ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

0

 சா.கந்தசாமி

 ஏப்ரல் 23 உலக புத்தகதினம். 1995ஆம் ஆண்டில் ஐ,நா.சபையின் கலாச்சார நிறுவனம், உறுப்பு நாடுகள் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பரப்ப உலக புத்தக தினம் கொண்டாடும்படி கேட்டுக் கொண்டது. ஏனெனில் அது ஐரோப்பாவில் நவீன இலக்கிய கர்த்தாக்களான ஷேக்ஸ்பியர் பிறந்த தினம்; செர்வாண்டீஸ் இறந்த தினம் ஆகும். ஆங்கில ஸ்பானிஸ் மொழி எழுத்தாளர்களை முன்நிறுத்தி உலக எழுத்தாளர்கள் அனைவரின் படைப்புக்களையும் பிரபல்யப்படுத்தும் விதமாகவும் காப்புரிமை தினமாகவும் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகம் என்பது பள்ளிக்கூட பாட புத்தகம் மட்டுமல்ல. அதற்கு அப்பால் அறிவியல், புனைகதை, கவிதை வானவியல், தத்துவம் ஆன்மீகம்- என பல்வேறு புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் ஒரு துறையில் எவ்வளவுதான் படித்திருந்தாலும் அது மட்டுமே படிப்பு கிடையாது. இசை, இலக்கியம் என்று படிக்க வேண்டும். அந்தப் பொது படிப்புதான் மனிதர்கள் மனத்தில் இருக்கும் கசடுகளை அகற்றி இன்பமும் சமூக இணக்கமும் அளிக்கிறது. எனவேதான் சிறு வயதில் இருந்து புத்தகம் படிக்கும் வழக்கத்தைத் தொடங்க வேண்டும் என்கிறார்கள். உலக புத்தக தினத்தின் நோக்கங்களில் ஒன்று இளமையில் கல் என்பதுதான். அது உலகத்தின் உச்சியில் இருக்கும் கனடா நாட்டில் இருந்து கடைக்கோடியில் இருக்கும் ஆஸ்திரேலியா வரையிலும் எல்லா நாட்டிற்கும் ஏற்புடையதாக இருக்கிறது. ஒவ்வொரு நாடும் தன்னளவில் அரசு சார்பாகவும், எழுத்தாளர் சங்கங்கள், பதிப்¢பகங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக் கூடங்கள், சார்பாகவும் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தகங்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டு வருகின்றன. புத்தகம் என்பது கல்வெட்டோ, செப்புத் தகடோ, பனைவோலையோ, காகிதமோ கிடையாது. அது மனித அறிவின் உச்சம். புத்தகம் ஒரு மனிதனால் எழுதப்பட்டதுதான் என்றாலும் அது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. அறிவைத் துலக்கி மிளிர வைக்கிறது. அஞ்ஞானம் என்பதை அகற்றி ஞானம் கொள்ள வழிகாட்டுகிறது. நியாயத்திற்கு ஆதரவாகவும், அநியாயத்திற்கு எதிராகவும் செயல்பட வைக்கிறது. அன்பு, கருணை, பாசம், நேசம் என்பதை மனிதர்கள் மேல்தான் என்று இன்றி உலகத்தில் வாழும் பறவைகள், விலங்குகள் என்று சகல ஜீவன்கள் மீதும் பற்றுக் கொள்ள வைக்கிறது. இறுகிக் கிடக்கும் மனங்களைப் பூ போல மலர வைக்கிறது. அறிந்ததைவிட அறியாதது அதிகம் என்று மனித அகம்பாவத்தை அடக்கி வைக்கிறது. எனவேதான் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழியிலும் புத்தகங்கள் எழுதப்படுகிறது. படிக்கப் படுகிறது. ஒன்று போலிருக்கும் மனிதர்கள்தான் எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள். அதாவது மனிதர்களுக்கிடையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் அவர்கள் ஒரே மொழி பேசுவது கிடையாது. ஒரே எழுத்து முறையில் எழுதுவது இல்லை. உலகத்தில் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் மனிதர்களால் பேசப்படுகிறது. எத்தனை மொழிகள் பேசினாலும், எத்தனை விதமான எழுத்துக்களில் எழுதினாலும் எவ்வளவு காலத்திற்கு முன்பு எழுதியிருந்தாலும் நிகழ்காலத்தில் படைத்து இருந்தாலும் அடிப்படையான அம்சம் மனம் என்பது ஒன்றாகவே இருக்கிறது. அது எழுதப்பட்டதின் வழியாகவும், எழுதாமல் விட்டிருப்பதின் மூலமாகவும் தெரிகிறது. சிலர் அதனை அறிந்து எழுதினார்கள். பலர் அறியாமல் எழுதினார்கள். எப்படி எழுதினாலும் எத்தனை நாடுகளுக்கு நாடு விட்டு நாடு சென்று வாழ்ந்தாலும் எந்த மொழியில் படித்தாலும் தங்களை இனங்கண்டு கொள்ள முடிகிறது என்பதே புத்தகம் என்பதின் பொருளாக இருக்கிறது. அசலான புத்தகம் மொழி, எழுத்து என்னும் இடர்களைக் கடந்து மனித மனத்திற்கு ஊடுருவி விடுகிறது. அதுதான் எழுத்து, படைப்பு என்பதின் மகத்துவம். எனவேதான் புத்தகம் எந்த மொழியில், எந்த வரிவடிவத்தில் எழுதப்பட்டது என்பது முக்கியமல்ல. எழுதப்பட்ட மொழி செம்மொழியா? புது மொழியா; பேச்சு வழக்கில் இருக்கும் மொழியா? ஒரு பொழுதும் பேசப்படாத மொழியா என்பதெல்லாம் புத்தகம் என்பதற்கு அர்த்தம் இல்லை. கலைஞனால், ஞானியால் எழுதப்பட்டது என்றால் அது ஜீவிதமாக இருக்கிறது. அவன் எழுதிய புத்தகம், நூல், பனுவல் ஜீவிப்பது வெளிகாரணங்களால் கிடையாது. அதனுள் அமிந்து இருக்கும் ஜீவனாலேயே ஜிவிக்கிறது. படைப்பு இலக்கியம் மட்டுந்தான் என்றென்றும் வாழும் என்பது இல்லை. எல்லோர்க்குமான யார் என்ன சொன்னாலும் என்ன எழுதி வைத்தாலும் அது உயிர்ப்புடன் இருக்கும். காலம் காலமாகப் படிக்கப்படும். ஒரு புத்தகம் படிக்கப்படவில்லை என்பதற்காக இல்லாமல் போய்விட்டது என்பது கிடையாது. ஏசுநாதர் பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டிற்கு முன்னால் செகோபடோமியாவை ஹம்ராபி என்ற மன்னன் ஆண்டான். அவன் கடவுள் தனக்கு நீதி வழங்கும் அதிகாரம் கொடுத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு சட்டம் நீதி பற்றி கல்வெட்டில் பொறித்து வைத்தான். அவன்தான் சட்டத்தையும் நீதியையும் அதாவது குற்றம் தண்டனை பற்றி எழுதி வைத்த முதன் மன்னன். பல நூற்றாண்டுகளுக்கு அவன் சுக்காட்டான் மொழியில் எழுதி வைத்தது படிக்கப்படாமல்தான் இருந்தது. ஆனால் பல நாடுகள் அவன் எழுதி வைத்திருந்தபடி அதாவது கொலைக்குக் கொலை பல்லுக்குப் பல் என்றுதான் தீர்ப்பு வழங்கின சட்டம், நீதி என்றால் அதனை அறிந்து எழுதி வைத்த ஹம்ராபி முதலில் இருக்கிறான். புத்தரின் தர்ம உபதேசத்தை அவர்க்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகள் கழித்து மகதநாட்டின் மன்னனான அசோகன்; பாலி, பிராகிருதம், கிரேக்க மொழிகளில் கல்வெட்டில் எழுதி வைத்தான். அசோகன் காலத்து புத்தகம் அதுதான். தேவனாம்பிரியன் என்று தன்னை அழைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தானத்தில் இருந்து கர்நாடகா வரையில் தன்னாட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளிலும் எல்லாம் கல்வெட்டுக்கள் வைத்தான். அசோகன் கல்வெட்டில் செதுக்கி வைத்த புத்தகங்கள் ஜீவிதமாக இருக்கின்றன. புத்தகங்களுக்கு ஆதரவாக பல மன்னர்கள் இருந்தார்கள். எழுத்தாளர்களுக்குப் பரிசு கொடுத்தார்கள். பதவி கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டார்கள். வேறு சில மன்னர்கள் படிப்பு, புத்தகம் என்பதற்கு எதிராக இருந்தார்கள். சீனாவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஹவி வான் தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் அப்படியன்றும் நல்ல மன்னன் இல்லை. அதனால் தன்னைப் பற்றியும் தன் பரம்பரையாளர் பற்றியும் எழுத்தாளர்கள் என்ன மாதிரி எழுதுகிறார்களோ என்று பயந்தான். மேலும் மக்கள் அவர்களின் புத்தகங்களைப் படித்து தன் பரம்பரையினர்க்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என கருதினான். அதனால் தன் நாட்டில் புத்தகங்களே இருக்கக்கூடாது என்று உத்தரவு போட்டான். அதன்படி புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அவன் காலத்தில் புத்தகங்கள் மரப்பலகைகளாக இருந்தன. எனவே எளிதில் எரிக்கப்பட்டன. சில வகை புத்தகங்கள் சீன நெடுஞ்சுவரில் புதைக்கப்பட்டன. அலெக்சாண்டர் எகிப்தில் மகத்தான ஒரு நகரத்தை அமைத்தான். அதற்கு அலக்சாண்டரியா என்று தன் பெயரையே வைத்தான். பெரிய நகரத்தில் நல்ல நூலகம் ஒன்றை அமைத்தான். பல மொழி நூல்களை அதில் சேர்த்து வைத்தான். அவனுக்குப் பிறகு எகிப்தை கைப்பற்றிய ரோமானியர்கள் அலெக்சாண்டரியா நூலகத்தை எரித்தார்கள். நூலகம் மூன்று மாதத்திற்கு மேல் எரிந்தது. ஏழாம் நூற்றாண்டில் புத்த கயாவை அடுத்திருந்த நளந்தா பல்கலைக் கழகத்தில் ஒரு நூலகம் இருந்தது. அதில் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம், திபத்திய மொழி என்று பல்வேறு மொழியில் எழுதப்பட்ட நூல்கள் இருந்தன. சீன யாத்திரிகன் நளந்தா நூலகம் பற்றி எழுதி வைத்து இருக்கிறான். அன்பையும், அகிம்சையையும் போதிக்கும் நூல்கள், மருத்துவ நூல்கள் அதிகமாக இருந்தன. பதிமூன்றாம் நூற்றாண்டில் நளந்தாவிற்குள் பெரும்படையுடன் புகுந்த கில்ஜி நூலகத்தைப் பார்த்து வெறுப்படைந்தான். புத்தகம் சத்துரு என்று நினைத்தான். எனவே நூலகத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினான். அவனுக்கு இஸ்லாமியத்திற்கு எதிரான நூல்கள் எதிரி என்பது இல்லை. இஸ்லாமியத்தைப் பற்றி பேசாத நூல்கள் கூட எதிர்ப்பு நூல்களாகப்பட்டன. சமய சம்பந்தமான மாற்று சமய நூல்கள்தான் எரிக்கப்பட்டன தடை செய்யப்பட்டன என்பது இல்லை. சுதந்திரம் சுதேசம் பற்றிய புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. புத்தகம் என்பதை சர்வாதிகார அரசுகள் மக்கள் ஆயுதமாகவே கருதினார்கள். ஒரு புத்தகத்தைத் தீயிட அதை எழுதிய ஆசிரியர் உயிரோடு இருக்க வேண்டும் என்பதில்லை. அசலான புத்தகம் ஆசிரியர் இறந்த பிறகும் உயிரோடு இருக்கிறது. எனவே புத்தகத்திற்குத் தடை போட்டார்கள். கொளுத்தினார்கள். 1928ஆம் ஆண்டில் பர்மாவில் பாரதியார் பாடல்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே புத்தகத்தைப் பறிமுதல் செய்தார்கள். அப்பொழுது பர்மா பிரிட்டீஸ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே சென்னை ராஜஸ்தானியிலும் பாரதியார் பாடல்களுக்குத் தடை போட்டார்கள். புத்தகங்களை பறிமுதல் செய்ய ஆரம்பித்தார்கள். சத்திய மூர்த்தி சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து பாரதியார் புத்தகத்தின் மீது விதிக்கப்பட்ட தடையையும், பறிமுதல் நடவடிக்கைகளையும் கைவிட வைத்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது, ஜெர்மனி புத்தக எதிர்ப்பிலும் எரிப்பிலும் முன்னே இருந்தது. நாஜி கோட்பாடுகளுக்கு எதிரான புத்தகங்கள் எழுதியவர்கள் என்று காரல் மார்க்ஸ், தாமஸ்மான் ஜாக்லண்டன் ஹிங்காவே என்று பிரகடனப்படுத்தப்பட்டார்கள். 25000க்கு மேற்பட்ட புத்தகங்களை குவித்து வைத்து தீயிட்டு எரித்தார்கள். ஹிட்லர் காலத்தில் புத்தகம் எரிப்பது தேசிய திருவிழா மாதிரி கொண்டாடப்பட்டது. ஆனால் ஜெர்மனியில் புத்தகம் எரிக்கப்பட்டது வரலாற்றின் முரண், ஏனெனில் 1445 ஆம் ஆண்டில் ஜெர்மனியில்தான் புத்தகம் அச்சிடும் நவீன முறை கண்டு பிடிக்கப்பட்டது. அதனைக் கண்டு பிடித்த ஜோனான் கூடன் பர்க் உலகத்தின் மகத்தான பத்து சாதனையாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். அறிவை பரப்புவதில் அவர்க்கு முதலிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதே ஜெர்மனியில் படித்தவர்கள் அதிகமாக இருந்த ஜெர்மனியில் அதிகமாகப் புத்தகம் எரித்தார்கள். 1981ஆம் ஆண்டில் ஸ்ரீலங்காவில் சிங்களவர்கள் ஆசியாவில் பெரிய நூலகங்களில் ஒன்றாக இருந்த யாழ்ப்பாணம் நூலகத்தை தீயிட்டு கொளுத்தினார்கள். சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நூல்களும், அரிய ஓலைச் சுவடிகளும் எரிந்து போயின. ஆனால் புத்தகங்களை தடைபோட்டோ எரித்தோ ஒழித்துவிட முடியாது. Ôபுத்தகங்கள் எரிக்கப்படும்போது ஜ்வாலையில் கருத்துக்கள் பறந்து சென்று விடுகின்றனÕ என்று ஹென்னிறிஸ் பியேல் குறிப்பிட்டார். காற்றைப் போல் புத்தகங்கள் தடையை மீறி நெருப்பில் இருந்து தப்பிச் செல்கின்றன. அவை தண்ணீர் போல தூய்மையும் குளிர்ந்தத் தன்மையும் கொண்டவை. எனவே தான் மனிதர்கள் நல்ல மன்னர்கள் புத்தகங்களைப் போற்றி புகழ்கிறார்கள். பரிசு, விருது அளித்து கௌரவப் படுத்துகிறார்கள். Ôஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்று ஒளவையார் சொன்னது எல்லோருக்கும் எல்லா நாட்டினர்க்கும் சொன்னதுதான். அதுதான் உலக புத்தக தினம். 

Share.

About Author

Leave A Reply