மாடுமேய்த்த சிறுவன் மாமனிதன் ஆன வரலாறு

0

மாடுமேய்த்த சிறுவன் மாமனிதன் ஆன வரலாறு
வரலாறு என்பதே முன்னேற் றத்திற்கான போராட்டம்தான்” என்று சொல்வார்கள். இதை வெளிப்படுத்தும் விதமாக வந் துள்ள நூல்தான், “செங்கொடி யின் பாதையில் நீண்ட பயணம்” என்ற தோழர் கோ.வீரய்யன் அவர்களின் சுயசரிதை. சித்தாடி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து குடும்பத்தின் வறுமை யும், கிராமத்தின் சூழலும் சேர்ந்து பள்ளி சென்று படிப்பதற்கான வாய்ப்பு வீரய்யனுக்கு கிடைக்க வில்லை, மாடுமேய்க்கும் வேலைக்கு இடையூறில்லாமல் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரவு நேரத்தில் சில மாதங்கள் படித்ததுதான் எழுத்தையும் – எண் கணிதத்தையும் அறிய கிடைத்த அரிய வாய்ப்பு. தன் சுய முயற்சியில் புத்தகங்களை படிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுபிறகு பல புத்தகங்களுக்கு அவர் ஆசிரியர் என்பது எத் துணை பெருமைமிகு முன்னேற் றம் என்பதை நூலைப்படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.

கம்யூனிஸ்ட்கள் பிறப்ப தில்லை உருவாக்கப்படுகிறார் கள் என்பதற்கு தோழர் ஜி.வி. மிகச் சிறந்த உதாரணம். அவரே குறிப் பிட்டிருப்பதைப் போல, உரத் தொட்டியில் இருந்து அனுப்பப் படும் உரம் வயலில் கொண்டு போய் கொட்டிய பிறகு, வயலில் தண்ணீர் பாய்ந்தால் அதில் மக்காமல் கிடக்கும் ஓலை தண் ணீர் அலையில் அசைந்து அசைந்து கரையோரம் வந்து ஒதுங்குவ தைப் போல், நிலப்பிரபுத்துவ குப்பைக்குழியாக இருந்த எங்கோ ஒரு மூலையில் இருக் கும் கிராமத்தில் மாடு, கன்று மேய்க்கும் சிறுவனாக இருந்த நான் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் வந்து ஒதுங்கினேன். மாநில தலைவர்களில் ஒருவராக என்னை தரம் உயர்த்தி அடையாளம் காட்டிய பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கும், தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டுமே சேரும். நான் அறிந்தவரை கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தவிர, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியிலும் குடும்ப பின் பலமோ, பணபலமோ, படிப்பு பலமோ இல்லாத ஒருவன் இந்த அளவு வளர்ச்சி பெற முடி யாது என்று என்னால் தலை நிமிர்ந்து உறுதிபடக் கூற முடி யும். இந்த அட்சரம் ஒவ்வொன் றும் லட்சம் பெறும்.

கடுமையான கஷ்டங்கள், பொருளாதார நெருக்கடி இருந்த போதும், இயக்கப்பணிக ளில் அது பிரதிபலிக்காமல் பார்த்துக் கொண்ட பாங்கு இங்கு குறிப்பிடத்தக்கது. எந்த அளவுக்கு வறுமை என்றால் அவருடைய திருமணத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் புரட்ட முடியாமல் திருமணத்துக்கு தேதி தீர்மானித்து இரண்டு முறை அது மாற்றி வைக்கப்பட்டது.

அவருடைய துணைவியார் சரோஜாவைப் பற்றி புத்தகத்தில் மூன்று, நான்கு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக் கிறது என்றாலும், கட்சியில் தோழர்களுக்குள் வேலைப் பிரிவினை செய்து கொள்வதைப் போல குடும்பத்திலும் வேலைப் பிரிவினை. தோழர் சரோஜா குடும்பத்தையும், குழந்தைக ளையும், விவசாயத்தையும் பார்த்துக் கொள்வது, தோழர் ஜீ.வி குழந்தைகளின் படிப்பு, இயக்க வேலை என பகிர்ந்து கொண்டு கடைசி வரை அது தொடர்ந்தது. ஜீ.வியின் மீது அடக்குமுறை – சிறை – தலை மறைவு – பொய்வழக்கு, சதி வழக்கு இதையொட்டி, போலீஸ் தேடுதல், குடும்ப உறுப்பி னர்கள் மீது தாக்குதல், சித்ரவதை இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அவருடைய துணைவி யார் வாழ்ந்து கொண்டிருப்பது வீரத்திற்கும் – போற்றுதலுக்கும் உரிய எடுத்துக்காட்டு. எல்லா வற்றிற்கும் மேலாக, ‘மிகச் சிறந்த தன்னம்பிக்கையூட்டும் நூல் இது” என்றால் மிகையல்ல, உண்மை என்பதை படிப்பவர் அனைவரும் உணர முடியும்.

முறையான கல்விக்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருடைய எழுத்துக்களை யாராலும், மெத்தபடித்த மேதாவி யாலும் அவ்வளவு சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது. ஏதோ சில கோடுகள் கிறுக்கப்பட்டிருக் கும். ஆனால் தோழர். ஜீ.வி அதை மிகச் சரியாக படிப்பார். விவசா யிகள் சங்க மாநில மையத் திற்கு வந்தவுடன் எனக்கு தரப் பட்ட பணிகளில் ஒன்று தோழர் ஜீ.வியினுடைய தமிழ் கட்டு ரையை உழவன்உரிமைக்கு தமிழாக்கம் செய்ய வேண்டுமென் பது. சில மாதங்கள் மிகுந்த சிரமப் பட்டும், தோழர். வி.ஏ.கருப்புசாமி அவர்களிடம் கேட்டும் சமாளித் தேன். தோழர் வி.ஏ.கே, இப்படித் தான் இருக்குமென்றும், அல் லது பொருத்தமான ஒரு வார்த் தையை நீங்களே போட்டு விடுங்க, கேட்டா சொல்லிக் கொள்ள லாம் என்றும் தைரியமூட்டினார். பொருத்தமில்லாத வார்த்தை களைப் போட்டு வாங்கி கட்டிக் கொண்டதுமுண்டு. இருப்பினும், தோழர் ஜீ.வி.யின் தொடர்ந்து எழுதும் ஆற்றலைப் போற்றாமல் இருக்க முடியாது.

மற்றொன்று, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டவர் தோழர் ஜீ.வி. சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப் படியே தான் அதற்குப் பிறகும் இருந்தார். அவருடைய அணுகு முறையிலோ, தோற்றத்திலோ, பயணத்திலோ (பஸ்ஸில் மட் டுமே பயணம்) எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என் பதை தமிழகம் அறியும். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்டியவர். இதனால் அவர் சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னால் பேருந்து நடத்துநர் கூட நம்புவதில்லை. ஒவ்வொரு முறையும் அடையாள அட்டையை காண்பித்த பிறகே அவரை எம்.எல்.ஏ என்று ஏற்று பயணிக்க அனுமதித்திருக்கிறார்கள். தோற்றத்தை பார்த்து மதிப்பிடும் உலகத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நூலுக்கு, ‘நீண்ட பயணம்’ என்று மிகப்பொருத்தமாகவே பெயரிடப்பட்டிருக்கிறது. செஞ் சீனத்தின் மாபெரும் தலைவர் மா சே துங்கின் நீண்ட பயணம், நிலப்பிரபுக்களிடமிருந்து கிராமப்புற ஏழைகளை விடுவித்து சீனத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட வழிவகுத்தது. தோழர் ஜீ.வியின் இந்த நீண்ட பயணம் நிலப்பிரபுத்துவ கோட்டை யாக விளங்கிய தஞ்சை மாவட் டத்தில் நிலப்பிரபுக்களை தளர்ச் சியடையவும் – கிராமப்புற ஏழை களை எழுச்சி கொள்ளவும் செய் தது. அந்த வேதியியல் மாற் றத்தை அறிய அனைவரும் வாங்கிப் படியுங்கள் – மற்றவர்க ளையும் படிக்கச் செய்யுங்கள்.

செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்-கோ.வீரய்யன், பாரதி புத்தகாலயம் ரூ.150

Share.

About Author

Leave A Reply