கெட்ட புத்தகம்

0
சா.கந்தசாமி


மனிதர்களில்சிலர் தங்களின் உச்ச பட்சமான அறிவால்சமூக, அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், தத்துவம்பற்றி ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். வேறு சிலர் கவிஞர்கள். என்ன எழுதுகிறோம் என்பது பற்றி அதிகமாகவிளக்கிச் சொல்லாமல் எதைச் சொன்னார்களோ அதைப்பூரண அழகோடும் அமைதியோடும் எழுதி வைத்து இருக்கிறார்கள். பின்னது படைப்பு இலக்கியம். அதுஞானத்தால் எழுதப்பட்டது. முன்னது முழுக்க முழுக்கஅறிவால் ஆராய்ந்து எழுதப்பட்டது. அதிகமாகப் பலன் சார்ந்தது. இன்னதுசெய்யத் தக்கது என்று சொல்வது, பிரச்சினைகளையும் அதன் காரண காரியங்களையும்ஆராய்ந்து தீர்வும் சொல்வதாகும்.
புத்தகங்கள்படிப்பதற்காகவே எழுதப்படுகின்றன. அதுமட்டும் அதன் பயன்பாடு கிடையாது. புத்தகம் சமூக மாற்றத்திற்கும் மனிதர்களின்மன மாற்றத்திற்கும் காரணமாக உள்ளன. சமூகத்தில்ஏற்பட்டுள்ள பெரும்பான்மையான காரியங்களுக்கு புத்தகங்கள் காரணமாக இருக்கின்றன. அதற்குநாடு, இனம் மொழி என்பதுகிடையாது. ஒரு மொழியில் எழுதப்பட்டபுத்தகம் அதற்குள்ளாகவே ஜீவிப்பது இல்லை. ஏனெனில் மனிதன்கருத்துக்களை எந்தமொழியிலும் அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்று இருக்கிறான்.
மனிதனைநல்ல மனிதன், கெட்ட மனிதன்என்று பிரித்து வைத்திருப்பதுபோலமனிதனால் எழுதப்பட்ட புத்தகங்களையும் நல்ல, புத்தகம் கெட்டபுத்தகம் என்று பட்டியல் இட்டுபிரித்து வைத்திருக்கிறார்கள். அதில் அரசுகளின் பங்களிப்பு, நிறுவனங்களின் தலையீடு, தனிமனிதர்களின் கொள்கைகள் எல்லாம் உண்டு. எவையெல்லாம்அரசாலும் சமூகத்தாலும் அங்கீகாரம் பெற்று நடைமுறையில் உள்ளதோஅதனை மறுக்கின்ற அம்சங்கள் கொண்ட புத்தகங்கள் கெட்டபுத்தகங்களாகி விடுகின்றன. ஆனால் அவைதான் அசலானபுத்தகங்கள் வாழ்கின்ற புத்தகங்கள் என்று குறிப்பிட வேண்டும்.
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் கெட்ட புத்தகங்கள் என்றுஇருக்கும் பட்டியலில் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல்சேர்த்து இருக்கிறார்கள். நூறு புத்தகங்கள் கெட்டகாரியங்கள் செய்ய  செய்யத் தூண்டுகின்றனஎன்கிறார்கள்.
கெட்ட புத்தகங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற புத்தகங்கள்மகத்தான புத்தகங்களாகவும் உலகத்தின் சிந்தனையை மாற்றி அமைத்தவைகளாகவும் இருப்பது ஆச்சரியம். கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை, காரல் மார்க்ஸ் மூலதனம், மாசேதுங் எழுத்துக்கள், டார்வின் பரிணாம வளர்ச்சி, சிக்மன்பிராயிடு கனவுகளின் மறு பக்கம், ஆகியவற்றோடுரோசன் லூயிஸ் கார்ஸன் எழுதியஅமைதியான வசந்தம் இடம் பெற்றுஇருக்கின்றன.
1962-ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அமைதியானவசந்தம் வெளிவந்தது. கட்டுரை புத்தகம் விலைஐந்து டாலர். எழுதியவர் ரோச்சர்லூயீஸ் கார்ஸன் என்ற பெண்மணி. 1907ஆம் ஆண்டில் பிறந்தார். இலக்கியம்படிக்க விரும்பினார். ஆனால் கடல் சார்ந்தமெரீன் படிப்புப் படித்தார். அரசு சார்ந்த கடல், கடல் வாழ் உயிரினங்கள் பற்றியஆய்வுநிறுவனத்தில் பணியாற்றினார். இளம்பருவத்தில் இருந்தே இயற்கை மீது, தாவரங்கள், பறவைகள், நீர் வாழ், உயிரினங்கள்மீது அக்கறை கொண்டு இருந்தார். அவை தன் கண்களுக்கு முன்னால்மறைந்து வருவதின் காரண காரியங்கள் பற்றிஆராய ஆரம்பித்தார்.
சூரியன்காய்கிறது. வெய்யில் அடிக்கிறது. மழை பொழிகிறது. செடிகொடிகள் பூக்கின்றன. பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றன. மனிதர்கள் குழந்தைகள் பெற்றெடுக்கிறார்கள். ஈக்கள், கொசுக்களால் பலவிதமானநோய்கள் பரவுகின்றன. அதில் முக்கியமானது மலேரியா. ஆப்பிரிக்காவிலும், ஆசிய நாடுகளிலும் ஏராளமானமக்கள் மலேரியாவால் செத்துக் கொண்டிருந்தார்கள். மலேரியாவை ஒழிக்க வேண்டுமானால் முதலில்கொசுக்களைக் கொல்ல வேண்டும். அதற்குப்பல விஞ்ஞானிகள் உழைத்தார்கள். அவர்களில் ஒருவர் பால்ஹெர்மன் முல்லர். ஜெர்மனியில் இருந்து சுவிட்சர்லாந்திற்குப் புலம் பெயர்ந்தவர். அடிப்படையில் கெமீஸ்ட். அவர் 1939-ஆம் ஆண்டில் உயிர்உள்ளவற்றை கொல்லக்கூடிய நச்சுதன்மை கொண்ட திரவத்தைக் கண்டுபிடித்தார். Dichloro -Dipheny- Trichlo­rothane
என்று பெயர். சுருக்கமாக டிடிடிஎன்றழைத்தார்கள். அதற்கு காப்புரிமை பெற்றார். இரண்டாவது உலக யுத்தத்தில் போர்வீரர்கள் கூடாரங்களில் தூங்க முடியாமல் கொசுக்களால்அவதிப்பட்டார்கள். அங்கு டிடிடி அடிக்கப்பட்டது. கொசுக்கள் ஒழிந்தன.
எனவே ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் பெருமளவில்டிடிடி பயன்படுத்தப்பட்டது. மேலும் அது நவீனகண்டு பிடிப்புக்களில் உச்சமென்றும் உயிர் காக்கக்கூடியது என்றும்சொல்லப்பட்டது. 1948ஆம் ஆண்டில் பால்ஹெர்மன் முல்லர்க்கு மருத்துவத் துறையில் நோபல்பரிசு வழங்கப்பட்டது. அதனால் அவரும், அவர்கண்டுபிடிப்பும் பிரபல மாகியது.
டிடிடியை வேளாண்மைத் துறையில், பயிர் விளைச்சலை பாதிக்கும் பூச்சிகள் மீது தெளிக்க ஆரம்பித்தார்கள். அதனால் பூச்சிகள் மடிந்தன. மகசூல் கூடியது. எனவேகோதுமை வயல்கள், ஆப்பிள் தோட்டங்கள், திராட்சைதோட்டங்கள், வனங்கள், நீர் நிலைகள், அலுவலகங்கள்வீடுகள் என்று ஒவ்வொரு இடத்திலும்பூச்சிக்கொல்லியை அடிக்க ஆரம்பித்தார்கள். அதனால்பல்வேறு நிறுவனங்கள் வீரியம் மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரித்து விற்பனைக்கு விட்டன. வேளாண்மையின் நவீனஉரத்தோடு பூச்சிக் கொல்லி மருந்தான டிடிடியும் சேர்ந்து கொண்டுவிட்டது.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மலேரியாவைஒழித்துக் கட்ட டிடிடியைஅதிகமாகப் பயன்படுத்தினார்கள். அதனால் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டது. அதோடு வனங்களிலும் நகரங்களிலும் இருந்த பலவகையான பூச்சிகள்இறந்தன. மருந்தடித்த மனிதர்கள் நோயுற்று மெல்ல மெல்ல இறந்தார்கள். ஆனால் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. பசுமைப் புரட்சியின் மகத்துவம் பற்றி, மகசூல் பெருகியதுபற்றி அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது.
இருபத்தைந்துஆண்டுகளில் அமெரிக்க விளை நிலங்களிலும், நீர்நிலைகளிலும், வனங்களிலும் அதிகமான அளவிற்கு டிடிடிஅடிக்கப்பட்டதால் , கொசு ஆகியவற்றோடுவண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள், மண் புழுக்கள், தவளைகள், மீன்கள் உட்பட பலவிதமான நீர்வாழ்உயிரினங்கள் அமெரிக்க தேசிய சின்னமாகிய கழுகுஉட்பட பலவிதமான பறவைகள் அழிந்துகொண்டே வந்தன.
கார்ஸன்தன் ஆய்வாலும், இயற்கை மீதும் சுற்றுப்புறசூழல் மீதும் கொண்ட அக்கறையாலும், மனிதர்கள் தங்களின் கண்டுபிடிப்பு மூலமாகவே வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்கிறார்கள்; அது தொடருமானால் மனிதர்கள்கடினமான பிரச்சனைகளிலும் மீள முடியாமல் சிக்கிக்கொண்டு விடுவார்கள் என்ற தொனியில்தான் அமைதியானவசந்தம் எழுதினார். அதில் என் வீட்டுத்தோட்டத்தில் வந்து பாடும் ராபீனுக்குவிஷம் வைத்துக் கொல்ல யார்க்கும் உரிமைஇல்லை என்றார். அது இயற்கை ஆர்வலர்கள்ஈடுபாட்டை போராட்டமாக்கியது. நச்சுப் பொருளைப் பயன்படுத்திகாரியங்கள் செய்து பணம் பண்ணுவதுவாழ்க்கை இல்லையென பேரணிகள் நடத்தினார்கள்.
டிடிடிஉற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் அமைதியான வசந்தம் கெட்ட புத்தகம். அதை எழுதிய ரோஸன் லூயிஸ்கார்ஸன் மனநோயாளி. விஞ்ஞான வளர்ச்சியின் விரோதி. லட்சக்கணக்கான மக்கள் மலேரியாவில் செத்துமடிவதைப்பற்றிக் கவலைப்படாமல் மண்புழு, பறவைகள், மீன்கள் பற்றி எழுதும்மக்கள் விரோதி என்று பேசியும்எழுதியும் இயக்கம் நடத் தினார்கள்.
அமெரிக்கஜனாதிபதியாக இருந்த ஜான் எப். கென்னடி அமைதியான வசந்தம் படித்தார். அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள வல்லுநர்கள்கொண்ட விசாரணைக் கமிஷனை அமைத்தார். அதன்முன்னே கார்ஸன் ஆஜராகி, தான்மக்கள் விரோதி இல்லையென்றும், தீவிரமானநச்சுத்தன்மை கொண்ட திரவத்தை தெளித்துநன்மை புரியும் புழு பூச்சிகளையும் பறவைகளையும்அழிக்கக் கூடாது. எதற்கும் வரம்புஉண்டு என்றார்.
ஜனாதிபதிஅமைத்த கமிஷன் டிடிடிமீதுகட்டுப்பாடுகள் விதித்தது. அதன் வீரியம் குறைக்கப்பட்டது. ஆனால் வளரும் நாடுகளிலும், ஏழ்மையானநாடுகளிலும் மலேரியாவை கட்டுப்படுத்தவும் அதிகமான மகசூல் வேண்டியும்பூச்சிக் கொல்லி மருந்துகள் தாராளமாகப்பயன்படுத்தப்படுகின்றன. 1972ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டிடிடிதயாரிக்கவோ விற்பனை செய்யவோ கூடாதுஎன்று தடை விதிக்கப் பட்டது.
அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பதைமுன்னெடுத்து சென்றவர்கள்போல இயற்கை பாதுகாப்பு, பல்லுயிர்வாழ்வதற்கு பூமி உரியது என்றசித்தாந்தத்தைத் தன் எழுத்துக்கள் மூலமாகநிலைநாட்டி வந்த ரோசன் லூயீஸ்கார்ஸன் திருமணம் செய்துகொள்ளவில்லை. படிப்பதும், இயற்கையைப் பற்றி எழுதுவதுமாக வாழ்ந்து1964ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோய்கண்டு காலமானார்.
2001ஆம்ஆண்டில் அமெரிக்காவின் மிகச் சிறந்த சாதனையாளர்களுக்கானஜனாதிபதி விருது மரணத்திற்குப் பிறகுகார்ஸனுக்கு வழங்கப்பட்டது. அமைதியான வசந்தம் எழுதப்பட்ட காலத்தைவிடநிகழ்காலத்திற்கு அவசியமான புத்தகம். அது பூமியின் பாதுகாப்புபற்றி ஒவ்வொருவரையும் கவனம் கொள்ள வைத்துக்கொண்டுஇருக்கிறது. அதனால் அது அதிகமானகவனம் பெறுகிறது. ஐம்பதாண்டுகளாக தொடர்ந்து படிக்கப்படும் வாழும் புத்தகங்களில் ஒன்றாகஅமைதியான வசந்தம் இருக்கிறது. அதனைகெட்ட புத்தகம் என்று ஒதுக்கிவிட முடியாது. நல்ல, மிக நல்ல புத்தகம். எனவே உலகத்தில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறார்கள்.

( தமிழில்இந்நூலின் சுருக்கப் பட்ட வடிவத்தை வம்சிபதிப்பகம் வெளியிட்டுள்ளது.)
Share.

About Author

Leave A Reply