ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்

0
ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்
தமிழில்: கி. ரமேஷ்
அரசு பொது மருத்துவமனை ஒன்றின் சின்னஞ்சிறு அறையையே இராணுவ நீதிமன்றமாக மாற்றி ஃபிடலை விசாரித்த ‘நீதிபதி’களை நோக்கி அவர் நிகழ்த்திய தற்காப்பு வாதத்தில் இப்படிக் கேட்கிறார் ஃபிடல்: “சட்ட விரோதமான, கீழ்த்தரமான பல்வேறு சதிகளுக்குப் பிறகு ஆளுவோரின் விருப்பத்தின் விளைவாகவும், நீதிபதிகளின் பலவீனங்களின் விளைவாகவும் நான் இந்தப் பொது மருத்துவமனையின் சின்னஞ்சிறு அறையில் உங்கள் முன்னே நிற்கிறேன். ரகசியமாக நான் விசாரிக்கப் படலாம். நான் கூறுவது யாருக்கும் எட்டாமற் போகலாம். நான் உங்களை எச்சரிக்கிறேன். ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்திச் சூழ்ந்திருக்கும் மருத்துவமனை ஒன்றிலிருந்து நீதிபரிபாலனம் செய்வது நியாயமானதல்ல. நமது நீதி நோய்வாய்ப் பட்டிருக்கிறது. சிறைப் பட்டிருக்கிறது என்று குடிமக்கள் நினைத்துவிடப் போகிறார்கள்”
கடந்த 48 ஆண்டுகளில் மேலே கண்டுள்ள உரை உள்பட 5000 உரைகளை நிகழ்த்தி யிருப்பவர் ஃபிடல் அவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 28ன் தொகுப்பு இது. ஃபிடலின் நீண்ட கால நண்பரான உலகப்புகழும் நோபல்பரிசும் பெற்ற காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ் வார்த்தைகளிற் சொன்னால், ‘எளிமையான வழிமுறைகள், தணியாத கற்பனை, எச்சரிக்கையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள், எளிமையான ஒழுக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மனிதர்’ தான் ஃபிடல். கியூப புரட்சியின் சாதனைகள், இருபதே மாதங்களில் 10,000 புதிய பள்ளிகளைத் திறந்தது, இதே குறைந்த காலத்திற்குள் கடந்த 50 ஆண்டுகளில் கிராமப்புறத்தில் அமைக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கையைப் போல் இரு மடங்காக ஆக்கியது, மலை முகடுகளின் தொலை தூரங்களில் கூட ஆசிரியர்களை நியமித்தது, முன்பு முக்கியமான இராணுவக் கோட்டைகளாக இருந்தவற்றில் இப்போது பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இடமளித்தது, நிலச் சீர்திருத்தங்கள், மருத்துவ வசதிகளை முற்றிலும் இலவசமாக அளித்தது. எல்லாவற்றையும் ஃபிடலின் உரைகளில் அருவியின் ஆர்ப்பரிப்புடன் கொட்டுகிறார். தங்களுக்கு (கம்யூனிஸ்டுகட்கு) எதிரான போரில் உயிர் நீத்த இராணுவத்தினரின் குழந்தைகளுக்குப் பராமரிப்பு, உதவி, கல்வி ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறார். ஏனென்றால் போரின் கொடுமைகளுக்குக் குழந்தைகளைக் குறைகூற முடியாது என்பதே  அனைவரிடமும் பரந்த மனப்பான்மையுடனே இருப்போம் என்கிறார். “ஏன் எனில், இங்கு தோல்வியுற்றவர் யாருமில்லை. வெற்றி பெற்றவர்கள் மட்டுமே உள்ளனர். மக்களின் வெற்றியைச் சாத்தியமாக்கிய பல்லாயிரக்கணக்கான போராளிகளின் சார்பில் பேசுகிறேன். நான் தியாகம் புரிந்தவர்களின் மீது ஆழமான மரியாதையுடன் பேசுகிறேன். அவர்களது தியாகம் வீண்போகவில்லை என்ற நினைப்பே அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் எல்லையற்ற வெற்றிடத்தைப் பகுதியளவுக்கு நிறைவு  செய்யும். அவர்களது குழந்தைகள் மறக்கப்பட மாட்டார்கள். நாங்கள் ஒரு போதும் பகட்டுக்கோ, சுயநல இலட்சியத்துக்கோ பலியாகிவிட மாட்டோம். ஏனெனில், அப்போஸ்தலரின் வார்த்தைகளில், உலகின் அனைத்துப் புகழும் ஒரு பிடி  சோளத்துக்குள் அடங்கிவிடும்?” அமெரிக்க வல்லரசு, இந்த இரும்பு மனிதரைக் கொல்லுவதற்கு சி.ஐ.ஏ. மூலம் செய்த சதிகள்  எண்ணிக்கையில் அடங்கா. அந்த ஏகாதிபத்தியத்தின் மூக்கிற்கு மேல், இன்றளவும் கியூபா தாக்குப்பிடித்து நிற்கிறது. அவ்வாறு நிற்பதற்கான உறுதியை, ஃபிடல் தனது பேருரைகளின் வழியே நாட்டு மக்களுக்கு வழங்குகிற அதே வேளையில் தனக்கும் சக தோழர்களுக்கும் அதை வழங்கிக் கொள்கிறார். சே-குவாராவுக்கு அவர் செலுத்திய புகழஞ்சலியில் ஃபிடல் கூறிய இந்த வார்த்தைகளுக்கு அவரும் இலக்கணமாக நிற்கிறார். ஒரு கடுமையான நடவடிக்கைக்கு, எப்போதெல்லாம் ஒரு தன்னார்வத் தொண்டர் தேவைப்படுகிறாரோ, அது போரானாலும், அமைதியானாலும் வரிசையில் அவர் முதலில் நின்றார். 
ஃபிடல் இப்போதும் நிற்கிறார்.
வெளியீடு பாரதி புத்தகாலயம்
விலை:ரூ.420
044 24332924

Share.

About Author

Leave A Reply