வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி: தி.அ. முத்துசாமிக் கோனார்

0
தமிழ் இலக்கியப் பதிப்பு முன்னோடிகள் பற்றிப் பேசும்போது பொதுப்போக்கில் இடம் பெற்றிருந்த நூல்களைப் பதிப்பித்தவர்களையே பெரிதும் முன்னிலைப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. நிலவியல் அமைப்பின் காரண-மாகத் தமிழகம் பல வட்டாரங்களாகப் பிரிந்-திருந்ததும் பிரிந்திருப்பதும் நிதர்சனம். ஒவ்வொரு வட்டாரத்திற்குமான தனித்தன்மைகளை மையமாகக் கொண்ட பல்வேறு இலக்கிய நூல்கள் எழுந்திருக்கின்றன. அவை அக்குறிப்-பிட்ட வட்டாரத்தின் ஆட்சியாளர்கள் பற்றிய வரலாற்றிற்கும் சமூக வரலாற்றிற்கும் மிகவும் முக்கியமான தரவுகளாக விளங்கத்தக்கவை. இத்தகைய வட்டார வரலாறுகளை உள்ளடக்-கிய தமிழக வரலாறு இன்னும் எழுதப்பட-வில்லை. வட்டாரத் தரவுகளை இணைத்துத் தமிழக வரலாறு எழுதப்படுவதற்கு வட்டாரம் சார்ந்த இலக்கிய நூல் பதிப்புகள் மிகவும் முக்கியமானவை.
வட்டாரம் சார்ந்த நூல்களை மட்டுமே பதிப்பிப்பதில் கவனம் செலுத்திய அறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்களின் பணி பெருமளவு பொருட்படுத்திப் பேசப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. ஒருவரின் பங்களிப்பு விதந்து பேசப்படுவதற்கும் பேசப்படாமல் விடப்-படுவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கக்-கூடும். சமகால அரசியலுக்கு உதவும் நூல்களைப் பதிப்பித்தோர், ஆதிக்கம் பெற்ற சாதியைச் சேர்ந்த பதிப்பாசிரியர், சமகாலத்தில் புகழ் பெற்றிருக்கும் நிறுவனங்களோடு தொடர்புடையோர் ஆகியோர் கூடுதல் கவனம் பெறுவதும் இத்தகைய பின்னணி எதுவும் இல்லாத பதிப்பாசிரியர்கள் கால ஓட்டத்தில் மங்கிப் போவதும் தமிழகத்தில் சாதாரணம். தமிழ் போன்ற நீண்ட பாரம்பரியம் கொண்ட மொழியில் பலதரப்பட்ட பதிப்புகளில் ஈடுபட்ட அனைவருக்கும் அவரவருக்குரிய முக்கியத்துவத்தை வழங்கும் விதத்திலான விரிவான பதிப்பு வரலாறு உருவாகியிருக்க வேண்டும்.
பதிப்பு வரலாறு தொடங்கி இரண்டு நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே இவ்விரண்டு நூற்றாண்டுகளில் நடைபெற்ற பதிப்புப் பணிகள் பற்றிய தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தவும் வரலாறு எழுதவும் இதைவிடவும் சரியான காலம் இல்லை. எந்த நூல் எந்தத் தருணத்தில் முக்கியத்துவம் உடையதாக மாறும் என்பதைப் பற்றி யாராலும் தீர்மானிக்க முடியாது. கவிதைச் சுவையற்றது என ஒதுக்கப்படும் ஒருநூல் அதில் உள்ள ஏதாவது ஒரு வரலாற்றுக் குறிப்பின் காரணமாக முக்கியத்துவம் கொண்டதாக மாறிவிடுகிறது. தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிட்ட காலப்போக்கைத் தீர்மானிக்கவும் சமூக இயங்கு முறைகளை அறியவும் இலக்கிய மதிப்பில்லாத சாதாரண நூல்களும் உதவுகின்றன. எல்லாமே ஆவணம் என்னும் மதிப்பைப் பெறும் காலம் இது.
தல புராணங்கள் பற்றிய ஆய்வுகள்கூட இங்குப் பெருமளவு நடைபெறவில்லை. நூற்றுக்-கணக்கான தலபுராணங்கள் தமிழகத்தில் எழுந்துள்ளன. அவற்றில் பல அச்சிடப்பட்டும் உள்ளன. இட்டுக் கட்டப்பட்ட கதைகளின் தொகுப்புதான் தலபுராணம் என்னும் அசட்டைப் பார்வை நிலவுகிறது. ஆனால் தலபுராணங்கள் கட்டமைக்கும் கதைகளின் பொதுமைத்தன்மை பற்றி இன்று ஒருவர் ஆய்வு செய்யத் தொடங்க-லாம். தலபுராண உருவாக்கம், அதன் பரவலாக்கம் உள்ளிட்டவற்றிற்கான சமூகப் பின்புலம் பற்றிய ஆய்வுகள் இரண்டு நூற்றாண்டு காலப் புலமை மரபைப் பற்றிய பல சுவையான செய்திகளை வெளிப்படுத்துவதாகவும் அமையும். புராணக்கதைகளைப் புறந்தள்ளும் அரசியல் முடிவடைந்து அவற்றை நவீனக் கோட்பாடு-களின் வெளிச்சத்தில் ஆய்வு செய்வதற்கான காலம் இது.
மேலும் வட்டார வரலாறுகளை எல்லாம் உள்ளடக்கிய முழுமை-யான தமிழக வரலாறு, வட்டாரப் பின்புலம் கொண்ட இலக்கியங்-களின் வரலாற்றையும் உட்கொண்ட தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய-வற்றை உருவாக்கப் பொதுப்-போக்கில் கவனம் பெறாத பல்வேறு நூல்-களையும் பொருட்-படுத்தியாக வேண்டும் என்னும் பார்வையும் இன்று உருவாகியிருக்-கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பதினைந்தாம் நூற்றாண்-டுக்குப் பின் எழுந்தவை பெரும்பாலும் சிற்றிலக்கிய வகைகளே. பேரிலக்கியங்களில் சிறு பகுதியாக இடம் பெற்றிருந்த ஒரு கூறை விரி-வாக்கி உருவானவை இத்தகைய சிற்றிலக்கி-யங்கள். எனினும் இவற்றின் தனித்தன்மைகளுள் மிகவும் முக்கியமானது ஏதாவது குறிப்பிட்ட ஊர் அல்லது பகுதியைக் களனாகக் கொண்-டவை இவை என்பதாகும்.
நகலெடுப்புப் போல அமைந்தவை இவ்விலக்கியங்கள் எனினும் பல்வேறு ஊர்கள், அங்கு கோயில் கொண்டுள்ள கடவுள், அப்-பகுதியைச் சேர்ந்த வள்ளல்கள் என வட்டாரத் தன்மை மிக்கனவாக இவை விளங்குகின்றன. இவற்றில் வரலாறும் புராணக் கதைப் புனைவு-களும் கலந்து கிடக்கின்றன. வரலாற்றுக்கும் புராணத்துக்குமான இடைவெளி குறித்துச் சிந்திக்காமல் எல்லாவற்றையும் வரலாற்றுத் தரவுகளாகக் கருதும் தலைமுறை இங்கு வாழ்ந்திருக்கிறது. இத்தகு வட்டாரம் சார்ந்த சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்தவர்களில் ஒருவர் தி.அ. முத்துசாமிக் கோனார்.
தற்போதைய நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் அவர். 1858ஆம் ஆண்டு ஆனி மாதம் பிறந்த அவர் பல்வேறு நிலை-களில் இருந்து புலவராகத் தன்னை உயர்த்திக் கொண்டவர். திருச்செங்-கோட்டு மலைப்படிகள் அமைக்கும் தொழி-லாளர்-களுக்கு மேஸ்திரியாக வேலை பார்த்தவர். தமது ஆர்வத்தின் காரணமாகப் பலரிடம் பயின்று புலமை பெற்றவர். சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழி-களையும் கற்றவர். அஷ்டாவதானக் கலை-யில் தேர்ச்சி பெற்றவர். சைவ சமயத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர். சைவம் சார்ந்த ‘கேதார விரதம்’ போன்ற சிறுசிறு நூல்களை உரைநடையில் எழுதிப் பதிப்பித்து வந்ததோடு அம்மதக் கருத்துகளைப் பரப்பும் பொருட்டு ‘திருச்செங்கோட்டு விவேக திவாகரன்’ என்னும் இதழையும் நடத்தி வந்துள்ளார்.
தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்கிய தம்மூராகிய திருச்செங்கோட்டின் மீது கொண்ட பற்றால் அவ்வூர் தொடர்பாக இயற்றப்பட்ட பல சிற்றிலக்கியங்களைத் தேடி ஓலைச்சுவடியி-லிருந்து அச்சுக்குக் கொண்டு வந்தார். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களுக்குத் தல புராணங்கள் உருவாயின. கோயிலால் முக்கியத்துவம் பெற்ற ஊர்களுக்கு விதவிதமான சிற்றிலக்கியங்கள் புனையப்பட்டன. திருச்செங்-கோட்டுக்கு மட்டும் அனேகமாக எழுபதுக்கும் மேற்பட்ட இலக்கியங்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தும் அச்சேறிவிடவில்லை. அவற்றில் கிட்டத்தட்ட இருபத்தைந்து நூல்களை முத்துசாமிக் கோனார் பதிப்பித்திருக்கிறார்.
தம் ஊர் இலக்கியங்கள் தொடர்பான தேடலும் பதிப்பும் என ஈடுபட்டவருக்கு அவற்றை வெளியிட வேண்டி அக்காலத்தில் கொங்கு வட்டாரத்தில் புகழ் பெற்றிருந்த வள்ளல்களை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்தேவை கோனாரின் தேடல் பரப்பைச் சற்றே விரிவாக்கியது. கொங்கு நாட்டின் மற்ற பகுதிகள் சார்ந்த இலக்கியங்-களையும் புராணங்களையும் கண்டெடுத்துப் பதிப்பிக்கலானார். அவற்றைப் பதிப்பிக்கும்போது நூல் பற்றிய குறிப்புகள், ஆசிரியர் வரலாறு, நூலில் உள்ள சில விஷயங்களைத் தெளிவு-படுத்துதல் ஆகியவற்றிற்காகக் கொங்கு நாட்டு வரலாறு தொடர்பான தகவல்களில் அவரது கவனம் சென்றது. அது கொங்கு நாட்டு வரலாற்றை விரிவாக எழுத வேண்டும் என்னும் பெருங்கனவில் அவரைச் செலுத்தியது. கோனார் சைவம், நூல் பதிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டாலும் கூட அவரது அடிப்படை ஈடுபாடு வரலாறு-தான். வரலாறு தொடர்பான அவரது ஆர்வத்தை அவர் எழுதியுள்ள சிறு குறிப்பிலும் காணலாம்.
பொதுவாக இலக்கியங்களைப் பதிப்பிப்ப-வர்கள் காலப்போக்கில் ஆய்வாளர்களாக மாறுவது இயல்பு. ஆய்வாளர்களாக இருப்ப-வர்கள் தமது ஆய்வுக்கான தரவுகளை உருவாக்-கும் தேடலில் பதிப்பாசிரியர்களாக உருவாதலும் உண்டு. கோனார் சமயம் பரப்பும் நூலாசிரிய-ராகவும் சைவம் சார்ந்த சிற்றிலக்கிய நூல்களின் பதிப்பாசிரியராகவும் தொடங்கி அவற்றின் காரணமாகப் பார்வை விரிவு பெற்று வரலாற்-றாசிரியராக உருவானவர். கொங்கு நாட்டு வரலாறு என்னும் திட்டம் அவரது பதிப்புப் பார்வையை வெகுவாக மாற்றியிருக்கிறது. வரலாற்றுக்கான ஆதாரத்தரவுகளாகவே அனைத்து நூல்களையும் கருதியிருக்கிறார். அவர் எழுதி முற்றுப்பெறாத வரலாற்று நூலாகிய ‘கொங்கு நாடு’ என்பதில் தரவுகளை அவர் பயன்-படுத்தும் விதம் அவரது வரலாற்று உணர்வுக்குச் சான்றாகும். 1900க்குப் பின் சைவ சமயம் சார்ந்து சிறுசிறு உரைநடை நூல்கள் எழுதி வெளியிடு-வதை அவர் நிறுத்தி விட்டதாகத் தெரிகிறது. சைவ சமயப் பரப்பலுக்கெனத் தொடங்கப்பட்ட ‘விவேக திவாகரன்’ இதழில் கொங்கு நாடு தொடர்பான வரலாற்றுச் செய்திகளும் கட்டுரை-களும் வெளியிடப்பட்டன. அவ்விதழை நிறுத்திவிட்டு வரலாற்றுக்கெனவே ‘கொங்கு-வேள்’, ‘கொங்கு மண்டலம்’ ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார். கொங்கு நாட்டு வரலாற்றுக்-காகக் கடுமையாக உழைத்து இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட பலவற்றையும் சேகரித்திருக்கிறார். பதிப்பிக்க வாய்ப்புக் கிடைத்த நூல்களைப் பதிப்பித்திருக்-கிறார். கோனாரின் பதிப்புப் பணியை மூன்று நிலைகளில் வைத்துப் பார்க்கலாம்.
முதலாவது, தம் ஊராகிய திருச்செங்கோடு தொடர்பான இலக்கியப் பதிப்புகள், திருச்செங்-கோட்டு மாலை, திருச்செங்கோட்டுத் திருப்பணி-மாலை, திருச்செங்கோட்டுக் கலம்பகம், திருச்செங்-கோட்டுப் பிள்ளைத் தமிழ், திருச்செங்கோட்டுப் புராணம், திருச்செங்-கோட்டுச் சதகம் உள்ளிட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் அவர் பதிப்பித்தவை. இவற்றுள் திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை என்னும் நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
திருப்பணிமாலை என்பது கோயிலுக்குச் செய்யப்பட்ட திருப்பணிகளைப் பற்றிய விவரங்களைத் தொகுத்துக் கூறும் நூல் ஆகும். மாலை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. அதன் வகையாக அல்லது அதிலிருந்து வளர்ந்த தனிவகை இலக்கியமாகத் திருப்பணிமாலை என்பதைக் கருதலாம். செய்யுளில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் இலக்கியமாகக் கருதும் போக்கு இருப்பதால் திருப்பணிமாலையும் அவ்வாறு குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இலக்கியத்தி-லிருந்து முற்றிலும் வேறுபட்ட நூல் இது. கோயில் ஒன்றுக்கு எந்தெந்தக் காலத்தில் என்னென்ன திருப்பணிகள் நடைபெற்றன. அவற்றைச் செய்து கொடுத்தவர்கள் யார் என்னும் விவரங்களைச் செய்யுள் வடிவில் தொகுத்துத் தரும் நூலே திருப்பணிமாலை என்பது. இதனை வரலாற்று நூல் என்றோ வரலாற்றுத் தரவு நூல் என்றோ கருதலாம்.
364 பாடல்கள் கொண்ட திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலையை 1913இல் கோனார் பதிப்பித்தார். அந்நூலில் மேலும் சில பாடல்கள் சிதைந்து போய்விட்டன என்னும் குறிப்பையும் தருகின்றார். இந்நூலின் ஆசிரியர் எழுகரை-நாட்டு நம்பி என்னும் சதாசிவப் பண்டிதர். இந்நூல் கூறும் தகவல்களுக்குப் பின் நடந்த திருப்பணிகள் பற்றிய தகவல்களைக் கோனாரே செய்யுள் வடிவில் பாடிச் சேர்த்துள்ளார். அவற்றையும் சேர்த்து 408 செய்யுள்களைக் கொண்ட நூலாக இது பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னுரையில், ‘திருச்செங்கோட்டிலுள்ள திருக்கோயில், திருக்கோபுரம், மண்டபம், வாகனம், நந்தவனம், வாவி, கூவம், மடம், சத்திரம், ஈசுவரருக்கும் குருமார் ஆதியர்க்கும் புரிந்த பணிவிடை முதலிய புண்ணியங்கள், இன்ன காலத்து இன்னாரால் இவ்வண்ணஞ் செய்யப்-பெற்றன என்பதைத் தமிழ்ச் செய்யுளில் அமைத்துப் பாடப்பெற்றதொரு நூலாகும் (1913 ப.மி) என்று கோனார் எழுதியுள்ளார்.
இந்நூல் செய்திகளையும் கல்வெட்டுச் செய்தி-களையும் ஒப்பிட்டு கல்வெட்டு ஆய்வாளர் வெ.இரா. துரைசாமி, இரண்டும் பெரும்பாலும் பொருந்திப் போவதைக் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். விஜயநகர ஆட்சிக்காலம் தொடங்கி அதன்பின் இப்பகுதியை ஆண்ட சிற்றரசர்கள் எனப் பலரது திருப்பணிகளை இந்நூல் பதிவு செய்துள்ளது. ஆங்கிலேயர்களும் உள்ளூர்க்காரர்களும் செய்த திருப்பணிகளைப் பற்றியதாகக் கோனார் எழுதிச் சேர்த்த பாடல்கள் அமைந்துள்ளன. ஆகவே கோனாரின் பதிப்பு நூல்களுள் இத்திருப்பணிமாலை சிறப்பிடம் பெறத்தக்கதாக விளங்குகிறது. இந்நூலுக்கு முத்துசாமிக் கோனார் எழுதிய சிறு சி-று குறிப்புகள் உள்ளன. ஆனால் உரை விளக்கம் இல்லை என்பது குறைதான்.
திருச்செங்கோட்டுப் புராணப் பதிப்பும் மிகவும் முக்கியம் வாய்ந்ததே. இது திருச்செங்-கோடு தொடர்பான பலவிதக் கதைகள் அடங்கிய நூல். தென்காசி கவிராஜ பண்டிதர் இயற்றிய இந்நூல் 1874இல் அச்சிடப்பட்டுள்ளது. வெளியீட்டு விவரம் தெரியவில்லை. அதனை 1932இல் சிற்றம்பலக் கவிராயரின் உரையுடன் கோனார் வெளியிட்டார். இந்நூலின் முன்பகுதி-யில் திருச்செங்கோடு தொடர்பான கல்வெட்-டுகள் சிலவற்றையும் கொடுத்துள்ளார். கல்-வெட்டு ஆய்விலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்துள்ளது. திருச்செங்கோடு தொடர்பான கல்வெட்டுகள் பலவற்றை முதலில் கண்டுபிடித்-ததும் அவற்றை வாசித்ததும் அவர்தான். அவர் பதிப்புகளிலும் எழுத்துகளிலும் கல்வெட்டு ஆதாரங்களை விரிவாகப் பயன்படுத்தியுள்ளார்.
கோனாரின் பதிப்புப் பணியில் இரண்டாம் நிலையில் அமைவன கொங்கு நாட்டின் பிற ஊர்கள் பற்றிய இலக்கியங்கள். அவை ஊர் தொடர்பாகவோ அவ்வூர் சார்ந்த வள்ளல்கள் மீது பாடப்பட்டவையாகவோ உள்ளன. ‘சிவமலைப் புராணம்’, ‘சிவமலைக் குறவஞ்சி’, ‘பூந்துறைப் புராணம்’, ‘கபிலமலை வருக்கக்-கோவை’, ‘மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்-கோவை’, ‘பாம்பண காங்கேயன் குறவஞ்சி’, ‘சர்க்கரை மன்றாடியார் காதல்’ உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் இவ்வகைப்-பட்டவை. இவற்றுள் படிக்காசுப் புலவர் பாடிய ‘மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை’ முக்கியத்துவம் பெற்ற நூலாகும்.
மொழி முதலில் வரும் எழுத்துக்களைச் செய்யுளின் தொடக்கமாக வைத்து அகரநிரல் முறையில் பாடப்படும் கோவை நூல் வருக்கக்-கோவை ஆகும். திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் உள்ள மோரூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் மரபு காங்கேயர் என்பதாகும். அவ்வூருக்குச் சென்ற படிக்காசுப் புலவர், குமாரசாமி காங்கேயன் என்னும் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கப் பாடிய நூல் இது. தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த படிக்காசுப் புலவருக்குக் கொங்கு நாட்டோடு ஏற்பட்ட தொடர்பு குறித்த செவிவழிக் கதைகள், அவற்றிற்கு ஆதரவாக வழங்கும் தனிப்பாடல்கள் ஆகியவற்றைத் திரட்டித் தரும் கோனாரின் முன்னுரை இந்நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது. புராணக் கதைகள், செவிவழிக் கதைகள், கல்வெட்டு உள்ளிட்ட ஆவண ஆதாரங்கள் எனத் தனக்குக் கிடைக்கும் அனைத்தையும் தவறாமல் பதிவு செய்யும் அவரது இயல்பு இந்நூலிலும் வெளிப்பட்டுள்ளது. ‘காருலாம் கொங்கு நாட்டைக் கனவிலும் நினைக்-கொணாதே’ எனக் கம்பர் பாடியதைப் போலப் படிக்காசுப் புலவர் ‘நஞ்சாகப் போச்சுதையோ என் தமிழ் கொங்கு நாடெங்குமே’ என்று பாடியுள்ளார் என்பதற்கான பின்னணிக் கதைகள் சுவையானவை. 1916இல் இந்நூலை அவர் பதிப்பித்துள்ளார். படிக்காசுப் புலவரின் கவித்திறனுக்குச் சான்றாக இந்நூல் விளங்கு-கின்றது.
கோனாரின் பதிப்புப் பணியில் அடுத்ததாகக் குறிப்பிட வேண்டியவை கொங்கு நாடு என்னும் முழுமைப்பார்வையில் அமைந்த நூல்களாகும். இவ்வகையில் ‘கம்பர் வாழி’, ‘மங்கல வாழ்த்து’, ‘கொங்கு மண்டல சதகம்’ ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம். இவை எண்ணிக்கையில் குறை-வானவை எனினும் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்தவையாகும்.  ‘கம்பர் வாழி’, ‘மங்கல வாழ்த்து’ ஆகியவை சிறு நூல்கள். இவை கொங்கு வேளாளர் திருமணத்தில் வாழ்த்தாகப் பாடப்படுபவை. இவற்றை இயற்றியவர் கம்பர் என்று செவிவழியாக வழங்கி வருகிறது. இவற்றை 1913இல் முதன்முதலாக அச்சேற்றியவர் கோனார். கொங்கு நாட்டுக்குக் கம்பர் வந்து சில காலம் வாழ்ந்தார் என்று வழங்கும் கதையோடு தொடர்புடையவை இந்நூல்கள்.
கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகப் பதிப்பு கோனாரின் பதிப்புப் பணியில் உச்சம் எனக் கூறத்தக்கதாகும். ‘திருப்பணி மாலை’ என்பது கோயில் திருப்பணி-களின் வரலாற்றைக் கூறுவதுபோல ‘மண்டல சதகங்கள்’ குறிப்பிட்ட வட்டாரத்தின் வரலாற்றைக் கூறுவன. கார் மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், சோழ மண்டல சதகம் எனப் பல மண்டல சதகங்கள் உள்ளன. குறிப்பிட்ட வட்டாரத்தின் சிறப்புகளுக்குக் காரணமானவற்றைத் தொகுத்துக் கூறுவன மண்டல சதகங்கள். வள்ளல்கள், புலவர்கள், நூல்கள், அதிசயச் செய்திகள், மன்னர் வரலாறுகள் எனப் பலவற்றின் செய்யுள் வடிவத் தொகுப்புதான் இவ்வகைச் சதகங்கள்.
கொங்கு மண்டல சதகம் பற்றிக் கோனார், ‘இம்மண்டலத்துப் பண்டைக்கால நிலப்பரப்பு, தெய்வீக விளக்கம், சித்தர், சமயாசிரியர், முடியுடை வேந்தர், குறுநில மன்னர், வள்ளல், புலவர் மற்றும் பலவகை மாந்தர்களின் நீதி, வீரம், கொடை, ஆண்பாலர் பெண்பாலர் கல்வி, நட்பு, கற்பு, நன்றி மறவாமை, அடக்கமுடைமை, புலவர்களை ஆதரித்து வந்த அருமைப் புரவலர்களின் பெருமை இன்னும் பல பழக்கவழக்கங்களைச் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது,- (ப. ஙீக்ஷிமிமிமி) என்று எழுதியுள்ளார்.
சதகங்களிலும் வரலாறுகளும் புராணக் கதைகளும் செவிவழிச் செய்திகளும் கலந்து கிடப்பதைக் காணலாம். எனினும் வரலாற்று உணர்வு சார்ந்த நூல் வகை சதகம் ஆகும். கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தை முத்துசாமிக் கோனார் 1923இல் பதிப்பித்தார். ஆனால் இந்நூல் அச்சில் வரும் முன்பே இதில் உள்ள பாடல்கள் பலவற்றைத் தாம் பதிப்பித்த நூல்களின் முன்னுரைகளிலும் தமது ஆய்வுகளிலும் பயன்படுத்தியுள்ளார். அவர் தாம்  பதிப்பித்த தல புராணங்களின் முன் பகுதி-யில் அத்தலபுராணச் சுருக்கத்தை உரைநடையில் கணிசமான பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர். திருச்செங்கோட்டுப் புராணத்தை மட்டும் விரிவாகத் ‘திருச்செங்கோட்டு மான்-மியம்’ என்னும் பெயரில் தனி நூலாக எழுதி-யுள்ளார். ஆனால் அவர் உரை எழுதிப் பதிப்-பித்த நூல் கொங்கு மண்டல சதகம் மட்டும் தான்.
கோனாரின் புலமைத் திறத்தையும் வரலாற்று உணர்வையும் உழைப்பையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது இவ்வுரை. இந்நூலுக்கு வெறும் உரை என்றில்லாமல் ஒவ்வொரு செய்யு-ளில் குறிப்பிடப்படும் செய்தியின் பின்னணி வரலாற்றை ‘வரலாறு’ எனத் தலைப்பிட்டு விரிவாக எழுதிச் செல்கிறார். உரையின்றி வெறுமனே பதிப்பிக்கப்பட்டிருந்தால் இந்நூல் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்காது என்று சொல்லலாம். இந்நூலின் முன்னுரையில் இதை வெளிக்கொண்டு வருவதற்காக அவர் செய்த முயற்சிகள், உழைப்பு, சிரமங்கள் ஆகியவற்றை விவரித்துள்ளார்.
பதிப்பு தொடர்பான அவர் அனுபவத்தைக் கூறும்போது ஒரு நூலைப் பதிப்பிக்குங் காலத்-தில் உளவாகுங் காலப்போக்கு, பொருட்செலவு, உழைப்பு முதலியவற்றைக் காட்டிலும் அவற்றைத் தேடுதலினும் பரிசோதித்தல் முதலியவற்றினும் உளவாகுங் காலப்போக்கு முதலியன எத்தனையோ மடங்கு அதிகமென்பது பழைய நூலச்சிட்டார்க்கே நன்கு தெரியும் (ப. ஙீமிஙீ) என்று குறிப்பிட்டுள்ளார். 1912ஆம் ஆண்டு தொடங்கி பத்தாண்டுகளுக்கும் மேல் முயன்று இப்பதிப்பை அவர் நிறைவு செய்துள்ளார்.
கார்மேகக் கவிஞர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கோனார், சமணர் செய்த நூலைப் பதிப்பித்துள்ளமைக்குக் காரணம் இந்நூல் வரலாறு தொடர்பானது என்பதனால் இருக்க-லாம். மேலும் கார்மேகக் கவிஞர் சமணர் எனினும் கொங்கு மண்டல சதகத்தில் சைவம் சார்ந்த செய்திகளுக்-கும் தாராளமாக இடமளித்-துள்ளார். இதன் காரணமாகவும் முத்துசாமிக் கோனாருக்கு இந்நூலைப் பதிப்பிப்பதில் மனத்தடை ஏதும் ஏற்படவில்லை. அவர் பதிப்-பிக்கத் திட்டமிட்டு தன் வாழ்நாளில் இயலாமல் போன நூல்களுமுண்டு. குறிப்பாக எம்பெருமான் கவிராயரால் இயற்றப்பட்ட  ‘தக்கை ராமாயணம்’ என்னும் நூலைப் பதிப்பிக்கும் திட்டத்தை அவர் 1896ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே கொண்டிருந்-தார் எனத் தெரிகிறது. ஆனால் அவரால் அதை நிறைவேற்ற இயலவில்லை.
2_11_1944 அன்று முத்துசாமிக் கோனார் இறந்தார். அதற்கு முன் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கண்பார்வை இல்லாமல் துன்புற்றார் எனத் தெரிகிறது. ஆகவே அவரது பதிப்புப் பணி 1934ஆம் ஆண்டுடன் நின்று-விட்டது. 86 ஆண்டுகள் வாழ்ந்த அவர் கொங்கு வட்டார வரலாற்றிற்கு ஆதாரத் தரவுகளாகிய சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்த முன்னோடி என்னும் சிறப்பைப் பெறுகிறார்.
Share.

About Author

Leave A Reply