களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

0

‘களப் பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற இந்தப் புத்தகம் ஓர் சாதனை என்று சொன்னால் அது கொஞ்சம் மிகையாக உங்களுக்குத் தோன்றக் கூடும். நிச்சயமாக மிகையில்லை. தலைவர்களைப் பற்றித் தொண்டர்கள் எழுதிய ஆயிரமாயிரம் புத்தகங்கள் உள்ளன.

ஆனால் எளிய தொண்டர்களின் வாழ்க்கை வரலாறுகளை விவரித்துத் தலைவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா ? அதை அந்தத் தொண்டர்கள் படித்து நெஞ்சம் நெகிழ்வதையும், இளைய தலைமுறையினர் படித்து எழுச்சி அடைவதையும் நீங்கள் கண்டதுண்டா? அந்த வகையில் இதுவே முதல் புத்தகம். நான் அறிந்த வரையில். தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்று விவரங்களைத் தேடித் தேடிச் சேகரித்தும், சேகரிக்கச்செய்து பெற்றும் இதை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன்.

ஏராளமான தொண்டர்களைப் பற்றி இதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் சுருக்கமான வாழ்க்கை வரலாறு என்ற வகையில் 54 தோழர்களின் எழுச்சியூட்டும் வரலாறுகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இவர்களில் ஒருவர் கூட அனைத்திந்தியத் தலைவரோ, மாநிலத் தலைவரோ இல்லை. ஒரே ஒரு மாவட்டச் செயலாளர் தவிர மற்ற அனைவரும் மாவட்டக் குழு, இடைக் குழு, கிளை ஆகியவற்றின் உறுப்பினர்கள்தான். அனைவரும் சராசரியாக 58 ஆண்டுக் காலம் கட்சிப் பணி ஆற்றி வருபவர்கள். இவர்களின் சராசரி வயது 77. மூன்று தோழர்கள் மட்டுமே பட்டதாரிகள். மற்ற அனைவரும் ஏறத்தாழ 5 ம் வகுப்பு மட்டுமே படித்தவர்கள்.

இவர்களின் வர்க்கப் பின்னணி என்ற வகையில் பார்த்தால் தொழிலாளி வர்க்கத் தோழர்கள் 25 பேர், விவசாயத் தொழிலாளி வர்க்கத் தோழர்கள் 8 பேர். விவசாய வர்க்கத் தோழர்கள் 6 பேர். நடுத்தர வர்க்கத் தோழர்கள் 7 பேர். மற்ற 8 தோழர்களைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் சாதி, மதம் பார்ப்பதில்லை. எனினும் இன்றைய சூழ்நிலைக்கேற்ப அவை பற்றியும் கணிசமான விவரங்கள் இந்தப் புத்தகத்தில் அளிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 54 தோழர்களில் தலித் வகுப்பு 8 பேர். பழங்குடி ஒருவர். முன்னேறிய வகுப்பு 3 பேர். முஸ்லிம் மதத்தினர் 4 பேர்.. மீதியுள்ள 38 தோழர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தோர் என்றே தெரிகிறது. பெண்களின் போராட்ட வரலாறு புறக்கணிக்கப்படுவதே கசப்பான, பொதுவான உண்மை நிலைமை. இந்தப் புத்தகம் அதிலும் மாறுபட்டு, கணிசமான அளவுக்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளது. பெண் தோழர்கள் 6 பேரின் போற்றத்தக்க வரலாறுகள் இதில் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் மட்டும் என்று இல்லாமல் பரவலான முறையில், மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 24 மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் புதுவையைச் சேர்ந்த தோழர் ஒருவர் ஆகியோரின் வரலாறுகள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. இந்த மாவட்டம் என்று சொல்ல முடியாமல் பல மாவட்டங்களிலும், புதுவையிலும் முழுநேர இயக்கப்பணியாற்றி, இப்போது சென்னையில் 88 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் தோழர் கே. வைத்தியநாதனின் தியாக வரலாறும் இடம் பெற்றுள்ளது.

இந்த 54 தோழர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவருமே போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்ற தோழர்கள்தான். சிறை, சித்ரவதை, இழப்புகள் எதற்கும் அஞ்சாமல் இப்போதும் இயக்கப் பணி ஆற்றி வரும் இவர்களது வாழ்க்கை வரலாறு சிலிர்க்கவைக்கிறது.

இதோ, சிலிர்க்க வைக்கும் சில வரலாறுகளைப் பாருங்கள்.

“கோவிந்தம்மாள் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது; ஆனால் கொடுவா கோவிந்தம்மா என்று கேட்டால் ஊருக்கே தெரியும் ! இந்த அடைமொழி அவருடைய அளப்பரிய துணிச்சலுக்குக் கிடைத்த பரிசு ! அந்தத் துணிவு மிகு தோழர் கொடுவா கோவிந்தம்மா கோவை மாவட்டம் வெள்ளலூரில் வசித்து வருகிறார். வயது 85 க்கு மேல். கட்சி உறுப்பினராக உள்ள இவர் இந்த வயதிலும் இயக்கப்பணியாற்றி வருகிறார்.Ó

“யாராக இருந்தாலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு டப்பு டப்புன்னு பேசிவிடுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன். தகராறு வந்தப்ப நான் கத்தி வச்சிருக்கேன்னு சொல்லி என் மேல பொய்க் கேஸ் கொடுத்தாங்க. அப்பயிருந்தே என்னைக் கொடுவா கோவிந்தம்மான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க” என்கிறார் கோவிந்தம்மா.

அவர் 1940 ம் ஆண்டுகளில் பஞ்சாலையில் வேலை பார்த்தார். உடன் பணியாற்றிய வெள்ளியங்கிரியைக் காதலித்து மணந்தார். இருவரும் செங்கொடிச் சங்கத்திலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினர்கள். இருவரும் இயக்கத்திலிருந்து விலகி, முதலாளி ஆதரவுச் சங்கத்தில் சேரவேண்டும் என்று மிரட்டப்பட்டார்கள். இவர்கள் துணிச்சலாக, உறுதியாக மறுத்துவிட்டார்கள்.

ஒரு நாள் முதலாளியின் அடியாட்கள் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிக்குள் திடீரென்று புகுந்தார்கள். இயக்கம் சார்ந்த குடும்பத்தினரைத் தாக்கினார்கள். கோவிந்தம்மாளையும் அவரது கணவரையும் சூழ்ந்து கொண்டு அரிவாளால் வெட்டினார்கள். இருவரும் இறந்துவிட்டதாகக் கருதி, சென்றுவிட்டார்கள். தகவல் கிடத்ததும் கட்சித் தலைவர்களும் மற்ற தோழர்களும் அங்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சைக்குப் பின் வேலைக்குச் சென்ற கோவிந்தம்மாவுக்கு வேலை மறுக்கப்பட்டது. மற்ற ஆலைகளிலும் இவரது பெயரைக் கேட்டதுமே வேலை தர மறுத்துவிட்டார்கள். பிறகு பொன்னம்மாள் என்று பெயரை மாற்றிக் கொண்டு ஒரு ஆலையில் வேலைக்குச் சேர்ந்து, ஓய்வு பெறுகிற வரையில் அங்கு வேலை செய்தார்!

அப்போது தொடங்கிய போராட்ட வாழ்க்கை இப்போது வரை நீடிக்கிறது.

தோழர் எஸ்.எம்.கண்ணன். தருமபுரி மாவட்டம். தலித் சமூகத்தைச் சேர்ந்த போராளி. இப்போது வயது 86 க்கு மேல். ஏற்றுக் கொண்ட லட்சியங்களுக்காகத் தனது வாழ்நாளில் 5 ஆண்டுகளைச் சிறையிலும், 2 ஆண்டுகளைத் தலைமறைவிலும் கழித்த தீரர். கம்யூனிஸ்ட் கட்சியில் 1947 ம் ஆண்டில் சேர்ந்தார். அடுத்த ஆண்டிலேயே கட்சி தடை செய்யப்படுகிறது. தோழர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட 27 பேர் மீது சேலம் ரயில் சதி வழக்கு பாய்கிறது. அந்தத் தோழர்களில் கண்ணனும் ஒருவர். அவரும் மற்ற பல தோழர்களும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறுவனாக இருந்த கண்ணன் முதலில் பாளையங்கோட்டைச் சிறையிலும் பிறகு சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறைக்குள்ளும் போராட்டம் தொடர்ந்தது. போலீசின் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 22 தோழர்கள் இறந்தார்கள். அதைக் கண்டும் அஞ்சாமல் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துப் பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள் தோழர்கள்.

தோழர் கண்ணன் விடுதலையான பிறகும் விதம் விதமான களங்களில் போராட்டத்தைத் தொடர்ந்தார். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்க நடந்த போராட்டம், பிரபலமான வாச்சாத்தி மலைவாழ் மக்கள் நீதி கோரி நடத்திய போராட்டம், வகை வகையான தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்துக்கட்ட நடந்த போராட்டங்கள், நீர்ப் பாசனத்துக்காக நடந்த போராட்டங்கள் என்று போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்து வருகிறார் போராளி கண்ணன்.

சேலம் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தோழர் காவேரி. அப்போது அவரது மகன் தோழர் சேஷாச்சலமும் அவருடன் சிறையில் இருந்தார். தந்தையின் மரணம் கூட சேஷாச்சலத்தைத் தளரச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வரும் தோழருக்கு இப்போது வயது 82 க்கு மேல்.

இவர்களைப் போலவே தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய, தேவர் சமூகத்தைச் சேர்ந்த தோழர் மூக்கையன், அவசரநிலைக் காலத்தில் போலீசாரின் சித்திரவதைக்கு ஆளான பிறகும் குடும்பத்தோடு கட்சிப் பணி ஆற்றி வரும் தோழர் சுல்தான், சிறு வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத போதும், இன்றைக்கு 73 வயதைக் கடந்த பிறகும், மூன்று சக்கர வாகனத்தில் வீடு வீடாகச் சென்று தீக்கதிர் விநியோகித்து வரும் தோழர் மாணிக்கம், மூன்று தலைமுறைகளாக இயக்கப்பணி செய்து வரும் தோழர் தீக்கதிர் நாராயணனின் குடும்பத்தினர்!

இதோ, 11 வயதுச் சிறுவன் பிடல் காஸ்ட்ரோ ! வாலிபர் சங்கம் நடத்திய நடைப் பயணத்தில் கலந்து கொண்டு, தந்தை சிவ.முருகனோடு சேர்ந்து 500 கிலோ மீட்டர் நடந்து சென்று பிரச்சாரம் செய்த இளம் போராளி!

அடடா! எத்தனை எத்தனை தோழர்கள்! என்னென்ன தியாகங்கள்!

“இத்தகைய தோழர்களின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்கிற போது, இவர்கள் இருக்கிற கட்சியில் நாம் இருக்கிறோம் என்ற பெருமையே மேலோங்குகிறது” என்று தனது முன்னுரையில் சொல்கிறார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். முற்றிலும் உண்மை. குடத்தில் இட்ட விளக்காக இருந்த தோழர்களைக் குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளிரச் செய்த தோழர் ஜி.ராமகிருஷ்ணன், நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கு உரியவர் என்பதில் சந்தேகம் இல்லை.

நன்றி: புத்தகம் பேசுது

 Buy Now

Share.

About Author

Leave A Reply