மன்மோகன் , ப.சி. இந்நூலைப் படிக்க சிபாரிசு செய்கிறோம்

0

சு. பொ. அகத்தியலிங்கம்

இந்தியாவில் பொருளாதார தேசி யத்தின் தோற்றமும் வளர்ச்சி யும் : இந்திய தேசியத் தலைமை யின் பொருளாதாரக் கொள்கைகள் 1880 – 1905 என்கிற பிபன் சந்திராவின் 672 பக்க நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் – ஏன் ஒவ்வொரு வரியையும் வாசிக்கும்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதி அமைச் சர் சிதம்பரமும் இன்னபிற நாடாளும் தலைவர்களும் இப்படி இந்திய மக்கள் மீதும் இந்திய தேசத்தின் மீதும் அக்கறை கொள்ளவில்லையே என கோபம் பொங்குகிறது . அன்று தாதாபாய் நெளரோஜி , ரானடே , ஆர்.சி.தத் , கோகலே, ஜோஷி, சுப்பிரமணிய ஐயர் போன்ற தலைவர்கள் பிசிறில்லாமல் ஊசலாட்டம் இல்லாமல் இந்திய மக்களின் ஒட்டுமொத்த நலன் என் கிற பரந்த தெளிவான கூர்மையான பார்வை யோடு அறிவுத்தளத்தில் இயங்கியதை படிக் கிறபோது இன்றைய தலைவர்களிடம் அத்தகைய தேசபக்த உறுதி இல்லையே என்கிற சினத்தை கொம்பு சீவுகிறது இந் நூல்.வரலாற்றை படிக்க வேண்டாம் என்று ராஜீவ் காந்தி ஒருமுறை சொன்னது இப் படி நாம் உண்மையை அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தானோ!

27 க்கும் மேற்பட்ட பத்திரிகைகளின் வெளிச்சத்தில் – தலைவர்கள் உரைகள், கட்டுரைகள் உள்ளிட்ட 2665 மேற்கோள் களுடன் – ஒவ்வொரு வார்த்தையையும் தக்க ஆதாரப்பூர்வ ஆவண வரிகளுடன் எழுதப்பட்ட இந்நூல், இந்திய தேசியம் என்ற கருத்து மக்களை கவ்விப்பிடித்து இயற்பியல் சக்தியாக மாற விதைதூவப் பட்ட ஆரம்பகால வரலாற்றை பழுதறப் பேசுகிறது.

வெற்றியை உடனடி லாபங்களால் அளவிட முடியாதபட்சத்தில்,இக்கால கட்டத்தில் தேசியத்தலைவர்கள் சாதித் தவை ஏராளம் . இந்திய மக்கள் பொது வான பொருளாதார நலன் உள்ளவர்களாக , பொதுவான எதிரி இருப்பவர்களாக உணரச்செய்து அவர்களை ஒரு பொது வான தேசியத்தில் இணைத்தார்கள் என்று வார்த்தை அலங்காரமாக போகிறபோக் கில் சொல்லிச் செல்லாமல் வலுவான தர்க்க வாதங்கள் ஆதாரங்களோடு நிறுவியுள்ளார்.

இந்தியாவில் வறுமை , தொழில் , அயல் நாட்டுவர்த்தகம்,ரயில்வே , வரிக்கொள்கை , பணமும் பரிவர்த்தனையும் , தொழிலாளர்கள், விவசாயம், பொதுநிதி, செல்வம் வடிந்து செல்லுதல்  என  12 அத்தியாயங்களில் விரிவாக ஆராய்ந்து விட்டு இந்திய பொருளாதாரம், பொருளாதார தேசியம் என முத்தாய்ப்பாய் கடைசியாக 13,14 வது அத்தியாயங்களை தந்துள்ளார் நூலாசிரியர் . பேரா.கா. அ.மணிக் குமார் எழுதிய காலனிய இந்தியப் பொருளா தாரம் : ஓர் அறிமுகம் என்கிற – தமிழ் பதிப் பிற்காக இணைக்கப்பட்ட முன்னொட்டு ஆழ்ந்த வாசிப்புக்குரியது.

வயிறார உணவும் சிறிது நீதியும் கிடைத் தால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் திருப்தியோடு வாழ மக்கள் தயார் என நிலைமையின் கடு மையை அம்ரித பஜார் பத்ரிகா எழுதியது மிகையல்ல ;…. இந்திய மக்களின் நிலைமை மோசமானது , இரங்கத்தக்கது , விலங்குகளுக் கும் கீழானது, …இந்தியர்கள் பட்டினியில் வாழ் வதாக , வெறுக்கத்தக்க , கீழான, அஞ்சி ஒடுங் கத்தக்க வறுமையில் உழல்வதாக.. இந்திய பத்திரிகைகள் விடாமல் தினந்தோறும் வாரந் தோறும் எழுதின என்பதை நூலாசிரியர் மிகச் சரியாகச் சுட்டுகிறார்.

பஞ்சங்களின் கார ணம் விளைச்சல் இல்லாதது அல்ல இருக்கக் கூடிய உணவு தானியத்தை வாங்க வசதி இல்லாததுதான் என்பதை அன்றைய ஏடுகள் எடுத்து இயம்பின . தலைவர்கள் உரக்கச் சொன்னார்கள். ஆனால் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைபற்றி அலட் டிக்கொள்ளாமல் பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் பற்றியே கவலை கொள்ளும் இன்றைய ஊடகங்களை தலைவர்களை நினைக்கத் தோன்றுகிறது.

விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் நாடு நிச்சயம் ஏழையாகத்தான் இருக்கும் என்பதை மிகச்சரியாக புரிந்த தலைவர்கள் தொழில் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வமும் அக்கறையும் காட்டினார்கள் ; அதே சமயம்  இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை பெற்றதன் ஒரு முக்கியமான விளைவு , இந்திய நகர்ப்புற கைத்தொழில்களும் , கிராமப்புற சிறு தொழில்களும் குறைந்து , அழிந்து பல நூற் றாண்டுகளாகப் பிணைத்திருந்த விவசாயம், உற்பத்தி தொழில்களை பாதித்ததாகும் என்ப துடன் , முன்பு தங்கள் அரசியல் அடிமைத் தனத்தால் பிரிட்டிஷுக்கு உதவிய இந்தியா இப்போது பொருளாதார அடிமைத்தனத் தால் உதவிக் கொண்டிருக்கிறது  எனவும் நூலாசிரியர் நிறுவுகிறார்.

இந்திய தொழில் களை பின்தங்கிய நிலையில் வைத்து அவற்றின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யாமல் இருப்பதுதான் இங்கிலீஷ் தேசத்தின் நோக்கம். இதன் மூலம் அவர்களது உற்பத்திகளுக்கு எல்லையற்ற இந்தியச் சந்தை கிடைக்கும்…என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.

இந்தியாவின் வர்த்தகத்தை ஒரு இயல் பான அடிப்படையில் அதாவது , அதன் வளர்ந்து வரும் மக்கள் தொகை காரணமாக ஏற்பட் டுள்ள பெரிய எல்லையற்ற சந்தையை , அதன் உள்நாட்டுத் தொழில்களால் , பொருட்களால் நிரப்பி , உபரியாக உள்ளதை வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்து , அதற்குப் பதில் இங்கு உற்பத்தி செய்ய முடியாதவற்றை இறக்குமதி செய்யுமாறு அமைக்க வேண்டும் . இதுதான் எதிர்கால இந்தியாவிற்கு ஏற்படப் போகும் பொருளாதாரச் சீரழிவிலிருந்து தப்பிக்கும் ஒரே வழியாகும்  – இது 1901ல் காங்கிரஸ் மாநாட் டில் ஜி.சுப்ரமணிய ஐயர் கூறிய மாற்று . இன்று இதனை மன்மோகனுக்கும் ப.சி .க்கும் எப்படி புரியவைப்பது ?

… நாம் போராட வேண்டிய அம்சம் இந்தியா, இந்தியர்களின் நலனுக்காக ஆளப் பட வேண்டுமா? அல்லது இங்கிலாந்தின் நல னுக்காக ஆளப்பட வேண்டுமா? என்பதுதான் என அன்றையத் தலைவர்கள் குமுறினார்கள். ஆனால் இப்போது இந்தியா அமெரிக்க நலனுக்காக ஆளப்படுவதை நம் அன்றைய தியாகத்தலைவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருப்பார்களா ?  …நாட்டின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் இன்னும் காலத்தின் கருப்பையில்தான் இருந்த அன் றையச் சூழலில் அதனை விதைக்க பொருளா தார விஷயங்களை தலைவர்கள் அன்று நுட் பமாகக் கையாண்டார்கள். வறுமை , தொழில் வளர்ச்சியின்மை , செல்வ வடிதல் போன்ற வற்றை விவரித்து அரசியல் விழிப்புணர்வுக்கு விதைதூவியதை இந்நூல் விரிவாக பதிவு செய்துள்ளது.

உலகமெங்கும் சுயமுன்னேற்றத்தின் உந்து சக்தி சுயநலம்தான்.தன்னலமற்ற வேதாந்தத் தில் ஊறிய நாட்டிலும் மனித இயல்பு வேறு மாதிரியாக இருக்க முடியாது . கரும்பாறைகள் உள்ள இடத்தையும் ஒருவனுக்கு சொந்தமா கக் கொடுத்தால் அவன் அதனைத் தோட் டமாக்கி விடுவான் . இது பிரான்சிலும் நார் வேயிலும் உண்மை என்றால் இந்தியாவிலும் உண்மைதான்.இன்று விவசாயிகள் அக் கறையின்றி இருப்பதை மாற்ற அவன் உழும் நிலத்தை அவனுக்கே உரியதாக்கி அதன் பலன் களும் அவனுக்கே என்று கூறுவதைவிட நல்ல வழி ஏதுமில்லை. என்றார் அன்று ஜோஷி இன்றும் அதுவே உண்மை. பிரச்சனையின் ஊற்றுமையத்தை அடையாளம் காட்டியது அன்றைய தேசியத் தலைமை . ஆனால் விடு தலை பாரதம் பெரிதும் மறந்த வழியன்றோ  (வங்கம் கேரளம் தவிர்த்து). வரிக்கொடுமை குறிப்பாக நிலவரியின் கொடுமை குறித்து இந்நூல் அழுத்தமாகப் பேசுகிறது . பொழுதெலாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ என்றான் பாரதி. அந்த செல்வவடிதல் பற்றி அன்றைய தலைவர்கள் பேசியதும் எழுதியதும் பத்திரிகைகள் சீரிய தும் இரத்தமும் சதையுமாய் இந்நூலில் உள் ளது. அந்நிய ஆட்சிதான் அனைத்துக்கும் கார ணம் என்கிற கோபவெடிப்பு நூல் நெடுக விர விக்கிடக்கிறது.

பழங்காலத்தில் நாட்டின் செல்வம் வெளியே செல்லவில்லை.முகலாயர்களும் மராட்டியர்களும் மக்களை கொள்ளையடித் திருக்கலாம் எனினும் அவர்கள் செல்வம் இங்குதான் இருந்தது. இங்குதான் செலவிடப் பட்டது. தனிப்பட்ட குடிமகன் துன்பப் பட்டிருக்கலாம் , நசுக்கப்பட்டிருக்கலாம் , செல்வத்தை இழந்திருக்கலாம் ஆனால் ஒட்டு மொத்தமாக நாடு எதையும் இழக்கவில்லை . ஒரு குடிமகனின் இழப்பு மற்றவனின் செல் வமாக மாறியது . மாறாக பிரிட்டிஷார்  செல் வத்தை இங்கிருந்து கொண்டு சென்று வெளி நாட்டில் செலவு செய்தார்கள் . நாதிர்ஷா போன்றோர் வந்து கொள்ளையடித்துச் சென்றபோதும் , அந்த இழப்பு தற்காலிக மானது தான் . அடி விழுந்தது . அதோடு விஷயம் முடிந் தது .மேலும் அந்த அடியும் எப்போதாவது தான் விழுந்தது . பிரிட்டிஷ் ஆட்சியைப் பொறுத்தவரையில் செல்வ வடிதல் என்பது நிலவி வரும் அரசு அமைப்பில் ஒரு பகுதி. எனவே அது தடையற்றது . தொடர்ச்சியா னது . ஆண்டுதோறும் அதிகரிப்பது. எனவே இது ஆறாத புண் போன்றது. இப்படி வெடித் து குமுறியதில் உண்மை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பெருந்தீமையே செல்வ வடி தலே என தலைவர்கள் ஆகச்சரியாகச் சுட் டிக்காட்டினார்கள்.

நிரந்தரத் தீர்வையா ? வரியா ? ஏற்று மதியா ? இறக்குமதியா ? செலவினமா ? வறு மையா ? செழிப்பா ? செல்வ வடிதலா ? என எதைப் பேசினாலும் ; அது பெருவாரியான இந்திய மக்களுக்கு நன்மை பயக்குமா ? தீமை பயக்குமா ? என்கிற ஒரே நேர்மையான எளி மையான உரைகல்லிலேயே உரைத்துப் பார்த்தனர் அன்றைய தலைவர்கள் . இன் றைய தலைவர்கள் அப்படி உரசிப்பார்க்க ஒரு கணம் துணிந்தால் தாங்கள் பயணிக்கும் பாதை தவறென்பதை உணர்வர்.

வர்க்கப் பிரச்சனைகளில் ஏற்பட்ட சில தயக்கங்களும் கூட அன்றைக்கு பொதுப் பார்வையின் வழுவே தவிர வேறல்ல . அந்நிய ஏகாதிபத்தியத்தை அதன் பொருளாதாரச் சுரண்டலை கண்டு பொங்கியவர்கள் அன்றைய தலைவர்கள். அதன் சாட்சியம் இந்நூல் நெடுக பதிவாகியுள்ளது.மிதவாதிகளும் தங் கள் அறிவார்ந்த விவாதத்தினூடே தீவிரவா திகளாக மாறினார்கள் என்பதை நூலாசி ரியர் உறுதி செய்கிறார்.பொருளாதாரப் பின் புலத்தில் எவ்வாறு இந்திய தேசியம் கட்ட மைக்கப் பட்டு எழுப்பப்பட்டது என்பதை இந்நூல் விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது. யதார்த்தமாகிவிட்ட இந்திய அரசியல் தேசியம் என்பதை இடது கோடியிலிருந் தும் வலது கோடியிலிருந்தும் எதிர்ப்போர் ; இந்திய ஒற்றுமைக் குலைவு ஏகாதிபத்திய நலன்களுக்கே ஆதாயம் என்பதை மறந்து விடுகின்றனர். இந்நூல் இந்திய தேசியம் குறித்த சிந்தனையை வலுப்படுத்தும்.

அரசியல் விழிப்புமிக்கவர்களும் ஆய்வு மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய  விவாதிக்க வேண்டிய புத்தகம். மன்மோகன் களும் சிதம்பரங்களும் இந்நூலைப் படித்தேனும் கொஞ்சம் புத்திதெளிய மாட்டார்களா? என்பது எமது நப்பாசை..சுப்பாராவின் சீரிய மொழிபெயர்ப்பிற்கு பாராட்டுக்கள்.

நன்றி தீக்கதிர்

இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள்  1880  1905 

ஆசிரியர் : பிபன் சந்திரா

தமிழில் ச.சுப்பாராவ்

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

421, அண்ணா சாலை , தேனாம்பேட்டை ,

சென்னை  600 018.

பக் :672 , விலை : ரூ .490

Share.

About Author

Leave A Reply