சொல்ல நினைப்பது ‘ஒரு நாடோடி கனவில் வாழ்பவன். காதலைப்பற்றியும், வீர தீர பராக்கிரமங்கள் பற்றியும் கனவுகள் கண்டு திரிகிற தனிமையான ஒருவன். அவன் விஞ்ஞானி, இசைஞன், போலோ விளையாட்டுக்காரன். அவன் ஒரு பிரபுமாவான். ஆயினும் கீழே கிடக்கும் துண்டு சிகரெட்டுகளை பொறுக்கி புகைப்பான்’ இவ்விதம் முரண்களை இணைப்பதிலிருந்து தற்செயலாக உருவானது அவர் நகைச்சுவை.

அவருடைய எல்லாப் படங்களிலும் அவருடைய சொந்த வாழ்க்கையின் ஏதாவது ஒரு அம்சம் இடம் பெற்றிருக்கும். அவருடைய நடைகூட அவர் சிறுவயதில் பார்த்த ஊனமுற்ற பரந்த கால் கொண்ட ஒரு குதிரைக்காரனின் நடைதான். அமைதியற்ற மணவாழ்க்கைக்கு நடுவிலும் அவர் மாடர்ன் டைம்ஸ், சிட்டி லைட்ஸ் போன்ற உன்னதமான மௌனப்படங்களை அளித்தார். காந்தியின் போராட்ட முறையால் ஈர்க்கப்பட்டு அவரை சந்தித்தபோது அவருடைய இயந்திர எதிர்ப்புக்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டார். சார்லியின் மாடர்ன் டைம்ஸ் படமும் இயந்திரங்களின் சர்வாதிகாரத்தைக் கேலி செய்யும் படம் தான். அதனால் தொழிலாளர் வாழ்க்கை சீர்குலைவதை தன்னுடைய படங்களில் எடுத்துக்காட்டினார். இதனால் தேச விரோதி, கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் உலக அரங்கில் தன்னுடைய போர் எதிர்ப்பு, சர்வாதிகார எதிர்ப்பு ஆகியவற்றுக்கு ஆதரவான அலைகளைப் பரப்பினார்.

ஹிட்லரை விமர்சித்தும், யுத்தத்தின் வெறுமையை உணர்த்தியும் எடுக்கப்பட்ட அவருடைய படம் நவீன சினிமாவுக்கு சார்லிசாப்ளின் அளித்த மிகப்பெரும் கொடை. ஹிட்லரின் மறு உருவமாகவும், ஏழை பார்பராகவும் சார்லிசாப்ளின் உருவாக்கிய அந்த சித்திரம் ஒரு கலைஞனின் மாபெரும் மனசாட்சியின் குரல். ஹிட்லரின் வேஷத்தில் ஒரு எதிர்பாராத தருணத்தில் பார்பர் இடம் மாறி ஜனநாயகம் மற்றும் மனித இருப்பு பற்றி ஒரு மாபெரும் உரை நிகழ்த்துகிறான். அந்த உரை கட்டற்ற மனித அன்பின் பெரும் பிரவாகம். படத்தின் சிகரமான அந்தத் தருணம் ஒரு உன்னத கலைப்படைப்பின் அறச்சீற்றமாக உலகை உலுக்கியது. கடைசியில் அவருடைய அம்மாவின் துயரப் படிமத்தையும் அது கொண்டிருந்தது. அமெரிக்க மக்களாலேயே அவர் கொண்டாடப்பட்ட நிலை இறுதியில் உருவானது. அழகைப் பற்றிப் பேச யாருக்கும் தகுதி உண்டு என்பதுதான் அங்கு ஒலித்த அவரது குரல்.

இந்த நூலில் பெறப்படும் இத்தகைய சித்திரங்களை ஈடுபாட்டுடன் மொழிபெயர்த்து அளித்த யூமா வாசுகி பாராட்டுக்குரியவர்.

நன்றி: புத்தகம் பேசுது

Buy Now

Share.

About Author

Leave A Reply