பணவீக்கம் என்றால் என்ன?

0


பேரா.பெ.விஜயகுமார்
                   
           புத்தகத்தின் தலைப்பு “பணவீக்கம் என்றால் என்ன?” என்று கொடுக்கப்பட்டிருந்தாலும், அதையும் தாண்டிய பல பொருளாதாரம் பற்றிய செய்திகள் உள்ளன. 1991லிருந்து கடந்த இருபதாண்டுகளாக மத்திய அரசு கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையின் சுருக்கமான வரலாறாக இப்புத்தகம் அமைந்துள்ளது. இந்திய அரசின் நவீன தாராளமயக் கொள்கையின் ஆழ்ந்த விமர்சனத்தையும் நூல்முன்வைக்கிறது.
         
பொருளாதாரத்தை ஒரு பாடமாக படித்திராத சாதாரண மக்களுக்கு, பணவீக்கம், பணவாட்டம், ரூபாய் மதிப்பு, போன்ற பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகள் புரிவதில்லை. இவற்றினை யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் முறையில் ஜோசப் விளக்கியுள்ளார். ரிசர்வ் வங்கியின் பாத்திரம் என்ன?, அது எவ்வாறு தலையிடுகிறது? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது பற்றி மூன்று கட்டுரைகளில் தெளிவுபடுத்தியுள்ளார். நவீன தாராளமயம் எல்லாத் துறைகளையும் பாதித்திருந்தாலும் விவசாயத் துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். “ முன் பேர வர்த்தகம் கார்ப்பரேட் விவசாயத்திற்கு உதவுகிற ஒன்று எனும்போது அது விவசாயிகளுக்கு எப்படி உதவும்?” என்ற கேள்வியை மிகச் சரியாக எழுப்புகிறார்.
         
 வால் மார்ட் பற்றிய கட்டுரையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதினால் பணவீக்கமோ, விலைவாசியோ குறையப்போவதில்லை. என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்திய விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் சாதகமில்லாத இதனை அனுமதிப்பதின் மூலம் இந்திய மக்களின் நலன்களை மத்திய அரசு காவு கொடுக்கின்றது என்று சாடுகின்றார்.
              

உணவு உரிமை பற்றிய கட்டுரையில், பெரு முதலாளிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் கோடி வரிச் சலுகை வழங்கும் அரசு, ஏழை எளிய மக்களின் அன்றாட உணவுக்காக ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் கோடி வழங்குவது ஒன்றும் பெரியதல்ல என்று உணர்த்துகிறார். பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஜோசப் அதற்கான மாற்றையும் கூறத் தவறவில்லை. பொருளாதார வளர்ச்சிக்கும் பகிர்மானத்திற்கும் உள்ள இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறார். வருமான மறு விநியோகம் முதலாளிகளுக்குச் சாதகமாகவும், உழைக்கும் மக்களுக்குப் பாதகமாகவும் இருப்பதே பிரச்சனைகளுக்குக் காரணம் என்பதையும் வலியுறுத்துகிறார். இறுதியில் சென்ற நூற்றாண்டில் முதலாளித்துவம் உருவாக்கும் நாடுகளிக்கிடையான போரா? சோசலிசமா? என்ற கேள்வி முன் நின்றது. இந்த நூற்றாண்டில் முதலாளித்துவம் உருவாக்கும் வறுமையா? சோசலிசமா? என்ற கேள்வி நம்முன் நிற்கின்றது என்று முடிக்கின்றார்.

பணவீக்கம் என்றால் என்ன?
ஆசிரியர் ; இ.எம்.ஜோசப்

பாரதி புத்தகாலயம்
ரூ.35/=                         

Share.

About Author

Leave A Reply