இலங்கை தமிழர் பிரச்சனைஒரு துயரத்தின் வரலாறு

0

1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ந்தேதி இலங்கை விடுதலை பெற்ற காலத்திலிருந்து 2009ம் ஆண்டு ராணுவம் – எல்டிடிஇ இடையே மோதல் முற்றி முடிந்தவரையிலான வரலாறு சுருக்கமாக நூலில் சொல்லப்பட்டுள்ளது.‘விடுதலைக்குப் பிறகு இலங்கை’ என்பதில் தொடங்கி ‘தனி ஈழம் மார்க்சிய வழிகாட்டுதலா?’ என்பது ஈறாக 26 தலைப்புகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனையும், போராட்டங்களும் அரசு நடவடிக்கைகளும், இரக்கமற்ற அழித்தொழிப்புகளும் அராஜக ஆட்சி ஆதிகாரங்களும், தந்திரமில்லாத எல்டிடிஇ போர் நடவடிக்கைகளும் பற்றி இந்தக் கட்டுரைகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசுகின்றன.

உரிமைகள் மறுக்கப்படும் போது அவற்றை மீட்பதற்காக இயக்கங்கள் முளைவிடுவதும் வளர்வதும் தவிர்க்க இயலாதவை. ஆனால் அவற்றுக்கு வழிகாட்டி உரிமைகளை வென்றெடுக்கும் தந்திரம் இயக்கத் தலைமைக்கு இல்லாமல் போனால் நிலைமை என்னவாகும் என்ற கேள்விக்கு விடையாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

1970 முதல் 80 வரையிலான காலகட்டம் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அரசியல் சூடாக இருந்த காலகட்டம். இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிப்பு; பாகிஸ்தானிலிருந்து கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து செல்வதற்கான போராட்டம் என்பவற்றோடு இலங்கை அரசியல் பிரச்சனையையும் இணைத்துப் பார்க்கும் பார்வை தேவைப்படுகிறது.1972ம் ஆண்டு உருவான தமிழ் புதிய புலிகள் பின்னர் 1976ல் எல்டிடிஇயாக உருப்பெறுகிறது.

தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம் என்ற பருப்பொருளை எல்டிடிஇ எடுத்துக் கொண்டகாலத்தில் தான் சிங்களப்பகுதியில் வாழ்வுரிமைக்காக ஜேவிபி தலைமையில் இளைஞர்களின் போராட்டம் வெடித்தது. ஆனால் இந்தியாவின் உதவியோடு அது ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.இதுபோன்ற படிப்பினைகளை எல்டிடிஇ தலைமைஎடுத்துக் கொள்ளாத சோகம் நூலின் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு நாடு சிறியதாயினும் பெரியதாயினும் கொள்கை நிலையை நிர்வாக முறையை ஆளும் வர்க்கம் தான் தீர்மானிக்கிறது. அது பெரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கமாக இருக்கும் போது ஜனநாயகம், சமத்துவம், மனிதநேயம், மக்கள் ஒற்றுமை, உரிமைகள் பாதுகாப்பு என்ற பூக்கள் பூத்துவிடாது. சுண்டைக்காய், நாட்டு சுரைக்காய் நாடு என்ற பேதமெல்லாம் இதற்குக் கிடையாது. இந்தப் பூக்கள் மலர வேண்டும் என்றால் சமூக சீர்திருத்த முற்போக்கு எண்ணம் கொண்ட மக்கள் திரள் சாதி, மதம், இனம், மொழி, நிறம் என பேதமின்றி வெகுண்டெழ வேண்டும். சோஷலிச அரசமைக்க மட்டுமல்ல; ஒரு ஜனநாயக அரசு அமையவே கூட இது முக்கியம் என்ற படிப்பினை தேவை. இதை உணராத இயக்கங்கள் எத்தனை வலுவுடையதாக இருந்தாலும் காலப்போக்கில் கரைந்து விடும்; கையறு நிலைக்குத் தள்ளப்படும் என்பதற்கு ஏராளமான வரலாற்று உதாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாகவே இலங்கையையும் பார்க்க வேண்டியுள்ளது என்பதை இந்நூலின் கட்டுரைகள் உணர்த்துகின்றன.மக்கள் மொழியால் இனம் காணப்பட்டாலும் வர்க்கத்தாலும் ஒன்றுபடவேண்டும், ஆளும் வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகிவிடக் கூடாது. போராட்டம் போராட்டத்துக்காக அல்ல; புத்துலகைப் படைப்பதற்காக எனும்போது போராட்ட முறைகளைப் பொருத்தமாகக் கையாள வேண்டும் என்பதும் சில எடுத்துக்காட்டுகளுடன் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது

.1987 க்குப் பிறகான புறச்சூழல்கள் – சோவியத்யூனியன் பின்னடைவு – அதில் ஒன்றிலிருந்து பிரிந்தமை, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சிதைவு போன்றவையும் எல்டிடிஇ-யின் தனிநாடு எனும் தாகத்தை அதிகரித்திருக்கக் கூடும்.ஆனால் 1991க்குப் பிறகான உலகின் அரசியல் பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட பெருமளவு மாற்றம் எல்டிடிஇயினரால் கணக்கில் கொள்ளப்படவில்லை. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திகொலை, பத்மநாபா கொலை போன்றவை அதற்கான தமிழக ஆதரவுத் தளத்தை அரித்துவிட்டது என்பது எதார்த்தம்.

40 ஆயிரத்திற்கும் ஆதிகமான தமிழர்களைக் கொன்றொழித்த, பல ஆயிரம் இளைஞர்களைக் காணாமல் செய்த இலங்கையின் இறுதிப்போர் அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவைப் போர்க்குற்றவாளி ஆக்கியிருக்கிறது. தமிழர்கள் வாழ்வுரிமையை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி தூக்கி விட வேண்டிய தமிழக அரசியல் கட்சிகள் அதிதீவிரமாக உறவைத் துண்டித்திடுக போன்ற முழக்கங்களை முன்வைக்கின்றன. உணர்ச்சிவயப்பட்ட முழக்கங்கள் இலங்கைத் தமிழர்கள் இன்றையச் சூழலிலிருந்து விடுபடஉதவுமா?இந்தப்பிரச்சனையிலும் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி தோழர் குணசேரன் ஆழமாக கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் எளிமையாக நேர்மையாக மார்க்சிய சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல் மிகவும் பயனுடையது. இலங்கைப் பிரச்சனை பற்றிய புரிதலை உருவாக்கிக் கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.இறுதியாக மக்கள் எழுச்சிக்கு அரபு வசந்தத்தை எடுத்துக்காட்டாக்கியிருப்பது சற்று நெருடலாக இருக்கிறது.

நன்றி: தீக்கதிர்

Buy Now

Share.

About Author

Leave A Reply