‘காலனிய இந்தியாவில் சமய மறுப்பு இயக்கம் தமிழ்ச்சூழலில் மட்டும் தான் செயல்பட்டுள்ளது’

0

புத்தகம் பேசுது ஆகஸ்ட் இதழில் ஒரு புத்தகம் 10 கேள்விகள் பகுதியில் வெளிவந்த பேரா. வீ.அரசு அவர்களின் நேர்காணல் (கேள்விகள்: வ.கீதா)


பேராசிரியர் வீ.அரசு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1985 முதல் பணியாற்றி வருகிறார். இதுவரை நாற்பதுபேர் இவரது மேற்பார்வையின் கீழ் முனைவர்பட்டம் முடித்துள்ளனர். தற்பொழுது  பத்துபேர்  ஆய்வு செய்து வருகிறார்கள். ‘மாற்றுவெளி’  இதழுக்குச் சிறப்பாசிரியராகச் செயல்பட்டுவருகிறார். ‘கட்டியம்’ இதழுக்கும் இவர் சிறப்பாசிரியராக இருந்தார். தமிழ்ச் சிறுபத்திரிகையின் அரசியல், மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய தலைப்புகளில் இரண்டு குறுநூல்களை எழுதியுள்ளார். தோழர் ப.ஜீவானந்தம், சங்கரதாஸ் சுவாமிகள், வ.உ.சி., புதுமைப்பித்தன், மயிலை சீனி. வேங்கடசாமி ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்.  சுமார் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.  அவற்றில் சில மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அண்மையில் பதிப்பித்த  சென்னை  இலௌகிகசங்கம் குறித்து இப்பகுதியில் வரும் செய்திகள் மூலம் தெரிந்துகொள்ளமுடியும்.

1. சென்னை இலௌகிக சங்கம் நடத்திய ‘தத்துவவிவேசினி’ சொல்லும் வரலாற்றுச் செய்திகளில் எவற்றை முக்கியமானவையாகக் கருதுகிறீர்கள்? உங்கள் பதிப்பு எந்த வகைகளில் இவற்றைக்  கோடிட்டுக் காட்டுகிறது? மேற்சொன்ன கேள்வியின் நீட்சியாக தத்துவ விவேசினி காட்டும் அறிவுலகம் மிகப்புதியது. காலனியாட்சிக் காலத்தில் தமிழகம் கண்ட மாற்றங்களைப் பற்றி நாம் இதுவரை கொண்டுள்ள புரிதல்களை மீள் பரிசீலனை செய்ய வைப்பதாகவும் உள்ளது. இவ்வகையில் எந்தெந்த விஷயங்களை நாம் வேறுமாதிரி புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்?

இந்து சுயக்கியானிகள் சங்கம் (Hindu Free Thought Union) என்னும் அமைப்பு 1878-_-1888 காலங்களில் தமிழ்ச்சூழலில் செயல்பட்டது. ‘இந்து’ எனும் சொல் இந்தியர்களைக் குறிக்கும். இந்து மதத்தைக் குறிக்காது. சுயக்கியானிகள் என்பது சுயசிந்தனையாளர்கள். ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்ட சுயசிந்தனையாளர்கள்  (Free Thought Movement) அமைப்புகளின் தாக்கத்தால் இவ்வமைப்பு சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பின்னர் 1886இல் சென்னை இலௌகிக சங்கம் (Madras Secular Society) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தத்துவவிவேசினி மற்றும் The Thinker இதழ்கள் வழி நாம் பெறும் வரலாற்றுத் தகவல் இது. தத்துவவிவேசினி இதழ் பற்றிய தகவல்கள் மிக மேலோட்டமாகச் சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சென்னை இலௌகிக சங்கத்தின் இதழ்கள் தத்துவவிவேசினி, The Thinker ஆகியவை  என்பதை  முதன்மைப்படுத்தி முதல்முதல் இந்த ஆறு தொகுதிகளின் மூலம் பதிவு செய்கிறோம். இந்தத் தகவல் தமிழ்ச் சமூக வரலாற்றில் இதுவரை அறியப்படாதது. மேலும் இவ்வமைப்பு நாத்திகக் கருத்துச் சார்பில் செயல்பட்டது என்பது மிக முக்கியம்.

தமிழ்ச்சூழலில் மட்டும்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனிய காலத்தில் நாத்திக இயக்கம் செயல்பட்டுள்ளது. வங்காளம் போன்ற பகுதிகளில் சமயசீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சமய மறுப்பு எங்கும் பேசப்படவில்லை. தமிழ்ச்சூழலில் செயல்பட்ட சென்னை இலௌகிகசங்கம், அனைத்து மதங்களையும் மறுத்தது. மதவழிப்பட்ட கடவுள் கோட்பாட்டை மறுத்தது.  பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறாத  மிகவும் முற்போக்கான செயல்பாடு தமிழ்ச்சூழலில் நடைபெற்றது என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.

2. சென்னை இலௌகிக சங்க உறுப்பினர்களாக இருந்து தத்துவ விவேசினியில் எழுதிய பலருடைய அடையாளங்கள்  நமக்குச் சரிவரத் தெரியாது. இருந்தாலும்  தொடர்ந்து  எழுதியவர்களின் எழுத்துகளைக் கொண்டு அவர்களைப் பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா?


இலௌகிக சங்கத்தில் செயல்பட்ட உறுப்பினர்கள் இரண்டு வகையாகச் செயல்பட்டார்கள். நேரடியாகத் தங்களது பெயரை வெளிப்படுத்திக்கொண்டு எழுதியவர்கள், பெயர்களை வெளிப்படுத்தாமல், முன்னெழுத் துக்களை மட்டும் போட்டுக் கொண்டும் புனைப்பெயர்களிலும்  எழுதியவர்கள் இன்னொரு பிரிவினர். முதல் பிரிவினரை ஆங்கிலத்தில் Active member என்றும் அடுத்த பிரிவை Passive Member என்றும் அழைத்தனர். ‘கிருஷ்ணகிரி உண்மை விரும்பி’ எனும் புனைப்பெயரில் மிகஅதிகமாக ஒருவர் எழுதியுள்ளார். இவர்களைக் குறித்த அடையாளங்களைக் கண்டறிவது கடினம். ம.மாசிலாமணி, பு.முனுசாமி நாயகர்,   அ.முத்துசாமி முனிவர், தி.சி.நாராயணசாமிப்பிள்ளை,  திரிசிரபுரம் புத்தூர் வையாபுரிப் பிள்ளை எனச் சில பெயர்களில்  கட்டுரைகள்  வெளிவந்துள்ளன. மிகுதியான  கட்டுரைகளுக்குப் பெயர் இல்லை.
இவர்களில் இரண்டு முக்கியமான ஆளுமைகளை அறியமுடிகிறது. ஒருவர் ம.மாசிலாமணி, மற்றொருவர் இலட்சுமி நரசு. இவர்பின்னர் மிகச்சிறந்த பௌத்த அறிஞராக அறியப்பட்டு, அம்பேத்கரால் பெரிதும் மதிக்கப்பட்ட திரு.பி.எல்.நரசு எனும் இலட்சுமிநரசு ஆவார், சென்னை இலௌகிகச் சங்கத்தின் கிளை அமைப்பான இந்து மால்தூசியன் சங்கத்தின் (The Hindu Malthusian League) செயலாளராகச் செயல்பட்டுள்ளார். இவ்வமைப்பின் பிறிதொரு கிளை அமைப்பான சிறுபத்திரிகா பிரகடந சங்கம் (The Free Thought Tract Society)மூலம் சிறுவெளியீடுகள், புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன. இவ்வமைப்பின் முதல்வெளியீடாக 1885இல் ‘வருணபேதச் சுருக்கம்’ எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. இந்நூலின் சிறிது விரிவுபடுத்தப்பட்ட வடிவம் 1900 இல் ‘வருணபேத  விளக்கம்’ எனும் பெயரில் வெளிவந்துள்ளது. 1926இல் கோலார், சித்தார்த்த புத்தக சாலை மூலம்  மேற்குறித்த  1900 வருட நூல் மறு அச்சு செய்யப்பட்டுள்ளது. இந்நூலை முதல் தொகுதியில் இணைத்துள்ளேன். மநுதர்மத்தை மறுத்து; சாதியை மறுத்து எழுதப்பட்டது  இந்நூல்.


3. தத்துவ விவேசினி இதழை நடத்தியவர்கள் மேற்கத்திய நாடுகளிலிருந்து அரிய நூல்களை வரவழைத்து இங்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.- இதுகுறித்து ஏதேனும் கூற முடியுமா?

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்தில் வெளியான கிறித்துவ மறுப்பு நூல்களை வரவழைத்து விற்பனை செய்துள்ளனர். இரண்டு இதழ்களிலும் இவ்வகையான நூல்கள் குறித்த விளம்பரங்கள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. மால்தூஸ், ஸ்பீனோசா, வால்டேர், டேவிட் ஹீயூம், தாமஸ் பெயின், இங்கர்சால், பிராட்லா ஆகிய பிறர் எழுதிய பகுத்தறிவு நூல்களை வாங்கி விற்பனை செய்துள்ளனர். தத்துவவிவேசினி இதழில் சிலநூல்களை மொழியாக்கம் செய்து தொடராக வெளியிட்டுள்ளனர். ‘மால்தூசியனிசம் ((Malthusianism), கடவுள் மறுப்பு (Atheism), குடியரசுக் கோட்பாடு (Republicanism), சமயச்சார்பின்மை (Secularism), சோசலிசம்(Socialism) ஆகியவை தொடர்பான நூல்கள் தற்போது வந்தடைந்துள்ளன. 291, லிங்கிச் செட்டித் தெருவில் உள்ள தி.பி.அப்பாத்துரை செட்டியாருக்கு  எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்’ என்னும் ஆங்கில விளம்பரம்  தத்துவவிவேசினி (07.02.1884) இதழில் வெளிவந்துள்ளது.

இலண்டன் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளிவந்த இதழ்களும் விற்பனை செய்யப்பட்டன. The National Reformer, The Free thinker, The Secular review, The Malthusian, The Truth Seeker, Secular Thought, The Liberator ஆகியவை. இவை இலண்டன்  மற்றும்  அமெரிக்காவில் செயல்பட்ட சுயசிந்தனையாளர்கள் அமைப்புகளால் நடத்தப்பட்டவை.


4. தமிழகத்தில் சாதிஎதிர்ப்பு சிந்தனை மரபின் உருவாக்கத்தில் சென்னை இலௌகிக சங்கம் ஆற்றியுள்ள பங்கைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

சென்னை இலௌகிக சங்கத்தின் முதல் வெளியீடான ‘வருண பேதச்சுருக்கம்’ (1885) என்னும் ‘வருண பேத விளக்கம்’ நூலானது சாதியத்திற்கு எதிரானது. மநுதருமம் என்பது எவ்விதம் பார்ப்பனியமாகச் செயல்படுகிறது மற்றும் எவ்வகையில் வருண பேதங்களை நியாயப்படுத்துகிறது  என்ற  விவரங்கள் இந்நூலில்  பேசப்படுகின்றன.

தத்துவவிவேசினி  மற்றும் The Thinker  இதழ்களில் சாதியத்திற்கு எதிரான பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதழ்களில் எழுதியோர், தங்கள் பெயர்களுடன் சாதி அடையாளங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவ்விதம் பயன்படுத்துவதைக் கண்டித்து தத்துவ விவேசினி இதழில் ஒரு கட்டுரை வந்துள்ளது. நாத்திகம்  பேசுபவர்கள் சாதி மறுப்பாளர்களாகவும் இருப்பது அவசியம் என்னும் பொருளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மதமறுப்பை எந்த அளவிற்குப் பிரச்சாரம் செய்தார்களோ அந்த அளவிற்கு சாதிமறுப்பு குறித்தும் எழுதியுள்ளனர். மனிதத் தன்மைக்கு எதிரானது சாதி என்ற பொருளில் அமைந்த கட்டுரை தத்துவவிவேசினியில் (07.10.1883) உள்ளது. இவர்கள் வெளியிட்ட நூலை, தமிழ் பௌத்த மரபைச் சார்ந்தவர்கள் மறுஅச்சு செய்து பரப்பியுள்ளதைத் தமிழகச் சாதி ஒழிப்பு மரபிற்குச் சென்னை இலௌகிகச் சங்கத்தின் பங்களிப்பாகக் கருதலாம்.

5. சென்னை இலௌகிக சங்கத்தினர் நடத்திய ஆங்கில ஏடு தமிழ் ஏட்டிலிருந்து எந்தெந்த வகைகளில் மாறுபடுகிறது? இதை பதிப்பிக்கையில் நீங்கள் சந்தித்த சவால்கள்?

சென்னை இலௌகிகச் சங்கம் நடத்திய ‘The Thinker’ எனும் ஆங்கில ஏடு, அவர்கள் 1879களில் நடத்திய’The Philosophic enquirer’ இன் தொடர்ச்சியாக உள்ளது. 1879முதல் வெளிவரும் இவ்வமைப்பின் ‘தத்துவ விசாரிணி’ இதழின் தொடர்ச்சியாகத் ‘தத்துவ விவேசினி’ வருவதோடு மேற்குறித்த செய்தியை இணைத்துப் பார்க்கலாம். தமிழ்ப் பத்திரிகையில் வெளிவரும் செய்தி வேறாகவும் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவரும் செய்தி வேறாகவும் இருக்கிறது. மேலைநாடுகளிலிருந்து இவர்களுக்கு வரும் ஆங்கிலப் பத்திரிகைகளிலிருந்து பல செய்திகளை மீண்டும் ஜிலீமீ ஜிலீவீஸீளீமீக்ஷீ இல் வெளியிட்டனர். தமிழ்ப் பத்திரிகையில் சைவத்தையும் பிரம்ம ஞானசபை The Thinker  யையும் மறுத்து அதிகமாக எழுதினர். ஆங்கிலப் பத்திரிகையில் கிறித்துவ மறுப்பு வெளிப்பட்டது.
(Theosophical Society)   இதழ்கள் மிகவும் சிதிலமடைந்து உள்ளன. இப்பத்திரிகைகளின் ஆங்கில மொழிநடை கடினமாக இருப்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆனால் இவ்விதழ்களைப் படிப்பதற்கு உங்கள் உதவி (வ.கீதா) மற்றும் மங்கையின் உதவி ஆகியவை அந்தச் சங்கடத்தைப் போக்கியது.

6. தமிழில்  சிறுபத்திரிகைகள் குறித்து, மாற்று இதழ்கள் பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர் நீங்கள் – அத்தகைய வரலாற்றில் தத்துவ விவேசினிக்கு முக்கிய  இடமுண்டு. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதற்கு முன் வெளிவந்த இதழ்கள், அதற்குப் பின் தோன்றியவை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுக் கூறமுடியுமா?

அச்சு ஊடகப் பண்பாட்டு மரபில், இதழ்கள் இரண்டு வகைகளில் செயல்படுகின்றன. ஏதேனும் ஓர் இயக்கச் சார்போடு அல்லது கருத்துநிலைச் சார்போடு வெளிவரும் இதழ்கள் ஒருவகை; அவ்விதச் சார்பின்றி வெகுசன ரசனை மரபிற்குகந்தவற்றை வெளியிட்டு வணிகமாகச் செயல்படுபவை இன்னொன்று. இதில் பல வகைகள் உண்டு. அனைத்தையும் நான் எதிர்நிலையில் பார்க்கவில்லை. தத்துவ விவேசினி இதழ் ஓர் இயக்கத்தின் பத்திரிகை. இம்மரபில் தமிழில் 1864இல் வெளிவந்த ‘தத்துவபோதினி’ எனும் இதழைச் சொல்லலாம். அது பிரம்ம சமாஜத்தின் தமிழக வடிவமான வேதசமாஜம் நடத்தியது. கொஞ்சம் மதச்சீர்திருத்தத்தைப் பேசியது. ஆனால் மதமறுப்பு, கடவுள் மறுப்பு ஆகிய கருத்து நிலைகளில் தமிழில் வந்த முதல் பத்திரிகை தத்துவவிவேசினிதான். பின்னர் பெரியார் நடத்திய ‘குடியரசு’, ‘விடுதலை’ போன்றவற்றின் முன்வடிவமாக இதனைக் கருதலாம்.

7. இதழாளர்கள் பாவிக்கும் தமிழ் உரைநடை பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா? அறிவியல், தத்துவம் ஆகிய துறைகளுக்குரிய கலைச்சொற்களை அவர்கள் எப்படி உருவாக்கிக் கொள்கிறார்கள்?

தத்துவவிவேசினி இதழின் மொழிநடை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் நடைமுறையில் இருந்த மணிப்பிரவாள மொழிநடை. சுமார் 125வருடங்களுக்கு முற்பட்ட தமிழ். Materialism  என்பதை மூர்த்தபூதியவாதம் என்றும், கடவுள் மறுப்பாளரை பூதவாதி என்றும், தொடக்ககால பகுத்தறிவுச் சிந்தனையை பூர்வ சுயக்கியானம் என்றும் எழுதியுள்ளனர். விடுதலைச் சிந்தனை என்பதை சுவஞானசாதனை என்கின்றனர்.அறிவியல் கருத்து என்பதை விஞ்ஞாபனம் என்கின்றனர்; மக்கள் பெருக்கம் என்பதை பிரஜாவிருத்தி என்றும் வறுமை என்பதை தாரித்திரம் என்றும் எழுதுகின்றனர். தனிமங்கள் (Elements) குறித்த விரிவான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் பல்வேறு புதிய கலைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். 1870களில்  ‘ஜனவிநோதினி’ எனும் பத்திரிகை தமிழில் வெளிவந்தது. அதில் பல்வேறு   அறிவியல்  சொற்களைப் பயன்படுத்தினர். தத்துவ போதினியிலும் பயன்படுத்தினர். தத்துவ விவேசினியும் அவ்வகையில் செயல்பட்டுள்ளது. Hydrogen ஜலவாயு, Nitrogen – உப்பு வாயு, Iodine – இயோதகம், Fluorine- விலூறம், Ammonium – அமோனதம்  என மொழியாக்கக்  கலைச்சொற்கள் தத்துவவிவேசினி இதழில் இடம்  பெற்றுள்ளதைக் காண்கிறோம்.

8. இதழ்களின் பதிப்பாளர் என்ற வகையில் நீங்கள் சந்தித்த மிக முக்கியமான சவால்கள் யாவை? இத்தகைய தொகுப்பு வேலைகளை மேலும் சீரியவகையில் செய்துமுடிக்க ஆராய்ச்சியாளருக்கு என்னென்ன வசதிகளும், வாய்ப்புகளும் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்?

மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இவ்விதழ்களை ஒருகட்டத்தில்  நோட்டில் எழுதினோம். சுமார் இருபது பெரிய அளவிலான லெட்ஜர் நோட்டில் எழுதினோம். பின்னர் கணிப்பொறியில் ஸ்கேன் செய்து, பெரிதுபடுத்தி, படிகளை எடுத்து அதனை தட்டச்சு செய்யப் பயன்படுத்தினோம். கட்டுரைகளில் தொடர்ச்சி அறுபட்டுப் போன பகுதிகளுக்குப் புள்ளி இட்டுப் பதிப்பித்துள்ளோம். ஓலைச்சுவடிகளைப் பதிப்பிப்பது போன்றது இவ்வேலை. இறுதிக் கட்டத்தில் நியுசெஞ்சுரி நிறுவன ஊழியர்கள் பெரிதும் உதவினர். சில ஆண்டுகளுக்கு முன் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் மூலம் சுமார் 1000 பக்கங்கள் தட்டச்சு செய்தோம்.
எனக்குக் கிடைத்த எனது மாணவ நண்பர்களின் உழைப்பு இல்லாவிட்டால், இதனை முடித்திருக்க முடியாது. கணிப்பொறி வழி சில பணிகளை எளிதாகச் செய்யமுடிகிறது. பயமுறுத்தும் வேலை என்பதால் சுமார் 12 ஆண்டுகள் விட்டுவிட்டு வேலை செய்யவேண்டி வந்தது. பல்வேறு வசதிகளையும் பெற்றுள்ள நிறுவனங்கள் இவ்வகைப் பணிகளைச் செய்யவேண்டும். தமிழில் உள்ள வரலாற்று ஆவணங்களாக அமையும்.  கடந்த 150 ஆண்டுகளில் வெளிவந்துள்ள இதழ்களை, ஓலைச்சுவடிகளைப் போல பதிப்பிப்பது அவசியம்.

9. இதழின் மொத்த உள்ளடக்கத்தையும் தொகுத்துள்ளீர்களா? இல்லை எனில் விடுபட்ட பகுதிகள் யாவை? அவற்றை ஏன் தொகுக்க முடியாமற் போனது?

தத்துவவிவேசினியில் தலையங்கம் போன்ற முதற்பகுதி, பின்னர் கட்டுரைகள், இறுதியில் இதழியல் பாணியில் அமைந்த வர்த்தமானம், கடிதங்கள், குறுமொழி, வர்த்தமான சங்கிரகம், விளம்பரங்கள், செய்திக் குறிப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் 97 சதவீதம் தொகுத்துவிட்டோம். முற்றிலும் சிதைந்த கட்டுரைகள்,  வர்த்தமானப் பகுதியில் உள்ள அந்தக் கால நிகழ்வுகள் சில ஆகியவை விடுபட்டவை. தொகுதி எண்; இதழ் எண் என்பதை கால ஒழுங்கில் நிரலாகத் தொகுத்துள்ளோம். இதழ் வெளிவந்த நாள், தொகுதியின் இறுதியில் கொடுத்துள்ளோம்.

10. தத்துவ விவேசினி  இதழ்களைத் தொகுத்தல் என்பது மிகப்பெரிய பணி. கடினமானதும் கூட. கட்டுரைகளையும் செய்திகளையும் பிரித்து அவற்றைக் குறிப்பிட்ட தலைப்புகளில் அடக்குதல் என்பதை எந்த அடிப்படையில் செய்தீர்கள்?

சென்னை இலௌகிக சங்கம் என்னும் அமைப்பு குறித்த அனைத்து விவரங்கள், விளம்பரங்கள், அறிக்கைகள் உட்பட அனைத்தையும் முதல்தொகுதியில் இணைத்துள்ளோம். இவ்வியக்கத்தின் முக்கிய அறிவிப்புகள் மூலம், அதன் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளமுடியும். இவ்வியக்கம் நடைமுறைப்படுத்திய கடவுள் கோட்பாடு குறித்த பொருண்மைகள் இரண்டாம் தொகுதியாக அமைகிறது. சாதி, சமயம் மற்றும் பெண்கள் தொடர்பான இவ்வியக்கம் முன்னெடுத்த கருத்துநிலைகள் சார்ந்த கட்டுரைகள் மூன்றாம் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. சென்னை இலௌகிகசங்கம் பிரச்சாரப்படுத்திய அறிவியல்செய்திகள், மூடநம்பிக்கைக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் காலனிய அரசை இவர்கள் எதிர்கொண்ட முறைமைகள் நான்காம் தொகுதியாக அமைகிறது. ஆங்கிலத்தில் உள்ள ஐந்து மற்றும் ஆறாம் தொகுதிகள் The Thinker இதழில் வெளிவந்த கடவுள் மறுப்பு, அறிவியல், வறுமை மற்றும் பெண்கள் குறித்த செய்திகளின் தொகுப்பாக அமைகிறது. சுமார் 3500 பக்கங்களைக் கொண்ட  இத்தொகுதிகளை வெளியிட்ட நியுசெஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு எங்களது  நன்றி  என்றும் உரியது.

                                                                                                                                              

Share.

About Author

Leave A Reply