மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம்

0
ரெ. கார்த்திகேசு


மலேசியாவில் கட்டுரை இலக்கியங்கள் பற்றி எழுதும் முல்லை இராமையா இப்படிக் கூறுகிறார்: “(கடந்த 130 ஆண்டுகளில்) மலேசியா-வின் பல நகரங்களில் 200-க்கு மேற்பட்ட பத்திரிகைகள் (நாள், வார, மாத இதழ்கள்) பதிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்-கின்றன. அந்தப் பத்திரிகைகளையெல்லாம் சிறிது காலமோ நீண்ட காலமோ வாழவைக்கக் கட்டுரைகள் பெரும்பங்கு ஆற்றியிருக்க வேண்டும்”
மலேசியாவில் தமிழர் வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் அவர்களின் மொழி, கலை, இலக்கிய, சமுதாய வாழ்வின் பிரதிபலிப்பாக இருந்து அவற்றை வழி நடத்தவும் இந்தக் கட்டுரைகள் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன என்பது சரியான ஊகமே. இக்கட்டுரைகள் சில வேளைகளில் நூல் உருவம் பெறும்போதுதான் அவை வரலாற்றில் நிலைக்கின்றன. அவற்றைப் பற்றியே இக்கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
தொடக்க காலம்
மலாயாவில் தொடக்க காலத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களுள் 1887இல் பலவேந்திரம் இராயப்பன் என்பவர் எழுதிய “சத்திய வேத சரித்திர சாரம்” என்னும் கிறிஸ்துவ நூலும், 1890இல் பதிப்பிக்கப்பட்ட “பதானந்த மாலை” என்னும் இஸ்லாமிய சமய நூலும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் கவிதைக் கூறுகள் அதிகம் இருந்தாலும் உரைநடைக் கூறுகளும் இருந்திருக்கலாம் என யூகிக்கலாம்.
தொடக்ககாலப் பதிப்பு நூல்கள் சமய நூல்களாகவே இருந்திருக்கின்றன. அச்சியந்திரம் ஆசியாவில் தோன்றிய ஆரம்ப காலத்தில் கிறித்துவ சமயப் பிரச்சாரம் தலையோங்கி இருந்த-தால் அதுவே முதல் அச்சு உற்பத்தி ஆயிற்று. இதனை முன்னோடியாக வைத்து இந்து, இஸ்லா-மியப் பிரச்சார இலக்கியங்களும் அச்சேறின.
இராம சுப்பையா தொகுத்துள்ள ஜிணீனீவீறீ விணீறீணீஹ்sவீணீஸீணீ என்னும் நூலின்படி  1920 முதலே மலாயாவில் நூல் பதிப்புகள் தொடங்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. உதாரணமாக 1920இல் “தமிழின் பெருமை” (டி.கே கந்தையாப்பிள்ளை); 1928இல் “சத்திய தரிசனம்” (ஆர்.சுவாமி); 1931-இல் “தமிழன்” (வே.கந்தையா);  “பத்துமலை மகத்துவம்” (அற்புதானந்தா), 1932இல் “அகில மலாயா தமிழர் மாநாடு” (கோ.சாரங்கபாணி);  1933இல் “தமிழ் மக்கள் மாண்பு” (வ.மு.கனகசுந்தரம்); 1933இல் “யாழ்ப்பாணக் குடியேற்றம்” (சிவானந்தன்); 1935இல் “கடிதங்களும் அவை எழுதும் முறையும்” (பி.கோவிந்தசாமி); 1936இல் “எங்கள் எதிர்காலம்” (சி.சின்னதுரை); 1936இல் “கடவுளின் உண்மைத் தோற்றம்” (எஸ்.கே.சின்னமுத்து); 1936இல் “உலகம் போற்றும் உத்தம நபி” (உ.அப்துல் அனீஃப்); 1937இல் “பண்டித நேருஜியின் மலாயாச் சுற்றுப் பயணச் சரித்திரம்” (நெல்லை இரா.சண்முகம்); 1937இல் “வருங்கால நவயுகம்” (சீ.வி.குப்புசாமி); 1937இல் “மலாயாவின் தோற்றம்” (முத்துப் பழனியப்பச் செட்டியார்); 1939இல் “மலாயா மான்மியம்” (சரவணமுத்து) ஆகியன வெளிவந்துள்ளன.
இவை போலவே இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ சமய விளக்கங்களும், மலாயாவின் வரலாறும், இந்திய வரலாறும், தமிழர் சமுதாய நிலையும் மலாயாவில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களில் அதிகம் எழுதப்பட்டுள்ளன.
1940களில் சுவாமி சத்தியானந்தா மலாயாவில் வாழ்ந்திருந்து “சுத்த சமாஜம்” என்னும் அனாதைக் குழந்தைகள் ஆசிரமத்தை நிறுவியதுடன் மலாயாவின் அரசியல் சமூக வரலாறுகள் பற்றி-யும் இந்து சமயம் பற்றியும் நூல்களும் எழுதி-னார். பிரமச்சாரி கைலாசம் என்பது அவருடைய இன்னொரு பெயரும் ஆகும். அவருடைய நூல்களில் குறிப்பிடத் தக்கன: 1940இல் “மலாயா சரித்திரம்”; 1941இல் “மலாயா தேசிய சரித்திரக் காட்சிகள்”; 1950இல் “கண்ணன் சரித்திரம்”; 1952இல் “நமது சமய விளக்கம்”; 1953இல் “உயர்ந்தோர் உலகு”
1935 முதல் திராவிடர் கழக சீர்திருத்தப் பிரச்சாரங்கள் பற்றிய நூல்கள் எழுதப்பட்டன. எடுத்துக்காட்டாக 1939இல்  “பெரியார் ஈ.வே.ரா.” (சீ.வி.குப்புசாமி); 1955இல் “வரலாற்றில் தமிழகம்” (கா.ப.சாமி) ஆகியவை. 1935இல் அ.சி.சுப்பையா “சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்” என்னும் அரிய கற்பனை நூலை எழுதினார். பரமசிவன், சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செய்தது துரோகம் என்னும் தொனியில் நீதிமன்ற வழக்காக அவர் எழுதியது புராணக் கதைகளைக் கேலி செய்யும் திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் அடிப்படையிலேயே ஆகும்.
தமிழ் முரசு தந்த ஊக்கம்
சிங்கப்பூரில் கோ. சாரங்கபாணி ஆசிரியராக இருந்து நடத்திய தமிழ் முரசு நாளிதழில்  எல்லாவித இலக்கிய வடிவங்களையும்  ஊக்குவிக்கவேண்டும் என்று 1952இல் நடத்தப்-பட்ட எழுத்தாளர்  பேரவை, கட்டுரைகளையும் ஊக்குவித்துப் பயிற்சியும் அளித்தது.   தரக்-கட்டுப்-பாட்டிற்கு எந்த அளவிற்கு, அந்தக் காலத்திலேயே, எழுத்தாளர் பேரவை முக்கியத்-துவம் கொடுத்தது என்பது கவனிக்கத் தக்கது.
எந்த ஒரு படைப்பும் உறுப்-பினரான இரண்டு எழுத்தாளர்-களுக்கு அனுப்பப்பெற்றுத் திருத்தம் பெற்ற பின்னரே அச்சில் ஏறமுடியும். மற்று-மொரு விதி,  பேரவையில் உறுப்பியம் பெற்றவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பை ஒப்படைக்க வேண்டும். இது, எழுத்தாளர்-களைத் தொடர்ச்சி குன்றாமல் வளர்ப்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சி.
தாளிகைகளில், அறிவுபூர்வமான சிந்தனை-களையும், எழுத்தாற்றலையும் வளர்ப்பதற்கு, வேண்டுமென்றே முடுக்கிவிடப்பட்ட சில சர்ச்சைகள் கட்டுரைத்  துறையை வளர்த்தன. பேரவையை முன்னின்று நடத்திய சுப.நாராயணன் (கந்தசாமி வாத்தியார்) “அண்ணா அறிஞரா?” என்ற கேள்வியை எழுப்பினார். அண்ணாவின் எழுத்தில் தணியாத ஆவல் கொண்டிருந்த பலரை இந்தக் கேள்வி ஆவேசம் கொள்ளச் செய்தது. அண்ணா அறிஞர்தான் என்று பல சான்றுகளுடன் பலர் எழுதினார்கள்.
அடுத்து, “திருக்குறள் அபத்தக் களஞ்சியம்” எனும் கட்டுரைத் தொடரை  சுப. நாரயணனே எழுதி தமிழ் முரசில் வெளியிட்டார். இதற்குப் பதிலாக “திருக்குறள் அறிவுக் களஞ்சியம்” என்ற பதில் கட்டுரையை தி.சு.சண்முகம் எழுதினார்.
புதுமைப்பித்தன் கதைகள் ஆபாசமானவை எனும் பொதுக் கருத்தைத் தீவிரமாக எதிர்த்து, சுப.நாராயணனும் மா.செ. மாயதேவனும் அவை விரசமற்றவை எனும் ஆய்வுக் கட்டுரைகளைத், தக்க சான்றுகளுடன் எழுதி “இலக்கியத்தில் புதுமைப்பித்தன்” எனும் நூலை 1961இல் வெளியிட்டனர்.
சுதந்திர மலேசியாவில் (1957க்குப் பின்னர்)
மலாயா சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தியர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) புதிய நாட்டில் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு உரிய அங்கீகாரம் பெற வேண்-டும் என்னும் மனநிலையும் பொருளாதாரத்தில் எழுச்சி பெற வேண்டும் என்ற மனநிலையும் உயர்ந்து இருந்தது. தமிழர் எழுச்சிக்காக கோ.சாரங்கபாணி தமிழர் திருநாள் இயக்கத்-தைத் தொடங்கியதும் இந்த காலகட்டத்திலேயே ஆகும். இந்த உணர்வுகளைக் குறிக்கும் கட்டுரை நூல்கள் பல சுதந்திரம் அடைந்த காலத்தி-லிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
மா.செ. மாயதேவன் இலக்கியம் சமுதாயம் இரண்டிலும் தன்னை முற்றாக இணைத்துக் கொண்டவர். 1958இல் “தமிழர் நாகரிகமும் கலையும்” என்னும் நூல் ஒன்றினை அவர் பதிப்பித்தார். 1968இல் “மலேசியாவில் தமிழர்கள்” என்னும் நூலையும் எழுதினார். இவரே தமிழ்ப் புத்திலக்கியத் தொண்டாக புதுமைப்பித்தன் படைப்புக்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்தி அக்கருத்தரங்கக் கட்டுரைகளை 1961இல் பதிப்பித்தார். இதனைத் தொடர்ந்து மலேசிய எழுத்தாளரான மா. இராமையாவின் எழுத்துக்-களைப் பாராட்டும் முகமான விழா ஒன்றையும் நடத்தி அந்தக் கட்டுரைகளை 1975இல் “மா.இராமையாவின் இலக்கியப் பணி” என்ற தலைப்பில் வெளியிட்டார். 
கா.கலியபெருமாள் நீண்ட காலம் தமிழாசிரி-யராக தமிழுணர்வோடு ஏராளமான கட்டுரை-களை எழுதினார். 1965இல் “மலேசியாவில் தமிழர் திருநாள்” என்னும் ஒரு நூலை எழுதினார். இவர் மலேசியத் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாட நூல்கள் பலவற்றையும் நிறையத் துணை நூல்களையும் எழுதியுள்ளார்.
ஐம்பது முதல் எழுபதுகள் வரை இலக்கிய விளக்க நூல்கள்
எல்லாக் காலங்களிலும் இலக்கியம் கற்ற அறிஞர்கள் தொடர்ந்து இலக்கிய நூல்களைப் படைத்து வந்திருக்கிறார்கள். இவர்களுள் முக்கியமானவர் ரெ.இராமசாமி. யாப்பிலக்கணம் நன்கறிந்த புலவரான இவர், வானொலியில் தொடர்ந்து இலக்கிய உரைகள் ஆற்றியதுடன் நூல்களும் வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களில் குறிப்பிடத்தக்கன: 1967இல் “பாரதி-யின் காதலி”; 1976இல் “கம்பரின் காவிய ஓவியம்” ஆகியவை.
மலேசியாவில் பணி புரிவதற்காக தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த சில அறிஞர்களும் இலக்கிய நூல்கள் படைத்து இங்கு பதிப்பித்துள்-ளார்கள். சில எடுத்துக்காட்டுக்கள்: ஈ.ச.விசுவ-நாதன், “வான் கலந்த மாணிக்கவாசகம்”,(1964); கா.பொ.இரத்தினம், “கல்கியின் இலக்கியத் திறன்”, (1964); ப.அருணாசலம், “கவியரசர் பாரதி”, (1966); சா.அமீது, “சிந்தைக்கினிய சிலம்பு”, (1962).
இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட சில பிரயாண நூல்கள்: ஏ.சண்முகம், “போபாலில் கபி கபி”, (1978); வே.விவேகானந்தன், “அஜந்தா அழைக்கிறது”, (1979).
1980-1990களில் மலேசியத் தமிழ்க் கட்டுரை நூல்கள்
80-களில் அச்சுத் தொழிலின் முன்னேற்றமும் படிப்போர் தொகைப் பெருக்கமும் நூல்களின் பதிப்பை இலகுவானதாக ஆக்கியதால் மேலும் நூல்கள் பல்கிப் பெருகுவதாயின. நூல்களின் கருப்பொருள்களும் பல்வேறாகின.
சமய ஆன்மீக நூல்கள்
பொதுவாக சமயம் ஆன்மீகம் தொடர்பான நூல்களே அதிகம் வெளிவந்துள்ளன. சித.இராமசாமி பல நூல்கள் எழுதினார். 1985இல் அவரின் “தேவாரத் தேன்”, “ஆன்மீகச் சிந்தனைகள்” ஆகியவையும் 1989இல் “இந்து சமயம்-ஒரு கண்ணோட்டம்” என்ற நூலும் வெளிவந்தன. எஸ்.ஆர்.எம். பழனியப்பன் 1995இல் “நகரத்தாரின் குல தெய்வங்கள்” மற்றும் 1996இல் “பருவநாள் விழாக்களும் பலன் தரும் விரதங்களும்” எழுதினார்.
இவற்றுக்கு எதிராக சமய / சடங்கு மறுப்புக் கொள்கை நூல்களும் வெளிவந்தன. நாரண திருவிடச்செல்வன் 1991இல் “அலகுக் காவடி. தீமிதி: அருளா அறிவியலா?” என்னும் நூலை எழுதினார். குறள் நெறி போற்றும் நூலாக சி.மணிக்குமரன் 1996இல் “வள்ளுவர் சொல்லே வேதம்” என்னும் நூல் எழுதினார்.
ஒரு கிறிஸ்துவ சமய போதகரும் சமுதாயச் சிந்தனையாளருமான வே.தேவராஜூலு இக்கால-கட்டத்தில் பல நூல்கள் வெளியிட்டார்: “உறவாடும் உண்மைகள்”, “புதிய வாழ்க்கை”, “நீதியின் பாதையில்”, “இன்று புதிதாய்ப் பிறந்தோம்”, “அருட்சுவைக் கதைகள்” ஆகியவை அவற்றுள் சில.
வாழ்க்கை வரலாறு, அனுபவங்கள் முதலியன
இந்தக் கால கட்டத்தில் மலேசியாவில் வாழ்ந்த முக்கிய சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் நூல்களாகியுள்ளன. தமிழ்ச் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைவரை அறிமுகப்படுத்தும் நூலாக 1980இல் மு.திருவேங்கடம் எழுதிய “கோ.சாரங்கபாணி” வெளிவந்தது. 1994இல் தமிழ் அமைச்சர் சாமிவேலு பற்றிய “நாயகன் கண்ட சாமிவேலு” என்னும் நூலை மலர்விழி குணசீலன் எழுதி-னார். அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் இந்திராணி சாமிவேலு பற்றிய “மகளிர் மாமணிக்கு ஓர் மகுடம்” என்ற நூலை கலாராமு வெளியிட்டார்.
தமிழ் மொழி, இனம் பற்றிய நூல்கள்
கா.கலியபெருமாள் அதிகம் நூல்கள் எழுதியுள்ள நல்ல தமிழ்ச் சிந்தனையாளர். அவர் எழுதிய முக்கிய நூல்கள்: 1983இல்”செந்தமிழர் சிந்தனைகள்”; 1985இல் “உலகத் தமிழர்”; 1993இல் “தமிழர்கள் சிந்திக்கிறார்களா?”. தமி¢ழர்க-ளிடையே காணப்படும் திருமணம் மற்றும் இறப்பு பற்றிய சடங்குகளை நெறிப்படுத்தும் இரண்டு முக்கிய கையேடுகளையும் அவர் எழுதியுள்ளார்: “தமிழர் திருமண முறைகள்”, “நீத்தார்கடன் நெறிமுறை-கள்’’ என்னும் தலைப்புக்களில் அவை வெளி-வந்துள்ளன.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்த இர.ந.வீரப்பன், 1992இல் “உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க வரலாறு” என்னும் நூலை எழுதினார். தமிழர்கள் குழந்தை-களுக்குத் தமிழில்தான் பெயரிட-வேண்டும் என்பதை வலியுறுத்தி 1980இல் நாரண திருவிடச்-செல்வன் “தமிழில் பெயரிடுவோம்” என்னும் நூலை எழுதினார். இது பல பதிப்புக்கள் கண்டிருக்கிறது. தமிழின் பயன்பாட்டுச் சிதைவை எடுத்துக் காட்டும் நூலாக இரா.முருகனார் 1984இல் “நசிவுறும் நற்றமிழ்” எழுதினார். தமிழாராய்ச்சி மாநாடுகளில் தாம் கலந்து கொண்ட அனுபவங்-களைப் பத்திரிகை-யாளரான வே.விவேகானந்தன் 1993இல் “உலகம் கண்ட தமிழ்” என்னும் தலைப்பில் எழுதினார்.
தமிழ் இலக்கியம், கலைகள் சார்ந்த கட்டுரை நூல்கள்
பொதுவாகத் தமிழ் இலக்கியத்தையும் மலேசிய இலக்கியங்களையும் போற்றவும் விமர்சிக்கவுமான நூல்களும் காலம் தோறும் தோன்றியவாறே உள்ளன. 1990இல் கா.கலிய-பெருமாளின் “கவிதை இன்பம்” வெளிவந்தது. 1991இல் இலக்குமி மீனாட்சி சுந்தரத்தின் “இலக்கிய அரும்புகள்” வெளிவந்தது. சிங்கப்பூர் மலேசியக் கவிஞர் பற்றி 1992இல் இர.ந.வீரப்பன் “மலேசியப் பாவரசு ஐ.உலகநாதன்” என்னும் நூல் எழுதினார். புத்திலக்கிய ஆய்வாளரான வே.சபாபதி 1995இல் “விடுதலைக்குப் பிந்திய தமிழ் நாவல்கள்” என்னும் நூலை வெளியிட்டார்.
மலேசியாவில் மேடை நாடகங்கள் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. 1987இல் அ.மணிசேகரன் “மலேசியாவில் மேடை நாடகங்கள்” என்னும் நூலை எழுதி அந்த வரலாற்றை ஆவணப்படுத்தினார். 1994இல் மேடை நாடகக் கலைஞர் ஆர்.பி.எஸ்.மணியம் “மலேசியத் தமிழ் நாடகங்கள்” எழுதினார். 
தன்முனைப்பை ஊட்டும் நூல்களாகப் பல வந்துள்ளன. 1991இல் சித.இராமசாமி “வாழ்வு நமதே”, “எண்ணம் போல் வாழ்க்கை” என்னும் இரு நூல்களையும், சுப்பிரமணியம் சுப்பையா “உனக்குள் இருக்கும் உன்னை நம்பு” என்னும் நூலையும் வெளியிட்டார்கள். தன்முனைப்புப் பயிற்சியாளரான ரெ.கோ.ராசு எழுதிய நூல்களில் 1998இல் வெளிவந்த “எல்லோரும் முன்னேறுவோம்”, “உங்களால் முடியும்”, “வெற்றிப் பாதையில்” என்னும் நூல்கள் முக்கியமானவை.
கடந்த பத்தாண்டுகளில் (1996-2006) கட்டுரை நூல்கள்
மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தின் போக்கு-களைப் பிரதிபலிக்கும் சிந்தனைகளை எழுத்தில் பதிக்கும் கட்டுரை முயற்சிகள் கடந்த பத்தாண்டு-களில் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. எளிதாகவும், மலிவாகவும் ஆகிவரும் அச்சு வசதிகள் இந்த முயற்சியை மேலும் தீவிரப்படுத்தி-ருக்கின்றன என்றும் சொல்லலாம்.-
அரசியல் வரலாறு/அரசியல் நிலைமை குறித்த நூல்கள்
மலேசியத் தமிழர்களின் வரலாற்றின் முக்கிய கட்டங்களை நினைவு கூறும் நூல் ஒன்று இந்தக் காலகட்டத்தில் வெளியாகிற்று. நாடறிந்த நல்ல எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான மெ. அறிவானந்தன் எழுதிய “இது எங்கள் சுவடு” (2005) என்னும் நூல் மலேசியாவில் இந்தியர்கள்- குறிப்பாகத் தமிழர்கள் – ஒப்பந்தக் கூலிகளாகக் கால் பதித்த காலத்திலிருந்து இன்று வரை அவர்கள் அடைந்-துள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒரு சுவையான கதை போலச் சொல்லும் நூல். தமிழ்ச் சமூகத்தை-யும், கலாசாரத்தையும், மொழியையும் ஆதி நாளில் நிலைப்படுத்திய தமிழ்த் தலைவர்கள் பற்றியும் இயக்கங்கள் பற்றியும் மிக அரிய தகவல்களை அரிய புகைப்படங்களோடு மெ.அறிவானந்தன் இதில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
இந்தப் பத்தாண்டு காலகட்டத்தில் அரசாங்கக் கொள்கைகளையும் தலைவர்களை-யும் போற்றும் நூல்களும் வந்திருக்கின்றன.
மலேசியாவின் இப்போதைய பிரதமர் அப்துல்லா படாவி 2003இல் நாட்டின் ஐந்தாவது பிரதமராகப் பதவி ஏற்றார். எல்லாத் தரப்பினருக்கும் இணக்கமான ஆன்மீக உணர்வுள்ள அன்பான மனிதர் என அவரை நாடு ஏற்றுக்கொண்டது. அதை ஒட்டி “அற்புத மனிதர் அப்துல்லாஹ்’’ (2004) என்னும் வாழ்க்கை வரலாற்று நூலை முகம்மது இக்பால் என்பவர் எழுதி வெளியிட்டார். இஸ்லாமியக் கல்வி வாரியம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள மலேசிய அமைச்சர் சாமிவேலு “அப்துல்லா படாவி அவர்கள் மாறி வரும் உலகச் சூழலுக்-கேற்ப நாட்டை மிகவும் நிதானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தி வருகிறார்… இன்றைய பிரதமர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் தமிழ் மொழியில் அறவே இல்லை எனும் குறையை நண்பர் அவர்கள் நிறைவு செய்திருக்கிறார்’’ எனக் குறிப்பிடுவது மிகச் சரியே ஆகும்.
மலேசியாவில் ஆளும் கூட்டணியின் ஓர் அங்கமாக விளங்கும் மலேசியர் இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா.) நாட்டின் சுதந்திர வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருப்பதுடன் மலேசியாவில் தமிழ் மொழி, பண்பாடு, கலைகள், இலக்கியம் ஆகியவற்றின் காவலனாகவும் இருந்து வருகிறது. இதன் வரலாறு பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் சில நூல்கள் இந்தக் கால கட்டத்தில் வந்துள்ளன. 1998இல் அண்மையில் மறைந்த தலைவர் குறித்து “ம.இ.கா.வில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம்” (1966) என்னும் நூலை கு.சோணைமுத்து எழுதினார். ம.இ.கா.வை வளர்த்தெடுத்த முக்கிய தலைவர்-களுள் ஒருவர் மாணிக்கவாசகம். இந்த நூல் அவருடைய அரசியல் பணிகள் பற்றியே அதிகம் குறிப்பிட்டாலும் அவருடைய சமூக சேவைகள் பற்றிய முக்கிய குறிப்புக்களும் உள்ளன.
“ஜான் திவி முதல் சாமிவேலு வரை” (1998) என்னும் அரசியல் வரலாற்று நூலை ப.சந்திர-காந்தம் எழுதினார். ம.இ.கா.வின் நிறுவனத் தலைவர் திவி முதல் இன்றைய தலைவர் சாமிவேலு வரை அந்த அரசியல் இயக்கம் வளர்ந்த வரலாற்றுக் குறிப்புகள் இந்த நூலில் உள்ளன.  இதே ஆசிரியர் 1999இல் “சாதனைப் படிகளில் சாமிவேலு” என்னும் நூலையும் மற்றும் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி சோமசுந்தரம் குறித்து “கூட்டுறவுக் காவலர்” என்னும் நூலையும் எழுதினார். மலேசிய இந்தியர்களின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றினைத் தெரிந்து கொள்ள அரிய தகவல்களை வழங்கும் நூல்கள் இவை. இந்தக் காலகட்டத்தில் அமைச்சர் ச.சாமிவேலு குறித்த வேறு சில நூல்களும், மறைந்த வீ.தி.சம்பந்தன் குறித்த சில நூல்களும், மறைந்த மலேசியப் பிரதமர் குறித்த ஒரு நூலும் வெளிவந்துள்ளன. கடைசி இரண்டு தலைப்புக்-களில் உள்ள நூல்களை பூ.அருணாசலம் எழுதினார்.
கடந்த பத்தாண்டுகள் மலேசியா சுதந்திரம் அடைந்த அரைநூற்றாண்டுக் கட்டத்தைக் குறிக்கின்றன. இது சமுதாயம் தனது பொருளா-தார சமூக நிலைமைகளை மறு பரிசீலனை செய்யும் காலகட்டமாகவும் அமைந்திருக்கிறது.
இந்த சுதந்திர மலேசியா அரைநூற்றாண்டில் தீவிர பொருளாதார வளர்ச்சி பெற்று, ஏறக்குறைய ஒரு வளர்ச்சியடைந்த நாட்டின் ஸ்தானத்தை எதிர்நோக்கிப் போய்க்கொண்-டிருக்கிறது. ஆனால் முதலீட்டுவத்திற்கு முழு முதன்மை கொடுத்து, சமூக நீதிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்ட போக்காகவே இதன் விமர்சகர்கள் இதனைப் பார்க்கிறார்கள். முக்கியமாக அடிநாளில் அதனை வளப்படுத்த உழைத்த தமிழ்ச் சமூகம் நாட்டின் பொருளாதார வெற்றிக் கனிகளை சரிசமமாக அனுபவிக்கத் தொடங்கவில்லை என்ற பெரும் குறைபாடு இந்தச் சமூகத்தில் எழுந்து அதன் சிந்தனைப் போக்கை ஆக்கிரமித்துள்ளது எனலாம். நாட்டின் நிர்வாகத்தில் தமிழ்ச் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் பங்கு ஒரு கண்துடைப்-பாகவே செயல்படுகிறது என்றும், பொது-வாகவே அரசு தன் வளங்களைப் பகிர்ந்து கொடுப்பதில் பாரபட்சம் காட்டுகிறது என்றும் பரவலான குறைபாடுகள் எழுகின்றன.
இந்தச் சிந்தனைகளுக்குக் கட்டியம் கூறும் முகத்தானாக  ‘அலைகள்’ என்னும் இயக்கம் ‘ஒதுக்கப்படும் சமுதாயம்’ (1993) என்னும் நூலை வெளியிட்டது. தே.ஜெயகுமார் முதலிய நால்வரை ஆசிரியர்களாகக் கொண்ட இந்த நூல் தமிழ்ச் சமுதாயம் முக்கியப் பொருளாதார நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டு விட்டது என்பதை நிறுவுகின்றது. பக்கத்துக்குப் பக்கம் கேலிச் சித்திரங்களைக் கொண்டதாக இருக்கிறது. அட்டையில் “கார்ட்டூன் புத்தகம்’’ என்றே போடப்பட்டுள்ளது. “தூரநோக்குத் திட்டம் 2020இல் தொழிலாளர்களுக்கு என்ன இருக்கிறது?’’; “ரப்பர் தோட்டத் தொழிலாளர்-களின் தொடரும் ஏமாற்றங்கள்’’; “சுரண்டல் மேல் சுரண்டல்’’ முதலிய 6 அத்தியாயங்கள் உள்ளன.
பின்னர் இதே அலைகள் இயக்கம் தோட்டப் பாட்டாளிகளின் சிதைந்து வரும் நிலைமையை முதன்மைப்படுத்தி “எழுச்சி’’ (1997) என்னும் நூலை வெளியிட்டது. ‘‘(மலேசிய) வளர்ச்சி நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்றடைய-வில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக உடல் உழைப்பை வழங்கி வரும் நாட்டு மக்கள் இன்னும் ஒதுக்கப்பட்ட நிலைமையிலேயே உள்ளனர். இதில் சுமார் 7 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தோட்ட மக்களும் அடங்குவர்’’ என இதன் முன்னுரையில் கூட்டாசிரியர்களான இரா. மோஹனராணி, தே.ஜெயகுமார், இரா.நேரு ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியரான பி.ராமசாமி “மலேசியத் தோட்டத் தொழி-லாளர்களின் வாழ்வும் போராட்டங்களும்’’ (1999) என்னும் நூலை வெளியிட்டார். அவருடைய ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பான இது மலேசியாவில் தோட்டப் பாட்டாளிகளின் வரலாற்றை விமர்சன நோக்கில் கூறுகின்ற முக்கிய ஆவணமாக அமைந்தது. இந்நூலுக்குப் பதிப்புரை வழங்கியுள்ள பசுபதி சிதம்பரம் “நம் முன்னோர் தம் வாழ்வியலில் பதித்த உதிரச்-சுவடுகளின் வடிவம் இந்நூல். இந்நூலை மலேசியத் தேசியப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பி.ராமசாமி தம் பட்டப் படிப்பு ஆய்வுக்காக மேற்கொண்டிருந்தார். தமிழில் இந்நூலை வெளிக்கொணர வேண்டும் என்ற எமது பேராவல் இப்போது நிறைவேறியிருக்-கிறது. இங்கும் தமிழகத்திலும் இதற்கான மொழி-பெயர்ப்புப் பணிகள் நடந்தன’’ எனக் குறிப்பிட்-டுள்ளார்.
மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தின் சரிவுகள் பற்றித் தீவிரமாக எழுதியுள்ள நூலாசிரியர்-களில் ஒருவர் மு.வரதராசு. ஏற்கனவே “மலேசியத் தோட்டத் தொழிலாளர்கள்: வரலாறும் பிரச்சினைகளும்’’; “மலேசியா: எங்கே என் பங்கு’’ என்னும் நூல்களை இயற்றியுள்ள இவர் இக்கால கட்டத்தில் “எரிந்து கொண்டிருக்கும் தமிழினம்’’ (2004) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். 
இதன் முன்னுரையில் இதன் வெளியீட்-டாளர்களான அறிவாலயம் இயக்கத்தினர் நூலாசிரியரை இப்படி வருணிக்கிறார்கள்: “நூலாசிரியர்கள் பலர் தமது அறிவுத்திறனின் வெளிப்பாடாக நூல்களை எழுதி வெளியிடுவர். வரதராசு இப்போக்கிலிருந்து மாறுபட்டவர். தம் சமகாலத்து மக்களின் எழுச்சிப் போராட்டங்-களைப் பதிவு செய்வார். தம்முடைய மக்களின் கடந்த காலப் போராட்டங்களைப் பதிவு செய்வார். மக்களுக்கு எதிரானவர்கள் எவ்வளவு பெரிய பதவியிலிருந்தாலும் ஆதாரங்களோடு அவர்களை அம்பலப்படுத்தத் தயங்க மாட்டார்.’’
இந்நூலில் தமிழர்களின் பல சமகாலத் தோல்விகளையும் துரோகங்களையும் அவர் படம் பிடிக்கிறார். தென்னிந்தியத் தொழிலாளர்-களின் நிதி வாரியம், செலஞ்சார் தோட்டத்தில் அடிமை முறை, தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகம், தோட்டத் தொழிலாளர் வீட்டுடமைத் திட்டம் போன்ற பல நிறுவனங்-களின் தோல்விகளை இதில் அவர் முன் வைத்து விமர்சிக்கிறார்.
மா.ஜானகிராமன் மலேசிய இந்தியர்களின் நிலை பற்றித் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். அப்படிப் பல ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “மலேசிய இந்தியர்-களின் இக்கட்டான நிலை’’ (2006) என்னும் நூலை வெளியிட்டார். மலேசிய இந்தியர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) மலேசியாவின் வளப்பத்தில் இன்னும் போதிய பங்கினைப் பெறாமல் மறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கருவினையே வலியுறுத்துவனவாக இக்கட்டுரை-கள் அமைந்துள்ளன.
இதன் முன்னுரையில் நூலாசிரியர் இப்படிக் கூறுகின்றார்: நாட்டில் ஏறக்குறைய 17 லட்சம் இந்தியர்கள், மக்கள் தொகையில் 7.6 விழுக்காடு என்ற நிலையில் உள்ளனர். மலேசிய இந்தியர்கள் சமூகப் பொருளாதார, கல்வி நிலையில் ஓரளவு வளர்ச்சி அடைந்திருந்த போதிலும்  நாட்டில் உள்ள மற்ற சமூகங்களின் மேம்பாடு போன்றவற்-றோடு ஒப்பிடுகையில் இன்னும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்து 48 ஆண்டுகள்  கடந்தும் இந்தியர்-களின் அவலங்கள் சமுதாயத்தின் மத்தியில் வெளிச்சம் காட்டிக் கொண்டிருக்கின்றன  என்பதனை நாம் மறுப்பதற்கில்லை. ஒரு தன்னிறைவு அடையாத, எப்போதும் மற்றவர்-களை எதிர்பார்க்கும் சமூகமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியச் சமுதாயம் இருந்து வந்துள்ளது.’
இந்த அரசியல் சமூகப் பொருளாதாரச் சிந்தனை வரிசையில் ஆகக் கடைசியாக வந்துள்ள நூல் ஓர் அரசியல்வாதியும் முன்னாள் பத்திரிக்கையாளருமான பொன்முகத்தின் ‘மலேசிய அரசியலில் தமிழர்களின் எதிர்பார்ப்பும் எமாற்றமும்’ (2007). தமது நோக்கத்தை அவர் முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்: ‘இந்த நாட்டின் ஆளும் கட்சி அரசியல் தலைவர்களும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கக்கூடாது என்னும் அவர்களின் சிந்தனையும் நாட்டின் எதிர்கால அரசியல் ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதாக இல்லை… இந்த அரசியல் சூழ்நிலையில்தான் இந்தப் புத்தகத்தை உங்களுக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்-பட்ட அரசாங்கத்தின் தவறான போக்கைக் கண்டிக்க வேண்டும் என்னும் உரிமை உங்களுடையது.’
பொதுவாக மலேசியத் தமிழர்களின் இன்றைய நிலையின் சரிவை உரக்கக் கூறும் நூல்கள் அதிகம் வந்திருப்பது ஒரு வகையில் அரசாங்கம் மக்களின் குரல் ஒலிக்கக் கொடுத்திருக்கும் தாராளமயப் போக்கைக் குறிக்கிறது என்றும் சொல்லலாம்.
சமூக, தனிமனித நோக்கு நூல்கள்
தமிழ்ப் பத்திரிகைத் துறையில் நீண்டநாள் அனுபவம் உள்ள எம்.துரைராஜ் தமது அனுபவங்-களைத் திரட்டி 2001இல் “பாதைகள் பயணங்கள்” என்னும் நூலை வெளியிட்டார். மலேசியாவில் சமூகம், பத்திரிகைத்துறை, அரசியல், இலக்கியம் ஆகியவற்றில் பின்னிப் பிணைந்திருக்கும் துரைராஜின் இந்த நூல் மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் உள்ள பல நிரப்பப்படாத பக்கங்களை நிரப்ப உதவும் நூல் என வருணிக்கலாம். 2003இல் ஒரு மலேசிய இந்தியர் காங்கிரஸ் பிரமுகரான சு. சுப்பிர-மணியம், “மனதில் வரைந்த மனிதர்கள்” என்னும் நூலை எழுதினார். இந்த இரண்டு நூல்களுமே இந்த நாட்டின் முக்கிய சமுதாய, அரசியல் விளைவுகளை பழுத்த அனுபவம் வாய்ந்த மனிதர்களின் தனிப்பட்ட பார்வைகளை திறந்த மனத்தோடு முன்வைக்கும் நூல்களாகும். தொடர்ந்து துரைராஜ் தமது சமுதாயக் கருத்து-களைத் திரட்டி ‘நினைக்கத் தெரிந்த மனமே’ (2005) என்னும் நூலையும் வெளியிட்டார்.
பத்திரிகைத்துறை அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட இன்னொரு பத்திரிக்கை-யாளர் வீ.செல்வராஜ். “சில உண்மைகள்”, “ஒரு வித்தியாசமான பார்வை”, “ஒரு பத்திரிக்கை-யாளனின் பார்வையில்” (2002) முதலியன அவரது நூல்கள்.
1934இல் மலாயாவுக்கு வந்து ஒரு சாதாரணத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, தொழிற்சங்கவாதியாகவும், நடிகராகவும், சமுதாயத் தொண்டராகவும் திகழ்ந்த ப.ஆ.முருகேசுவின் ‘நான் நடந்து வந்த பாதை’ (2001) சுவையான சமூக வரலாற்றுத் தகவல்-களைக் கூறும் சுயசரிதை.
மலேசியத் தமிழ்க் கலாசார, மொழி, இலக்கியக் கூறுகள்
மலேசியத் தமிழர்களின் சிறப்பான மொழி, கலாசாரக் கூறுகளைக் கூறுகின்ற நூல்கள் சிலவும் வெளிவந்துள்ளன. பழம்பெரும் பினாங்கு மாநிலத்தை வசிப்பிடமாகக் கொண்ட பி.எல்.சிங்காரம் எனும் கவிஞர் ‘பினாங்குத் தென்றல்’ (2001) எனும் நூலை எழுதினார். பினாங்கில் நகரத்தார் சமுகத்தினர் அமைதியாக ஆற்றியுள்ள மிகக் கணிசமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை அவர் இதில் ஒரு பூரிப்போடு திரும்பத் திரும்ப கோயில்-களின் கட்டிட அமைப்பு, வரலாறு, விழாக்கள்–முக்கியமாகத் தைப்பூசம்– பற்றிய பல அரிய தகவல்கள் இதில் இருக்கின்றன.
கா.கலியபெருமாள் அதிகம் நூல்கள் எழுதியுள்ள நல்ல தமிழ்ச் சிந்தனையாளர்.
இவருடைய பதிப்பு முயற்சிகளின் சிகரமாக 1997இல் “தமிழ்ப் பண்பாட்டுக் களஞ்சியம்” என்னும் 1102 பக்கங்கள் கொண்ட பெருநூலைத் தொகுத்து வெளியிட்டார். தமிழ்நாடு, மலேசியா-வில் உள்ள பல தமிழறிஞர்கள் இதில் கட்டுரைகள் வழங்கியுள்ளார்கள். தமிழர்களின் பண்பாட்டையும் மரபுகளையும் பிழிந்து கொடுக்கும் பல கட்டுரைகள் இதில் இருப்ப-துடன், திருமணம், இறப்பு முதலிய சடங்கு-களைத் தகுதரப்படுத்தியும் தந்திருக்கிறார். 2004இல் “வளர்தமிழ்ச் சிந்தனைகள்” என்னும் மொழி பற்றிய கருத்துக் கட்டுரைகளையும் தொகுத்து வெளியிட்டார்.
பழம்பெரும் எழுத்தாளரான மா.இராமையா 1996இல் “மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்” என்னும் அரிய வரலாற்று நூலை எழுதினார். தாம் ஏற்கனவே 1978இல் எழுதிய “மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் நூலை விரிவாக்கம் செய்து எழுதிய நூல் இது. புத்திலக்கிய ஆய்வாளரான வே.சபாபதி 1995இல் “விடுதலைக்குப் பிந்திய தமிழ் நாவல்கள்” நூலையும் தொடர்ந்து 1996இல் “விடுதலைக்கு முந்திய தமிழ் நாவல்கள்” நூலையும் வெளியிட்டார்.
மலேசியாவில் இதுகாறும் வெளியான கவிதைகளைத் தொகுத்து அவற்றிற்கு ஒரு நெடிய ஆய்வு முன்னுரையும் எழுதி 1997இல் முரசு நெடுமாறன் “மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்னும் நூலை வெளியிட்டார். மேற்கண்ட நான்கு நூல்களும் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான நூல்களாக அமைந்தன. முரசு நெடுமாறனின் நூலுக்கு 1998இல் ஆண்டின் சிறந்த நூலாக டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் விருது வழங்கப்பட்டதோடு அதே ஆண்டில் இலக்கியச் சேவைக்காக அவருக்குத் தமிழ் நாட்டின் பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கால கட்டத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு நோக்கில் காணும் நூல்கள் பல பதிப்பிக்கப்பட்டன. அவற்றுள் 2001இல் சை.பீர்முகமது தொகுத்தளித்த “மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும்” என்ற நூலும், 2004இல் ரெ.கார்த்திகேசு எழுதிய “விமர்சன முகம்” என்னும் நூலும் முக்கிய-மானவை ஆகும். ‘விமர்சன முகம்’ மலேசியாவில் புத்திலக்கியக்கத்தைத் திறனாய்வு செய்யும் முதல் நூல் என்று சொல்லலாம். சை. பீர்முகமதுவின் இலக்கியச் சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைத் தொகுப்பான ‘திசைகள் நோக்கிய பயணங்கள்’ (2006) காலச்சுவடு வெளியீடாக வந்தது.
ரெ.சண்முகம் என்னும் இசை, மேடை, வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர்  “இந்த மேடையில் சில நாடகங்கள்” (1997) என்னும் தலைப்பில் தம் மேடை நாடக அனுபவங்களை எழுதினார். இந்தக் காலகட்டத்திலேயே
கி. சுந்தர்ராஜ் எழுதிய பொது அறிவுக் கட்டுரை-களான “நாங்கள் பேசினால்”; “விலங்குகள் பேசினால்”; “ஐந்து மூலங்கள்” (2003) ஆகியவை வெளி-வந்தன.
மலேசியத் தேசியப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை மலேசிய/சிங்கப்பூர்  தமிழ்க் கல்வி மொழி, இலக்கியம், பண்பாடு ஆகிய-வற்றின் முன்னோடிகளின் சுருக்க அறிமுகம் கொண்ட ‘நம் முன்னோடிகள்’ (2000) என்ற நூலைப் பதிப்பித்துள்ளது. மலாய் மொழியை அதிகாரத்துவப் பயிற்று மொழியாகக் கொண்ட இந்தப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஒரே தமிழ் நூல் இது எனலாம். அங்கு வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராக இருந்த திலகவதி குணாளன் அவர்களின் பெருமுயற்சியில் இந்த நூல் வெளிவந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இந்தப் பத்தாண்டு காலகட்டத்தில் மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்த சில நூல்களை வெளிக்கொணர்ந்தது. மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் இருப்பவர்கள், மறைந்தவர்-களின் 358 பெயர்கள் அடங்கிய எழுத்தாளர் விவரங்கள் அகரமுதலியாகத்  தொகுக்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்’ (2004) என்னும் நூல் முக்கியமானது. 2004இல் சங்கத்தின் குழு ஒன்று தமிழ்நாடு/புதுச்சேரிப் பயணம் மேற்கொண்ட போது பதிப்பித்து வழங்கப்பட்ட ‘மலேசியத் தமிழ் இலக்கியம்: ஓர் அறிமுகம்’ (2004) என்னும் நூல் மலேசியத் தமிழ் எழுத்து வடிவங்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது. 2005இல் சங்கம் நடத்திய மலேசிய_சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் கருத்தரங்-கத்தின் கட்டுரைகள் அடங்கிய நூல் ‘மலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் 2005’ (2007) பதிப்பிக்கப்பட்டுள்ளது.
சமய ஆன்மிக நூல்கள்
இந்தக் காலகட்டத்தில் சமய, ஆன்மிக  நூல்கள் பல வந்தன.
1997இல் சித.இராமகிருஷ்ணன் ‘விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்: இந்து சமய விளக்கம்’ என்னும் நூலை எழுதினார். ‘பல ஆண்டுகளுக்கு முன்னமே நான் இந்து சமயத்தைப் பற்றிப் பொது மேடைகளில் பேச முன்வந்த போது எனது நாட்டம் நம் சமயத்தின் அறிவியல் அஸ்திவாரத்தைப் பற்றி எண்ணத் தலைப் பட்டது. அதன் விளைவாகப்  பல நூல்களைப் படித்தும் சிந்தித்தும் ஆராய்ச்சிகள் செய்தும் குறிப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். ‘இந்து சமயமும் அறிவியலும்’ என்ற தலைப்பிலேயே அதிகம் பேசியும் எழுதியும் வந்தேன். அதன் விளைவாகவே விஞ்ஞானம் -மெய்ஞ்ஞானம் எனும் தலைப்பில் ‘சக்தி’ மாத இதழில் பல மாதங்கள் எனது கட்டுரைகள் வெளிவந்தன. அவற்றின் தொகுப்பே இந்நூல்’ என முன்னுரை-யில் அவர் குறிப்பிடுகிறார்.
எஸ்.ஓ.கே. உபயதுல்லா 2002இல் “இஸ்லாம்” என்னும் நூலை வெளியிட்டார். கிறிஸ்துவ சமய போதகரான மு.இராஜன் 2002இல் “இயேசு செய்த அற்புதங்கள்”, மற்றும் “கவிஞர் கண்ட இயேசு”, “குமரிக் கண்ட நாகரிகமும் விவிலிய-மும்” என்னும் நூல்களை எழுதியுள்ளார்.
ஒரு முன்னாள் வானொலிக் கலைஞரான எஸ்.ஆர்.எம். பழனியப்பன் பின்னாளில் ஆன்மிகவாதியாகி பல அரிய நூல்களைத் தமிழில் இயற்றியுள்ளார். நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். அந்தச் சமூகத்தின் வரலாறு, மரபுகள் பற்றிச் சிறப்பாக எழுதுகிறார். “நகரத்தாரின் குல தெய்வங்கள்” (1995) என்னும் அரிய ஆராய்ச்சி நூல் நகரத்தார் தாயகங்களில் உள்ள குல தெய்வங்களையும் கோயில்களையும் வருணிக்கும் நூல். மற்றும்  “பருவநாள் விழாக்களும் பலன் தரும் விரதங்களும்” (1996), ‘ஞானப்பேர் நவில வைத்தார்’ (1998) ஆகிய நூல்களை எழுதினார்.
1998இல் அவருடன் மனமொன்றி இணை-பிரியாது வாழ்ந்த அவருடைய துணைவியார் திருவாத்தாள் மரணமுற்றதைத் தொடர்ந்து அவரோடு தான் வாழ்ந்த இல்லற வாழ்வையும் ஆன்மிக வாழ்வையும் மனமுருக வருணிக்கும் ‘பூவின் நாயகி’ (2002) என்னும் நூலை அவர் எழுதினார். இந்த நூல் தமிழ்/ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அமைந்தது. ஒரு தனிப்பட்ட-வரின் வாழ்க்கை வருணனை என்றாலும் மலேசியாவில் ஒரு மரபு சார்ந்த தமிழ்க்குடும்பம் தனக்கேற்ற உன்னத வாழ்வு வாழ உரிய சுதந்திரம் இருப்பதை உட்கருத்தாய்க் கொண்டு அழகிய தமிழில் கூறப்பட்டுள்ள நூல் இது.
மலேசியாவில் இந்து சமயமும் அது சார்ந்த ஆன்மிகமும் செழித்திருப்பதைக் குறிப்பதாக பல நூல்கள் வெளிவந்துள்ளன. சுவாமி பிரம்மா-னந்தா மலேசியாவில் பிறந்து வளர்ந்து படித்து ஆசிரியத் தொழில் ஆற்றி பின்னர் தீட்சை பெற்றுத் துறவியாகி ஓர் ஆசிரமத்தையும் நடத்தி வருகிறார். எளிய, தெளிந்த தமிழில் மலேசியத் தமிழ்ச் சமுதாயத்துக்கு வேண்டிய கருத்துகளை அவர் இந்தக் காலகட்டத்தில் இரண்டு நூல்களாகக் கொண்டு வந்தார். ‘மனமே சுகமே’ (2003) என்னும் கட்டுரைத் தொகுதி பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் அந்த ஆண்டுக்கான சிறந்த கட்டுரை நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2004ஆம் ஆண்டு தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘வாழ்வே தவம்’ (2006) கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்தது.
தன்முனைப்புக் கட்டுரை நூல்கள்
டைனமிக் தன்முனைப்பு மையத்தை நடத்தி வரும் டாக்டர் கேப்ரியல் ‘டைனமிக் தன்விழிப்-புணர்வுதான் தலை சிறந்த வழிகாட்டி’ (2003) என்னும் பெரும் நூலை வெளியிட்டார். மு.கணேசன் “மனமே விழித்திடு” (2004) வெளியிட்டார். தொடர்ந்து ‘சுடாவிட்டால் அது சூரியனல்ல’ (2006) என்னும் நூலையும் அவரே வெளியிட்டார்.  இந்தக் கால கட்டத்-தில் காதர் இப்ராஹிம் போன்ற தன்முனைப்புப் பயிற்சியாளர்கள் பல நூல்கள் வெளியிட்-டுள்ளனர்.
பிரயாணக் கட்டுரைகள்
கடந்த பத்தாண்டுகளில் வந்த பிரயாணக் கட்டுரை நூல்களில் சை. பீர்முகமதுவின் இரு நூல்கள் மிக முக்கியமானவை. அவருடைய ஆஸ்த்திரேலிய பிரயாண அனுபவங்களைத் தொகுத்து 1997இல் “கைதிகள் கண்ட கண்டம்” என்னும் நூலை எழுதினார். இதைத் தொடர்ந்து தமது இந்தியப் பயணத்தை அடிப்படையாக வைத்து 1998இல் “மண்ணும் மனிதர்களும்” என்னும் நூலை எழுதினார். அழகிய தமிழ் நடையில் பிரயாணச் செய்திகளோடு பீர் முகமதுவின் அரிய சிந்தனைகளையும் பின்னி வழங்கும் இந்த நூல் தமிழ் நாட்டிலும் பரவலாக அறிமுகம் பெற்றுப் பாராட்டுக்களும் பெற்றது. தமிழகக் ‘குமுதம்’ இதழின் ஆசிரியரால் தாம் படித்த அவ்வாண்டுப் புத்தகங்களிலேயே சிறந்த புத்தகமாக அது -குறிப்பிடப்பட்டது.
இணையத் தமிழ் இலக்கியம்
மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் இணைய இலக்கியமும் இடம் பெறத் தொடங்கி-யிருக்கிறது. மலேசியாவில் இருந்து இயங்கும் வலைத்தளங்களில் முக்கியமானது டாக்டர் சி.ஜெயபாரதி நடத்திவரும் “அகத்தியர்” தளமாகும். தமிழ் மொழி, கலாசாரம், தொன்மம், வரலாறு ஆகிய பலபொருள்களில் அவர் இணையத்தில் எழுதியுள்ள கட்டுரைகள் “இணையத்தில் ஜெய்பி” (2001) என்னும் தலைப்பிலும் “நாடி ஜோதிடம்” (2002) என்னும் தலைப்பிலும் நூல்களாக வெளிவந்துள்ளன. இணைய மாநாடுகள் நடந்த போதெல்லாம் வெளியிடப்பட்ட மலர்களில் இணையத்தின் தமிழ்ப் பயன்பாடு பற்றியும் தொழில் நுணுக்கம் பற்றியும் பல கட்டுரைகள் வெளியிடப்பட்-டுள்ளன.
முடிவுரை
மலேசியாவில் தமிழ் இதழ்கள் இருக்கும்-வரை எல்லாவிதச் சமுதாயக் கூறுகளையும் விவாதிக்-கவும் விளக்கவும் தமிழ்க் கட்டுரைகள் மற்றும் கட்டுரை நூல்கள் தொடர்ந்து வெளிவரும் என்பதில் ஐயமில்லை. மற்ற இலக்கிய வடிவங்-களை விடவும் கட்டுரைகளுக்கே வற்றாத கருப்பொருள்கள் இருந்து வரும்.
Share.

About Author

Leave A Reply