சென்னையும் நூல்களும்

0

சென்னையும் நூல்களும் அரவிந்தன் சென்னைக்கும் புத்தகங்களுக்கும் உள்ள உறவு மிகத் தொன்மையானது மட்டுமின்றி மிக ஆழமானதும்கூட. ஐரோப்பாவிற்கு வெளியே அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகம் தமிழகத்தின் தரங்கம்பாடியில் உருவானது. கி.பி.1554இ-ல் நடந்த இந்த அற்புதத்திற்கு அடுத்த சில ஆண்டு களிலியே சென்னையில் அச்சுத் தொழில் தடம் பதித்துப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. சென்னையில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட பின்புதான் ரஷ்யா, கீரீஸ் மற்றும் ஜப்பானில் புத்தகங்கள் தோன்றின. கோழிக்கோடு வழியாக இந்தியாவிற்கு நுழைந்த போர்ச்சுக்கீசிய கத்தோலிக்க மதப் பரப்பாளர்கள் அவர்களுக்கு அடுத்து வந்த பேனிஷ் ப்ராட்டஸ்டன்ட் பிரிவு கிறிஸ்தவ மதப் பரப்பாளர்கள் ஆகியோர்கள் பைபிளில் சில பகுதிகளை தமிழில் அச்சடித்து இந்தியாவின் புத்தகத் தொழிலுக்குப் பிள்ளையார் சுழி போட்டார்கள். கி.பி 1776-ல் “தம்பிரான் வணக்கம்” என்ற பெயரில் ஆண்ட்ரிக் என்ற பாதிரியார் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரத்தில் வார்க்கப்பட்ட அச்சுக்களின் மூலம் சென்னையில் வெளியிட்ட புத்தகத்தை சென்னையின் முதல் புத்தகம் என்று குறிப்பிடலாம். கத்தோலிக்க ப்ராட்டஸ்டன்ட் உட்பிரிவுகளின் மோதலால் சுமார் 150 ஆண்டுகள் முடங்கிப் போயிருந்த சென்னையின் அச்சுத் தொழில் மீண்டும் 1830 வாக்கில் தொடங்கியபொழுது கிறிஸ்தவ மதப் பிரச்சார நோக்கங்களையும் தாண்டி வேறு பல தளங்களில் செயல்படத் தொடங்கியது. சரவண பெருமாள் அய்யர் மற்றும் நவரச பெருமாள் அய்யர் ஆகிய அச்சுத் தொழில் பற்றிய அறியாத இருவர் இந்து மத சுருதிகளை மக்களிடையே பரப்புவதற்காக 1870-ல் தொடங்கிய சரஸ்வதி அச்சகம் சென்னையின் முதல் பதிப்பகம் என்று அழைக்கப்படலாம். 1950 வரை இயங்கிய இந்தப் பதிப்பகத்தைப் போலப் பல பதிப்பகங்கள் தோன்றின. செசனல் பர்க் என்ற ஜெர்மானியர் நிறுவிய அச்சுக்கூடம் வரலாற்று ஆவணப்படி இந்தியாவின் முதல் அச்சகம் என்ற பெருமையைப் பெற்றிருந் தாலும் அச்சமயத்தில் தோன்றிய பல அச்சகப் பதிப்பகங்களின் வரலாறு சரியாக ஆவணப்படுத்தப் பட வில்லை. 19ஆம் நூற்றாண்டில் தமது 27-வயது வயதிலேயே நாவலர் என்ற சிறப்பு பட்டம் பெற்ற ஆறுமுக நாவலர் சுத்த சைவ சித்தாந்த கருத்துக் களை வெளிப்படுத்தும் பல புத்தகங்களை சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சகங்களை நிறுவி வெளியிட்டார். ** சென்னையில் நூல்களின் வளர்ச்சியும் பரவலாக்கமும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பெரும் முன்னேற்றம் கண்டன. பல்வேறு பதிப்பகங்களும் கன்னிமாரா போன்ற நூலகங்களும் இந்தக் காலகட்டத்தில் உருவாயின. இன்று பல லட்சம் புத்தகங்களுடன் தேசிய நூல் களஞ்சியமாக இருக்கும் கன்னிமாரா உதயமானதற்கு அதிகப்படியாக இருந்த சில நூறு நூல்கள்தான் காரணம் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். கன்னிமாரா உதயமான கதையை அறிய நாம் 19ஆம் நூற்றாண்டுக்குப் போக வேண்டும். இங்கிலாந்தில் உள்ள ஹெய்ல்பரி கல்லூரியில் அவர்கள் தேவைகளுக்கு மேல் நிறைய புத்தகங்கள் இருந்தன. அப்புத்தகங்களை இந்தியாவிற்கு அனுப்பலாம் என அவர்கள் முடிவெடுத்தார்கள். 1861இல் அப்புத்தகங்கள் மெட்ராஸிற்கு வந்து சேர்ந்தன. வந்த புத்தகங்கள் அனைத்தும் சென்னை மியூசியத்தில் ஒப்படைக்கப்பட்டன. 1890வரை அப்புத்தகங்கள் அங்கேதான் இருந்திருக்கின்றன. 1890இல் மெட்ராஸின் கவர்னராக கன்னிமாரா பிரபு இருந்தார். அவர் வாசிப்பில் நாட்டம் கொண்டவர். மெட்ராஸிற்குத் தரமான பொது நூலகம் ஒன்று வேண்டுமென்ற எண்ணம் அவர் மனதில் நெடு நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. மியூசியத்தில் அதிகமாகிவிட்ட புத்தகங்களை வைக்கத் தனிக் கட்டிடம் வேண்டும் என்ற கோரிக்கையும் அப்போது எழுந்தது. 1890இல் புதிய பொது நூலகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் கன்னிமாரா. 1896 டிசம்பர் 5ஆம் நாள் நூலகக் கட்டிடம் திறக்கப்பட்டது. அப்போது ஆர்தர் ஹாவ்லக் ஆளுநராக இருந்தார். எனினும் நூலகம் தோன்றக் காரணமாக இருந்த கன்னிமாராவின் பெயரையே நூலகத்திற்கு அவர் வைத்தார். இப்படித்தான் சென்னையின் பெருமைமிகு கன்னிமாரா நூலகம் உருவானது. சில ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகத்தில் இன்று ஆறு லட்சம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. 1954இல் கன்னிமாரா தேசிய நூலகமாக அறிவிக்கப்பட்டது. கல்கத்தா, பம்பாய், டெல்லி, சென்னை என இந்தியாவில் நான்கே நான்கு தேசிய நூலகங்கள்தான் உள்ளன. கன்னிமாரா தேசிய நூலகக் களஞ்சியமாக இருப்பதால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து நாளிதழ்கள், பத்திரிக்கைகள், புத்தகங்கள் ஆகியவற்றின் ஒரு பிரதியை பெற்றுப் பாதுகாக்கிறது. பதிப்பாளர்கள் கண்டிப்பாகப் புத்தகத்தின் ஒரு பிரதியை இங்கு அனுப்ப வேண்டும். கன்னிமாராவில் மாணவர்களுக்கான பாடப் புத்தங்கள் தொடங்கி அறிவியல், மருத்துவம், சட்டம், பொறியியல், இலக்கியம், என எல்லாத் துறை நூல்களும் கிடைக்கின்றன. இந்நூலகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பல அரிய புத்தகங்கள் உள்ளன. 1608இல் பிரசுரிக்கப்பட்ட பைபிள், 1781இல் பதிப்பிக்கப்பட்ட ஞான முறைமைகளின் விளக்கம் இது போன்ற நூற்றாண்டுகளைக் கடந்த பல அரிய புத்தகங்கள் இங்கு உள்ளன. வருடத்தில் 9 நாட்கள் தவிர மீதி நாட்கள் முழுவதும் இயங்குகிறது கன்னிமாரா. இந்த நூலகத்திற்கு 70 ஆயிரம் ஆயுள் கால உறுப்பினர்கள் உள்ளார்கள். தினமும் ஆயிரக் கணக்கானோர் இந்த நூலகத்தைப் பயன்படுத்து கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் அங்கு போகாதவர்களுக்குக் கன்னிமாரா நூலகத்தின் தற்போதைய தோற்றம் ஆச்சரியத்தை அளிக்கலாம். அரசாங்கக் கட்டிடங்களுக்கே உரிய வாசனையை அங்கே இப்போது உணர முடியாது. இப்போது உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் நூலக அனுபவத்தை எளிதாக்குகின்றன. வாசகர்களின் வசதிக்காக புத்தங்களை ஜெராக்ஸ் எடுக்கும் வசதியும், இண்டர்நெட் மையமும் நூலகத்தில் உள்ளன. பார்வையறோர் மற்றும் காது கேளாதோருக்கான பிரெய்லி மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது. சுற்றிலும் மரங்கள் அடர்ந்து இருக்கும் கன்னிமாராவின் நூலகத்தில் அமர்ந்து புத்தகங் களுடன் உறவாடும் அனுபவம் மிகவும் அலாதியானது. ** 113 வயதான கன்னிமாரா நூலகம் சென்னையின் பழம் பெருமைகளில் ஒன்று என்றால் அதன் நவீன முகத்தின் அடையாளம் என்று கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூலகத்தைச் சொல்லலாம். நூலகத்தின் அடையாளத்திற்குப் புத்தகங்கள் மட்டுமே போதுமென்றாலும் அதனையும் தாண்டிச் சென்னையின் வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப இந்தப் புத்தகக இல்லம் வடிவமைக்கப் பட்டுள்ளது. கோட்டூர்புரம் சாலையில் எட்டு ஏக்கரில், ஒன்பது தளங்களோடு வியாபித்திருக்கும் இந்நூலகம். சென்னைவாசிகள் குடும்பத்தோடு சென்று பார்த்து, படித்து, ரசிக்கக்கூடிய ஒரு இடமாய்த் திகழ்கிறது. ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் என்று வர்ணிக்கப்படுவதும, 5,50,000 புத்தகங்களை உள்ளடக்கியதுமான இந்நூலகம் 172 கோடி ரூபாய் செலவில், 9 தளங்களுடன் கட்டப் பட்டுள்ளது. தரைத் தளத்தில், கண் பார்வையற்றோர் படிக்க உதவும் பிரெய்ல் புத்தகங்களுக்கான பிரிவு உள்ளது. 1500 பிரெய்ல் புத்தகங்களையும் பிரெய்ல் பயிற்சியாளர்களையும் கொண்டுள்ளது இப்பிரிவு. சனி, ஞாயிறுகளில் கண் பார்வை யற்றோருக்கான பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் இங்கு வந்து படிப்பதாக நூலகப் பொறுப்பாளர்கள் கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பல ஊழியர்களும் பேசத் தயங்கினாலும் பொதுவான சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். சொந்தப் புத்தகங்களைக் கொண்டுவந்து படிக்கவும் ஒரு அறை உள்ளது. போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளுக்க்கான புத்தகங்கள் மற்றும் கேள்வி பதில் தொகுப்புகளுக்கான தனிப் பிரிவு உள்ளது. முதல் தளத்தில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் பிரிவும் பருவ இதழ்கள் பிரிவும் உள்ளன. சிறுவர்கள் பிரிவில், தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள், வாழ்க்கை வரலாறுகள், ஆங்கில இலக்கணப் புத்தகங்கள், ஆங்கில உரையாடல் பயிற்சிப் புத்தகங்கள், நகைச்சுவைப் புத்தகங்கள், விடுகதை மற்றும் விளையாட்டுப் புத்தகங்கள் மேலும் ஹிந்தி மற்றும் மற்ற தென்னிந்திய மொழி புத்தகங்களும் இருக்கின்றன. சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. பருவ இதழ்கள் பிரிவில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளி யாகும், அனைத்து தினப் பத்திரிக்கைகளும, பருவ இதழ்களும் கிடைக்கின்றன. இவை தவிர 1200 பேர் அமரக்கூடிய கலையரங்கமும் 300 பேர் மற்றும் 150 பேர் அமரக்கூடிய இரண்டு கூட்ட அரங்குகளும் உள்ளன. ** இந்த இரண்டு நூலகங்கள் தவிரப் பல்வேறு நூலகங்கள் சென்னை மக்களின் புத்தக தாகத்துக்கு நீர் வார்க்கின்றன. அண்ணா சாலையில் தேவ நேயப்பாவாணர் நூலகம், பிரிட்டீஷ் கவுன்சில் நூலகம், என ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்பது தரமணியில் அமைதுள்ள முக்கியமான நூலகம். இங்கு 1,20,000க்கு மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் உண்டு. இந்த நூலகம் சிக்காகோ பல்கலைக்கழக உதவியுடன் பேணப்பட்டுவருகிறது. கோட்டையூரில் இருந்த ரோஜா முத்தையா என்பவர் 1950களில் நூல்களைச் சேர்க்கத் தொடங்கித் தம் வாழ்க்கையை இந்நூல் தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்ப்பணித்து 1992இல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் பெருமுயற்சி எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தருமாறு இந்நுலகத்தை நிறுவ பெரிதும் துணைபுரிந்தது. பண்டைய சுவடிகளைப் பாதுகாப்பதற்காகவே அரசினர் கீழ்த் திசைச் சுவடிகள் நூலகம் என்னும் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுக் கட்டமைப்பில் கி.பி. 1869இல் தொடங்கப்பட்டது. சுவடிகள் 1870இல் சென்னை மாநிலக் கல்லூரியில் ஒரே தொகுப்பாக வைக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிகள் கல்கத்தா, லண்டன், சென்னைக் கல்லூரி நூலகம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, அருங்காட்சியகம் என்று அடிக்கடி பல இடங்களுக்கு மாற்றப்பட்டு இறுதியாக 1939 ஜனவரியில் சென்னைப் பல்கலைக் கழக நூலக்க் கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் உள்ள முதல் மாடிக்கு மாற்றப்பட்டு, அரசினர் கீழ்த் திசைச் சுவடிகள் நூலகமாக உருவாக்கப்பட்டது. இவை தவிர, ஸ்ரீ இராமகிருஷ்ண நூற்றாண்டு நூலகம் (ஸ்ரீ இராமகிருஷ்ண மடம்), டாக்டர் உ.வே.சா. நூலகம், மறைமலை அடிகள் நூலகம், தமிழ்நாடு அரசு-தொல் தொல்பொருள் ஆய்வுத் துறை நூலகம், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையம் (எழும்பூர்), கார்ல் மார்க்ஸ் நூலகம் (சி.ஐ.டி. நகர்), பேராசிரியர் ஆய்வக நூல் நிலையம் (அண்ணா அறிவாலயம்), க.திருநாவுக்கரசு நூலகம் (மந்தைவெளி), சிங்காரவேலர் நினைவு நூலகம் (தி. நகர்) என்று பல நூலகங்கள் புத்தகங்கள் சார்ந்த பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றன. இத்தனை நூலகங்களும் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதும் அவற்றில் உள்ள நூல்கள் ஆர்வமுள்ள வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எளிதில் பயனளிக்கும் வகையில் உள்ளனவா என்பதும் தனி ஆய்வுக்கு உரியவை. பெரிய பெரிய நூலகங்கள் பல இருக்க, சிறிய நூலகங்கள் பலவும் தனியாரால் நடத்தப்பட்டுவருகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது ஓரிரு நூலகங்களாவது இருந்துவந்த நிலை இப்போது மாறிவிட்டது. தனியார் நூலகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நூலகங் களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. நூலகங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் பழைய நூல்களை விற்பனை செய்யும் கடைகள் சென்னை யில் நூற்றுக்கணக் கில் உள்ளன. பல இடங்களில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டி ருந்தாலும் பெருமளவில் மக்களை ஈர்க்கும் இடமாக இவை விளங்கு கின்றன. குறிப்பாகச் மயிலாப் பூரில் லஸ் முனை அருகே உள்ள கடை மிகவும் பிரபலம். நூல்களுடனான உறவு என்பது வரலாற்று டனும் அறிவு சார்ந்த தேடலுடனும் ஒரு சமூகத்துக்கு இருக்கும் உறவின் வெளிப்பாடு. இன்று தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நூல்களின் தேடலை வேறு களங்களுக்கு இடமாற்றினாலும் சென்னையின் புத்தக தாகம் நூலகங்கள், நூல் விற்பனை மையங்கள் ஆகியவை மூலம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. அது எந்த அளவு வலுவாக இருக்கிறது என்பது தனி ஆராய்ச்சிக்குரிய விஷயம். நன்றி நம்ம சென்னை ஏப்ரல் 2013

Share.

About Author

Leave A Reply