காலநதியில் எதிர்நீச்சல்

0


காலநதியில் எதிர்நீச்சல்


வரலாறு என்பது புனைவும் உண்மையும் கலந்த கலவையே. தொன்மை கூடக் கூடப் புனைவின் விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. The perecentage of factual truth in history is inversely related to the antiquity. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் அமைந்த ச.சுப்பாரவ் எழுதிய, சிறுகதைத் தொகுப்பான ‘தாத்தாவின் டைரிக் குறிப்பு ‘ நூலுக்கு நண்பர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய அருமையான விமர்சனத்தைப் படித்துவிட்டுக் காலையே அவரது வீட்டிற்குச் சென்று வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். தமிழ்நாடு முற்போக்குக் கலை எழுத்தாளர் சங்கம் சார்பில் 2010 இன் சிறந்த சிறுகதைத் தொகுப்பு என்ற பரிசு பெற்ற நூல் இது.

இரவு நெல்லைப் பயணத்திற்காக வைத்திருந்தேன். பாவி மனிதர்! இவ்வளவு சுவாரஸ்யமாகவா எழுதுவது? வாங்கிப் புரட்ட ஆரம்பித்த உடனேயே இழுத்து விட்டது.மாலைக்குள் பாதி படித்துவிட்டேன். தாம்பரம் தாண்டுவதற்குள் முடித்துவிட்டேன்.

பெரும்பாலும் சரித்திரத்தை மறுவாசிப்பு செய்யும் கதைகள்.

மாமன்னன் அக்பராக இருந்தாலும் சரி,அதியமானாக இருந்தாலும் சரி பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும் தாத்தாவாக இருந்தாலும் சரி வரலாற்றைச் சமைப்பவர்கள் ,வரலாற்றுப் புருஷர்களாகப் பின்னாளில் உருவாகிறவர்கள் ,தாம் வாழும் காலத்தில் சராசரி மனிதர்களின் கீழ்மைகள் வெளிப்படும் நடவடிக்கைகளையும் கொண்டிருந்தனர் என்பதே இந்தச் சிறுகதைத் தொகுப்பின் அடிநாதமாக விளங்குகிறது.

“இம்சை அரசன்……” திரைப்படத்தில் புலிகேசி தன்னைப் பெரும் மல்லன் என்பதுபோல் சந்ததியினருக்குக் காட்டுமாறு ஓவியம் வரையச் சொல்லிவிட்டு அமைச்சரிடம் கூறுவான் “வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!” .நகைச்சுவைக்கான காட்சி என்றாலும் அதில் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம்.அதே வரிகளை அதியமான் அவ்வையிடம் கூறுகிறான். சுட்டபழமா என்று அவ்வையைக் கேலிசெய்த சேரிச் சிறுவனை முருகனாக்கி விடுகிறான்.அதிகாரத்திலிருப்பவன் கிறுக்கும் கிறுக்கல்களே வரலாற்று ஆவணங்கள் என்பதை உணர்ந்த அவ்வை ‘வல்லான் வகுத்ததே வரலாறு என்று பாட வைக்கிறது.

நுணுக்கமான சரித்திர அறிவு தெறிக்கும் வர்ணனைகள் சிறுகதைகளெங்கும் பளிச்சிடுகிறது. தான்சேன், செல்வம் மாஸ்டர்,தாத்தா (கடைசி வரை எதிர்நீச்சல் இருமல் தாத்தா மாதிரி இவருக்குப் பேரே இல்லை) ஆகியோரின்

வார்த்தைகள் மூலமாக ஆசிரியரின் இசையறிவும் புலப்படுகிறது.

தத்துவவிசாரத்திலும் ஆசிரியர் மின்னுகிறார். யாக்ஞவல்கீயராக இருக்கட்டும், யக்ஷ்னிடம் பேசும் தர்மராக இருக்கட்டும் தத்துவம் என்பது ஓவியத்தில் இருக்கும் உணவு போல .அதனால் பசி அடங்காது என்பதை நமக்கு உணர்த்துகிறார். பிரம்ம ஞானம் வயிற்றை நிரப்பாது என்னும் பொருள்மைய வாதத்தின் மையத்தை யாக்ஞவல்கீயர் சுட்டிக்காட்டுகிறார்.

ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கை வரை ‘ சமூகவியல் பார்வையில் வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் ஒரு முக்கிய ஆவணம்.அதே பார்வையையே சுப்பாராவின் இச்சிறுகதைத் தொகுப்பும் வெளிப்படுத்துகிறது

கண்களுக்கு உறுத்தாத காலை வெயில் போல் மெல்லிய நகைச்சுவை ஆங்காங்கே பாந்தமாய் வெளிப்படுகிறது. குறிப்பாக யக்ஷன் கேட்கும் ‘என்ன கேசத்துக்காக நீ பாஞ்சாலியைப் பணயம் வைத்தாய் ?” என்ற கேள்வி .
அதிகாரத்தோடு நெருங்கிய தொடர்புள்ளது சம்ஸ்கிருதமயமாக்கல் என்ற மேட்டிமைமயமாக்கல். ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ என்ற சிறுகதையில் சுடலை மாடன் சம்ஸ்கிருதக் கடவுளாகி மந்திர உச்சாடனை செய்யப்படுவதை நினைவுக்குக் கொண்டுவருகிறது ‘கடவுளின் மொழி’.

மொழி,இசை,வரலாறு என்று ஆழ்ந்த ஞானம் இருந்தால் மட்டும் ஒருவர் சிறந்த கதை சொல்லி ஆகிவிட முடியாது. சுப்பாராவ் கதை சொல்லும் முறையின் சிறப்பு பூனை நுழைவது போல் சாவகாசமாகத் தொடங்கி எதிர்பாராத வாசல் ஒன்றைத் திறந்ததும் வெளிச்சமும் காற்றும் வெள்ளமாய்ப் பாய்வதைப் போல் திடீரென ஒரு தருணம்,ஒரு வரி வருகிறது.வரலாற்றின் அக்கணத்தை அழியாப் பிரதியாக்குவது அதுவே. யாரோ சுப்பிரமணியனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என்று எண்ணும் போதே அது பாரதியாரைப் பற்றியது என்பதை ஒரு வரியில் கோடி காட்டுகிறார். (பின்னாளில் சரித்திரம் ஆகப் போகும்) சமூகக்கதைளிலும் மனித மனத்தின் இருட்டு மூலையைக் கீற்றுப் போல் மின்னல் வெளிச்சத்தில் காணவைக்கிறார். ‘செல்வம் மாஸ்டர்’ ஒரு கலைஞனின் சரிவு எனில் தாத்தாவின் டைரிக்குறிப்பு ஒரு உயர்ந்த மனிதன் உயரம் குறுகி மானுடனாகும் பதிவு. 

‘தாத்தாவின் டைரிக் குறிப்பு’
சிறுகதைத் தொகுப்பு:ச சுப்பாராவ்
96 பக்கங்கள் 60 ரூபாய்.
பாரதி புத்தகாலயம் வெளியீடு.

044 24332924

Share.

About Author

Leave A Reply