பெண்ணிய நோக்கில் மட்டுமே எழுதிய படைப்பாளி ராஜம் கிருஷ்ணன்

0

பா.ஜீவசுந்தரி

 1980களில் நான் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானவர் ராஜம் கிருஷ்ணன். அவரும் ஒரு உறுப்பினராக அவ்வமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதற்கு முன்பே அவரின் நாவல்கள், சிறுகதைகளை நான் படித்திருந்தபோதும் அவரின் அறிமுகம் ஏற்பட்ட பின்னரே அனைத்து நூல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். நாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு (மித்ரா என்னும் பெயரில் நிறைய மொழிபெயர்ப்புகள், மலையாளத்திலிருந்து ஏராளம் மொழிபெயர்ப்புகள்), ‘மஞ்சரி’ இதழில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சிறுவர்களுக்கான படைப்புகள் என்று அனைத்துத் தளத்திலும் இயங்கியவர். 1950 களில் எழுதத் தொடங்கி பிரபலமான லட்சுமி, அநுத்தமா போன்ற பெண் எழுத்தாளர்களெல்லாம் மணிப்பிரவாள நடையிலும், பிராமண நடையிலும் பெரும்பாலும் எழுதிக்கொண்டிருந்த நிலையில் சாதாரண மக்கள் பேசும் மொழியில் எழுதியவர் ராஜம் கிருஷ்ணன். மேலும் அவர் பல நாவல்கள், சிறுகதைகள் எழுதிய போதும் அவரது நாவலான ரோஜாவின் இதழ்கள் மட்டுமே பிராமண மொழியில் எழுதப்பட்டது. மற்ற அவரது பெரும்பாலான படைப்புகள் அடித்தட்டு மக்களான பழங்குடியினர், தலித் விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், சிறிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஆகியோரின் அவல வாழ்க்கையை வெளிச்சமிட்டுக் காட்டுபவை. ‘பெண் குரல்‘ நாவலும் கூட கூட்டுக் குடும்பங்களில் வாழ நேரும் பெண்களின் அழுத்தப்பட்ட குரலாகத்தான் வெளிப்பட்டது. மற்ற அவரது நாவல் பரப்பு சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்கள் வரை விரிந்து பரந்து ஒரு இந்தியத் தன்மையை அளிப்பவை. தமிழ் நாவல் பரப்பில் எழுதியவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்கள் தமது எழுத்தில் ஆய்வு நோக்கைக் கொண்டிருந்தார்கள் எனச் சொல்ல முடியாது. மேனாட்டு இலக்கியவாதிகள் மட்டுமே அடுத்த தமது நாவல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, அதற்கான களத்தைத் தேர்வு செய்து, அந்தப் பகுதிக்கே நேரில் சென்று அந்த மக்களோடு வாழ்ந்து அவர்கள் பிரச்சனைகளை அறிந்து அவர்கள் வாழ்க்கை மொழியில் புனைவாகப் படைக்கும் தன்மையைக் கொண்டிருந்தனர். இவ்வாறு ஆய்வு நோக்கில் இலக்கியங்கள் படைப்பதற்கான உந்துதல் அற்புதமானது. அத்தகைய மக்கள் மைய நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களாகவும் விலகியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் சமூகக் கண்ணோட்டம் கொண்டவர்களாலேயே இத்தகையை முன்முயற்சிகளை மேற்கொள்ள இயலும். இந்தியாவில் இத்தகைய ஆய்வு நோக்கில் எழுதிய முக்கிய நாவலாசிரியராக வங்க மொழியில் எழுதி வரும் மகாஸ்வேதா தேவியைக் குறிப்பிடலாம். தமிழ் இலக்கியமும் அத்தகைய அற்புத நோக்கம் கொண்டவரைப் பெற்றிருந்தது என்றால், அப்படியான ஒரு முறையைத் தொடங்கி வெற்றி பெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்தான். இன்று பலரும் இம்முறையில் களஆய்வு மட்டுமல்லாமல் ஆவணக்காப்பகங்களில் இருந்தெல்லாம் தரவுகளைத் திரட்டி, சேகரித்து எழுதுகிறார்கள். இன்று தமிழ் இலக்கிய உலகமே மிகப்பெரும் தகவல் தேடலில் இறங்கியுள்ளது. ஆனால், அக்காலத்தில் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் அடித்தட்டு மக்களைத் தேடித் தேடிச் சென்று நாவல்கள் எழுதியபோது அவருக்கு எதிராகக் கடும் விமர்சனம் எழுந்தது. கலை கலைக்காகவே என்ற வாதத்தை முன் வைத்த உன்னத எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணன் நாவல்களை செயற்கையானவை என்று புறக்கணித்தனர். ‘படைப்பு உள்ளே இருந்து வர வேண்டும். இயல்பாக இருக்க வேண்டும். களஆய்வு செய்து எழுதுவது இலக்கியமாக வாராது. அது வெறும் ரிப்போர்ட்டிங் ஆகத்தான் இருக்கும்’ என கிண்டல் கலந்து விமர்சித்தனர். மேலும், இந்த விமர்சனங்களில் ‘ஒரு பொம்மனாட்டி ஏன் இப்படி ஊர், ஊராகத் திரிந்து எழுதணும்?‘ என்ற ஆண் திமிரும் நஞ்சாகக் கலந்திருந்தது மறுக்க முடியாத உண்மை. ஆனால், ராஜம் கிருஷ்ணன் தமது படைப்பு மற்றும் அதன் இலக்கு குறித்துத் தீர்க்கமான பார்வை உள்ளவர். மேலும், இத்தகைய கிண்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் தக்க பதிலடி தந்துளார். இன்றும் கூட தமது முதிர்ந்த வயதில் தனிப்பட்டு வாழும் நிலையிலும்கூட கணீர்குரலில் கறாரான விமர்சனங்களையும், கருத்துக்களையும் முன்வைத்து வருகிறார். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளிக்கிறார்: ‘ஒரு நாவல் என்பது, நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான். ஆனால், மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும் நிலைகளிலும் ‘பிரத்யட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டி விட்ட சுரங்களைக் கொண்டு நான் இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவலென்று கருதுகிறேன். இவ்வாறு புதிய புதிய அநுபவங்களை நாடி புதிய புதிய களங்களுக்குச் செல்கிறேன்.’ இதை அவர் எழுதியது 1978ல். இன்று ஏகத்துக்கு வளர்ந்திருக்கும் தமிழிலக்கியப் பரப்பினின்று இச் சொல்லாடலை மறுவாசிப்பு செய்யும்போது அவரது தொலைநோக்கு ஆச்சரியப்பட வைக்கிறது. கலை கலைக்காகவே கோட்பாடுகள் நொறுங்கிப் போயுள்ளன. இலக்கியம் இன்று பண்பாட்டுச் செயல்பாடாகவே மாறி உள்ளது. இலக்கியம் என்பது பலதரப்பட்ட வாழ்க்கையின் உண்மை தரிசனம் பிரத்தியட்சம் என்கிறார். இன்று வட்டார இலக்கியங்களும் தலித்திய பெண்ணிய விளிம்புநிலை மக்களுக்கான இலக்கியங்களும் இதைத்தான் முன்வைத்து எழுதப்படுகின்றன. அப்படியானால் அடித்தட்டு மக்களுக்கான இலக்கியம் குறித்த ஒரு முன்னோடிப்பார்வை அவரிடம் இருந்தது. அதையட்டியே அவர் படைப்புகளைத் தேர்வு செய்துள்ளார். இதற்கான தேடலாகவும், படைப்புகளாகவுமே அவரது பயணம் இருந்துள்ளது. உதாரணமாக, இடிந்தகரையில் மீனவர்களே கிடையாது என மத்தியஅரசு இன்றைக்கு அடித்துச் சத்தியம் செய்கிறது. கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் மீனவர்களே கிடையாது. அது மீன் வளம் மிகுந்த பகுதியே அல்ல என்றெல்லாம் மத்திய அரசும் அணுமின் நிலைய ஆதரவாளர்களும் எதிர்ப்பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் இடிந்தகரை, மணப்பாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அரிய சுறா மீன்களை அதிகம் கொண்ட பகுதி, இதன் இறக்கையும் வாலும் துவி என அழைக்கப்படுகின்றன; இது விலை உயர்ந்தது; அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மீனவ மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. அப்பகுதியில் வாழ்ந்த மீனவர்களின் இழி நிலையைப் பயன்படுத்திக் கொள்ள தேவாலயங்கள் முன்வந்த கதையையும், கழிவுப்பொருள் என்ற பெயரில் துவியைப் பெற்று தேவாலயங்கள்ஏற்றுமதி செய்துப் பணமாக்கிக் கொண்டு மீனவர்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் 1970களிலேயே தமது ‘அலைவாய்க்கரையில்‘ நாவலில் போட்டுடைக்கிறார். மீனவ மக்களுக்கும் தேவாலயங்களுக்கும் இடையே ஏற்படும் துவி பங்கு தொடர்பான பிரச்சனையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள் அங்கு நுழைந்து அவர்களை மதமாற்றம் செய்து அவர்களிடையே கலவரமேற்படுத்த முயல்வது குறித்தும் கூறிச் செல்லும் இந்த நாவல் 1960களில் அப்பகுதியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. இதேபோல, தூத்துக்குடி மீனவர்கள் வாழ்க்கையை உப்பளத் தொழில் பின்னணியில் ‘கரிப்பு மணிகள்‘ என்ற தலைப்பில் நாவலாக எழுதியுள்ளார். அடுத்த படைப்பாகக் குறிப்பிட வேண்டிய நாவல் குறிஞ்சித் தேன். நீலகிரி மலைப்பகுதியில் வாழும் படகர் இன மக்களின் வாழ்க்கை முறை குறித்து நீண்ட ஆய்வுக்குப் பின் எழுதப்பட்ட நாவல். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஐந்து குறிஞ்சிப் பருவங்களில் (குறிஞ்சிப் பருவம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலரின் பூக்கும் காலத்தை அடிப்படையாகக் கொண்டது.) அதாவது அறுபது ஆண்டுகளில், படுகர் இன மக்கள் எவ்வாறு தமது பாரம்பரிய விவசாய முறைகளைக் கைவிட்டு பணப்பயிரான தேயிலை விவசாயத்துக்கு மாறுகிறார்கள் என்பதைக் கூறிச் செல்கிறது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழும் மலைவாழ் மக்கள் அதிகபட்சமாக தினை, சாமை, வரகு, கிழங்குகள் போன்றவற்றை மட்டுமே பயிரிட்டு மலைவளத்தையும், வன வளத்தையுமே பன்னெடுங்காலம் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்ததையும், நவீன வாழ்க்கை முறை தரும் நெருக்கடிகளால் உந்தப்பட்டு பாரம்பரிய விவசாய முறையைக் கைவிட்டு தங்கள் சிறு நிலங்களில் தேயிலை பயிரிட நேரும் அவலத்தையும் பொருளாதார வாழ்வியலுடன் அது அவர்களது பண்பாட்டு வாழ்க்கையிலும் மாற்றங்களை உருவாக்குவதை 1960களின் தொடக்கத்திலேயே பதிவு செய்துள்ளார். ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்தது ‘வேருக்கு நீர்‘ நாவல். தனது கணவரின் பணியிட நிமித்தமாகவும், நாவல்களுக்கான களங்களையும் தேடியவரது பயணங்கள் அவரது அரசியல் பார்வையையும் பாதித்துள்ளது. குறிப்பாக, கோவா விடுதலைப் போராட்டம் குறித்து அறிவதற்கான தேடலில் ஈடுபட்டபோது (வளைக்கரம் நாவல்)அஹிம்சையால்தான் நாடு விடுதலை அடைந்தது என்ற கூற்று அவருக்கு முழுமையாகப் படவில்லை. நாட்டு விடுதலையில் ஆயுதங்களுக்கும் வன்முறைக்கும் பங்கு இருந்ததை உணர்கிறார். மேலும் பல பகுதிகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களிலும் ஆயுதங்களும் வன்முறையும் முக்கியப் பங்காற்றியதை உணர்கிறார். விடுதலைக்குப் பின்னர் 1960களில் பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் பயணம் மேற்கொண்டபோது அங்கு அரசியலில் வன்முறை தொடர்ந்து நீடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். இப் பின்னணியில் உண்மையான சத்தியாக்கிரகம் என்பது என்ன? காந்தியடிகள் கூறிய அஹிம்சை வழி என்பது கைகூடாத கனவா என்ற சுய ஆய்வே ‘வேருக்கு நீர்‘ நாவலாக வெளிப்பட்டது. அதே போல், ‘முள்ளும் மலர்ந்தது’ என்ற சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையரைப் பற்றிய நாவல் மிகவும் பிரசித்தி பெற்றதற்குக் காரணம், இவர் நேரடியாக அவர்களை சந்தித்துப் பேசியதாலேயே! இதற்காகத் தனது கணவரின் பணியையே உதறிவிட்டு வரச் சொல்லி அவர்களைத் தேடிப் போனவர். இவரது நாவல்களில் மிக முக்கியப் படைப்பாக கருதப்படக்கூடியது ‘பாதையில் பதிந்த அடிகள்‘ நாவல் ஆகும். வரலாற்றில் மறந்துபோன முகமான மணலூர் மணியம்மையார் என்ற முக்கியமான ஆளுமையைப் பற்றிய நாவல். கீழத்தஞ்சைப் பகுதியில் காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த அடிமைத் தொழிலாளர்கள் வீறு கொண்டு எழுந்து பண்ணயடிமை முறைக்கு எதிராகப் போராடத் தூண்டிய இவரை தஞ்சைத் தரணி இன்றும் மறக்காமல், தங்கள் நாட்டுப்பாடல்களில் மணியம்மா என்றே அழைத்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இவர் பிராமண குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலேயே விதவையானவர். ஒருமுறை இவரது கிராமத்துக்கு சங்கராச்சாரியார் வருகிறார் என கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றபோது, ‘மொட்டைப் பாப்பாத்திக்கு பரமாச்சார்யாள் தரிசனமா?‘ என அவமானப் படுத்தப்படுகிறார். அதன் பின்னர் சனாதனக் கட்டுப்பாடுகளை மீறி மக்களின் அடிமைத்தளையை எதிர்த்துப் போராட தம்மை அர்ப்பணிக்கிறார். பொது உடமை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். இதனால் ஆதிக்க சாதியினரின் ஏவல் நாய்களின் தாக்குதலைச் சந்திக்க சிலம்பம் பயில்கிறார். பெண் என்னும் தனது அடையாளத்தை நிறுவும் புடவை துறந்து வேட்டி சட்டை அணிந்து கொண்டு, தலைமுடி வளர்த்து கிராப் வைத்துக்கொள்கிறார். மக்கள் அவரை அம்மா என்றும் அவரது இயக்கத்தை அம்மா கட்சி என்றும் அழைத்தனர். இந்த நாவல் எழுதப்பட்டிருக்காவிட்டால் மணலூர் மணியம்மையின் வாழ்க்கை பற்றி பரவலாக வெளியே தெரியாமலே போயிருக்கும். இதற்கான உழைப்பு பற்றிக் கேள்விப்படுகையில் மலைப்பாக இருக்கிறது. அவரது வாழ்க்கை குறித்த தகவல்களின் நம்பகத்தன்மைக்காகப் பெரிதும் உழைத்திருக்கிறார். சுமார் நூற்றுக்கும் அதிகமான இயக்கத்தவர்கள், பொதுமக்களைச் சந்தித்து மீண்டும் மீண்டும் தகவல்களை உறுதி செய்துள்ளார். அறுபது வயதைக் கடந்த நிலையிலும் துல்லியமான தகவல்களுக்காகப் பாடுபட்டு மணியம்மையார் குறித்த அசலான சித்திரத்தை தமிழுக்கு அளித்துள்ளார். இந்த நாவல் ‘தினமணி கதிரில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல ‘காலந்தோறும் பெண்‘ என்ற கட்டுரைத் தொடரும் ராஜம் கிருஷ்ணன் படைப்புகளில் முக்கியமானது. காலம் மாறினாலும் மாறாத ஆணாதிக்கச் சிந்தனைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அறிவுப்பூர்வமான தாக்குதல் எனலாம். ஒருவகையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுத் தாக்குதலாகவும் இக்கட்டுரைத் தொடர் அமைந்துள்ளது. இவர் அத்தனை நாவல்களையும், கட்டுரைகளையும் பெண்ணிய நோக்கில் இருந்துதான் எழுதியுள்ளார். அதேபோல தான் ஒரு பெண் என்ற அடிப்படையில் வழங்கப்படும் எந்தச் சலுகையையும் நிராகரித்து வாழ்ந்து வருபவர். ஒருமுறை, ‘பெண் என்ற அடிப்படையில் இதுவரை பெண்கள் யாருக்கும் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படாததால் இம்முறை இராஜம் கிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கலாம்‘ என விருதுக்குழு முடிவு செய்தபோது சண்டைக்கோழியாகச் சீறி அதைத் தாம் நிராகரித்து விட்டதாகவும், ‘படைப்பின் தரத்தை வைத்தே விருது வழங்க உள்ளோம்‘ என்று அறிவித்த பின்னரே விருது பெற்றதாக நான் ‘ஆறாம்திணை‘ இணைய இதழுக்காக அவரை நேர்காணல் செய்தபோது கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது. சாகித்ய அகாதமி விருது 1973, பாரதீய பாஷா விருது 1975, சோவியத்நாடு நேரு விருது 1975, நியூயார்க் ஹெரால்டு சர்வதேச விருது 1950 (பெண்ணியப் பார்வையை வெளிப்படுத்தும் எழுத்துகளுக்காக ஆசியாவிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்து வழங்கப்படும் விருது), கலைமகள் நாராயணசாமி விருது 1953, திரு.வி.க. விருது 1991, இலக்கியச்சிந்தனை பரிசு பட்டியலிட முடியாத அளவு நூல்களின் எண்ணிக்கை, பலதரப்பட்ட விருதுகள், இவரின் அனைத்துப் படைப்புகளையும் குறித்து எழுத இவ்விதழ் முழுமையும் காணாது. கணவரின் மறைவுக்குப் பிறகு தனித்து வாழும் நிலை, இப்போது இவரின் வாழ்க்கையே ஒரு கதையாகிப் போனது. பிள்ளைகள் இல்லாத நிலையில் தனது படைப்புகளை தான் இருக்கும் போதே நாட்டுடைமையாக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அரசு நாட்டுடைமை ஆக்கியது. ஆனால் 88 வயதிலும் தனி ஒருவராக நின்று வாழ்க்கைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைதான் தமிழின் மூத்த எழுத்தாளரின் நிலை என்பது வேதனைக்குரியது. தனக்காக எவர் ஒருவர் வேதனைப்படுவதையும் சலுகைகள் அளிப்பதையும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். தற்போது இராமச்சந்திரா மருத்துவமனையே வாழ்க்கையாக நிர்பந்திக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார். வயதின் முதிர்ச்சி அவரை வாட்டமுறச் செய்தாலும் குரலின் தீட்சண்யம் கொஞ்சமும் குறையாமல் பேசுகிறார். தனிமையில் வாடும் அவர் யாராவது வந்து சந்தித்து இலக்கியம் குறித்தும் சமூகப் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தால் மகிழ்ச்சி அடைவார். படைப்புகள் சில… கூட்டுக் குஞ்சுகள் வனதேவியின் மைந்தர்கள் உத்தரகாண்டம் மாறி மாறி பின்னும் மலர்கள் பாதையில் பதித்த அடிகள் உயிர் விளையும் நிலங்கள் புதியதோர் உலகம் செய்வோம் பெண் விடுதலை இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை காலந்தோறும் பெண்மை கரிப்பு மணிகள் வளைக்கரம் ஊசியும் உணர்வும் வேருக்கு நீர் பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி இடிபாடுகள் அலை வாய்க்கரையில் சத்திய தரிசனம் கூடுகள் அவள் முள்ளும் மலர்ந்தது 

Share.

About Author

Leave A Reply