நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள்

0
அ. கோகிலா


சமூக _ பண்பாட்டு உணர்வுகளின் வெளிப்-பாட்டு வாயில்களாகத் தொன்றுதொட்டு நின்று நிலைத்து வருபவை நிகழ்த்து கலைகள். தமிழ்ப் பண்பாட்டினைக் கட்டமைப்பதற்கான தரவுகளாக இவை நம்மிடையே அமைந்துள்-ளன. நாட்டுப்புற மக்களால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. நிகழ்த்தப்படும் ஒவ்வொரு கலையும் தமக்குள் பல்வேறு சிறப்புக்-கூறுகளைக் கொண்டிருப்பதைக் காணமுடி-கிறது. இவ்வகையில் நிகழ்த்துக்கலைகளில் ஒன்றான கும்மி குறித்த அச்சுப் பதிவுகள் மிகக் குறைவு. இதனைக் கருத்தில்கொண்டு அச்சான கும்மிப் பிரதிகள் மக்களிடையே எவ்வகையான ஊடாட்டங்களை நிகழ்த்தின என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்க-மாக அமைகிறது. கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்-பட்டுள்ளது. 1869 முதல் கும்மி குறித்த அச்சுப் பிரதியினைக் காணமுடிகிறது.
கும்மி என்ற சொல் கொம்பை என்ற பெயரில் அகநானூறு, குறுந்தொகை முதலிய சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்-றுள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியில்,
‘நோற்ற பெருமையு டையாருங்
கூற்றம் புறம்கொம்மை கொட்டினாரில்’
என்று வரும் இடத்தில் கொம்மை என்ற சொல் கைகளைக் குவித்து ஆடுதல் என்ற பொருளில் வருகிறது. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியில்,
‘அங்கையந் தலத்தினா லப்புதா தையெனக்
கொங்கலர் கண்ணியான் கொம்மைதான் கொட்டலும்’
என்று வரும் இடத்தில் யானையின் முதுகுப் புறத்தைப் பொய்யாகத் தட்டல் என்ற பொருளில் கொம்மை பயன்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இவ்வாறு இலக்கியங்களில் பதிவான கொம்பை, கொம்மை எனத் திரிந்து பிற்காலங்களில் கும்மி, கொம்மி என்று மருவி வருவதனைக் காணமுடிகிறது. இதனைப் பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் அச்சுப் பிரதிகளில் ‘திருவாசகக் கும்மி’ (1869), ‘முருகர் ஒயிற்கொம்மிப்பாட்டு’ (1873) எனக் காண முடிகிறது. கும்மி தோன்றிய காலத்தைத் திட்டவட்ட-மாகக் கூறமுடியாது. எனினும் கொம்மை என்ற சொல் (கைகளைக் குவித்து ஆடுதல்) கும்மி என்ற சொல்லோடு தொடர்-புடையதாகக் காண முடிகிறது. இப்பொருளிலேயே அச்சுப் பிரதி-களில் பதிவு செய்துள்ளனர் என்பதைப் பின்வரும் கூற்றின் மூலம் அறியலாம்.
“சேலை எங்கே என்றதட்டி கேலிசெய்து கைகள்
கொட்டி
காலிகன்று மேய்க்கும் மட்டி கண் சிமிட்டி
சிரிக்குறாயே
கள்ளனே மெள்ளவே கொள்ளை கொண்டாய்
சேலையெல்லாம்’’
-(கோபிகா வஸ்திராபரணக் கும்மி, – 1911)
தமிழில் அச்சு வடிவம் உருவானபின் வாய்மொழியாக இருந்த கும்மி என்ற வடிவம் கூடுதல் வசதி கருதி அச்சடிக்கப்-பட்டது. அச்சு வடிவில் தோன்-றுவதற்கான பின்னணி குறித்துப் பின்வருமாறு அறியலாம்.
“தமிழ் நாட்டுக் கிறிஸ்துவப் பெண்கட்கும் சிறியோர்க்கும் பயன்படும் பொருட்டு ஆண்ட-வரைப் பற்றிய சில முக்கிய செய்திகள் எளிய நடை தாரண பதங்களை கொண்டு வரப்பட்டிருக்கின்றன. கும்மி இராகம் ஸ்தீரிகட்கு இதமாயும் சுலப-மாயும் இருக்கு-மென்று துணிவுற்று யாவருக்கும் விளங்கும்படி வேத வசனமொழிகளையே பெரும்பாலும் பிரயோகித்திருக்கிறேன்’’
(திருவாசக கும்மி, 1869; -முகவுரை)
என்ற கூற்றின் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான எளிய வடிவமாக கும்மி தோன்றியிருப்பதைக் காணமுடிகிறது. இதனைத் தொடர்ந்து, “அடியேன் செய்துள பூர்வவினை யனுபவிக்குமாறு தமிழ்விரோதி கிருது (1911_12) வருடம் அற்பசி திங்களில் அடியேன் முன்செய்துள பூர்வ வினையால் இச்சடத்தின் துன்ப நோயால் வேதனையடைந்து இச்சமயம் எனதன்பார்ந்த நண்பர்களால் இன்னூலி-லரைந்துள பகவானுக்குக் கைங்கரியம் புரியுமாறு தெரிவித்த அன்பர் மொழியை உறுதியுட-னெண்ணி பகவத் நாமஸ்மரணை புரியுங் கைங்கரியம் புரிய எண்ணியதின் பேரில் பகவான் கட்டளைப்படி அடியேன் சடலத்தில் மாந்துள துன்பஞ் சிற்றாமோதர அனற்பட்டு சுடலை யானவை-போற்கு இச்சடலத்திலமைந்துள வேதனை-யுடனே அடியேனை விட்டகன்றது. அஃதின் மேற்பகவான் திருவருளால் அடியே-னுள்ளந் தோன்றிய வரை இதிகாச பாரத இராமாயண சேதியுடன் இக்கிரியின் இரங்கற் புராணமும் கூட்டி ஒயிற்கும்மியாக நொடித்துளன்’’
(இராமாயண ஒயிற்கும்மி, -1912 முகவுரை)
என்ற கூற்றின் மூலம் மக்கள் தங்களுக்குண்-டான நம்பிக்கைகளை நிறைவேற்றும் சாதனமாகக் கும்மியினைப் பயன்படுத்தியிருப்-பதைக் காணமுடிகிறது.
கும்மிப் பாடல்களின் பெயர்கள் ‘இராம-ஸ்வாமி ஐயர்கள் குமாரராகிய இராமசுப்பையா பேரில் சந்தக் கும்மி’ (1910), ‘வியப்பை விளைவிக்கும் விகட ஞானக்-கும்மி’ (1915), ‘திருச்சினாப்பள்ளி ஜில்லாவிற்கு ஆதியில் பெயர் தந்த திருச்சி பெயர்க்காரண கும்மி’ (1932) என புதுமையான முறையில் பிரதிகளில் இடம் பெற்றதைக் காணமுடிகிறது.
கும்மி குறித்த பிரதிகள் முதலில் அரங்கேற்றம் செய்யப்-பட்டு பின்னர் அச்சு வடிவில் உருப்பெற்றன. இதனைப் பின்வருமாறு அறியலாம்.
“1911வது வருடம் 12ம் 11உ சிறுமுகை-யினடைப் பெற்ற நம்மைந்தாவது ஜார்ஜு மன்னர் பட்டமகிரிஷி கொண்டாட்டத்தன்று வாழ்த்தும் பிரசுரமும் வாசித்த பின்னறிந்த நீலகிரி ரங்கநாதரி ராமாயணக் கும்மியை அரங்கேற்றிப் பாடுவித்தோராலும் அக் கிராம வி.மே. அதிகாரியாலும் பரிசு கொடுக்கப் பெற்று கைசாத்து மிடப் பெற்று’’
– (ரங்கநாத இராமாயண ஒயிற்கும்மி, 1912, – முகவுரை)
என்ற கூற்றின் மூலம் 1911ஆம் ஆண்டில் பரிசு பெற்ற பிரதி 1912இல் அச்சானதாக அறிய முடிகிறது.
பெரும்பாலான கும்மிப் பிரதிகள் பொரு-ளுதவி பெற்ற பின்னர் அச்சு வடிவில் பதிப்பிக்கப்பட்டன. இவ்வகையில் “பொட்டம்-பட்டி கிராமம் ஸ்ரீமான் எஸ்.ஏ. பெரிய ஐயா செட்டியார், மேற்படி கிராம முன்சீபு       எம்.ஏ. சின்னையா செட்டியார், மேற்படி கிராமம் கர்ணம் வி. இராமசாமி பிள்ளை, மேற்படியூர் எ.ஸாம். சொக்கலிங்க செட்டியார், மேற்படியூர் எஸ். ஆதினம் பழகிய செட்டியார், மேற்படியூர் வி. வைத்தியலிங்க செட்டியார், மேற்படியூர் வி. பழனி மாருக்கோன் இவர்களது பொரு-ளுபகாரங்கொண்டு’’
-(புவனேந்திரன் கும்மி, 1912,- முகப்புப் பக்கம்)
புவனேந்திரன் கும்மி என்னும் பிரதி பதிப்பிக்கப்பட்டது. இதேபோன்று இராமாயண சந்தக் கும்மி (1955), சந்தக்கும்மி (1914), ரங்கநாத ராமாயண ஒயில்கும்மி (1912) ஆகியன பதிப்பிக்கப்பட்டன.
அச்சிடும்போது கும்மி என்ற வடிவத்துடன் பிற வடிவங்களையும் சேர்த்தே அச்சிட்டனர். “சிதம்பர பாரதியவர்களியற்றிய பல சந்தக்கும்மி-யும், சிதம்பர பாரதி புத்திரர் சுப்பிரமணிய பாரதியியற்றிய தங்கச் சிந்தும். வேம்பத்தூர் சங்க வித்வான்களிலொருவராகிய பெரியசாமி ஐயர் புத்திரர் முத்து வேங்கடசுப்பையரவர்கள் இயற்றிய ஜெயசிங்க பதிகமும்’’ (பல சந்தகும்மி 1880-முகவுரை)
என்ற கூற்றின் மூலம் பிறநூல்கள் குறித்த கருத்துகளைத் தெரிவு செய்யும் நோக்கில் அச்சிட்டிருப்பதாக அறிய முடிகிறது. இதனை ஒரு சில பிரதிகளில் மட்டுமே காணமுடிகிறது.
கும்மி குறித்த அச்சுப் பிரதிகளில் சில குறைந்த அளவு பக்கங்களில் நிறைவான செய்தி-களையும், அதிக அளவு பக்கங்களைக் கொண்டு விரிவான செய்திகளையும் வழங்கியதைக் காண முடிகிறது. குறைந்த அளவு பக்கங்களை உடைய பிரதிகளாக வியப்பை விளைவிக்கும் விகட ஞானக் கும்மி (8 பக்கங்கள்), திருநாகூர் கும்மி (16 பக்கங்கள்), கோபாலகிருஷ்ணகும்மி (22 பக்கங்கள்) ஆகியவற்றினைக் குறிப்பிட முடியும். இதேபோல் “ஸ்ரீபுர வர்ணனையென்னும் இந்-நூலானது ஸ்ரீலலிதா தேவியின் வாஸஸ்தான-மாகிய ஸ்ரீநகரத்தையும் அதற்குள் அமைந்துள்ள இருபத்தைந்து கோட்டைகளுக்கிடையேயுள்ள பிரதேச லக்ஷணங்களையும் அதைக் காவல்புரியும் தேவதா ஸ்வரூபங்களையும் ஸ்ரீபுரத்தின் மத்தியி-லுள்ள சிந்தாமணி கிருகத்தின் அமைப்பையும் அதன் உட்புறத் தேவிகளும் பரிவாரசக்திகளின் ரூபலாவண்யங்களையும் ஸ்ரீசக்ர மத்தியிலுள்ள பிந்து பீடத்தில் ஸ்வயம் பிரகாசமாய் ஒளிரும் நிருபாதி காமேஸ்வர ஸ்வரூபத்தையும் அவரது இடது சுங்கத்தில் அமர்ந்திலகும் ஸ்ரீகாமேச்வரி-யாகும் லலிதா மஹா திரிபுரஸ§ந்தரியின் ஸ்தூல ஸ¨க்ஷ்ம பரஸ்வரூபங்களையும் நன்கு விமர்ச்சிக்கின்றது. 1000க்கு மேற்பட்ட கும்மிப் பாடல்களால் இந்நூல் அமைந்துள்ளது.’’
(பராசக்தி கும்மிப்பாட்டு 1948 -முகவுரை)
என்ற கூற்றின் மூலம் விரிவான செய்திகளை 137 பக்கங்களில் கூறி அச்சிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
பிரதி எழுதிய ஆசிரியர்கள் குறித்த கருத்தாக்-கங்களைப் புகழுரையாக சிறப்புக்கவிகள், சாற்றுக்கவிகள் என்ற பெயரில் அச்சிட்டிருப்-பதைக் காணமுடிகிறது. “திருவாவடுதுறையாதீன கர்த்தராகிய பிரம்மஸ்ரீசுப்பிரமணிய தேசிகரவர்-களின் மாணாக்கரும் சிவகெங்கை சமஸ்தான ராஜகுருபீட கர்த்தருமாகிய பிரம்மஸ்ரீ தேவ சிகாமணி; காரைக்குடி ராம.சொ. சொக்கலிங்க செட்டியாரவர்கள் மாணாக்கருளருவராகிய சொ. வேலுச்சாமி கவிராயர்’’ ஆகியோர் சந்தக்கும்மி எழுதிய இராமநாதபுரம் சிவகெங்கை உபயசமஸ்தான வித்வானும் வன்றொண்ட-ரவர்கள் மாணாக்கருமாகிய வேம்பத்தூர் சிலேடைப்புலி ஸ்ரீமத் பிச்சுவய்யரவர்கள் குமாரர் மஹாதேவய்யர் மீது சாற்றுக்கவிகளைப் பாடியுள்ளனர்.
வழிபாடுகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளு-மாகிய பண்பாட்டுச் சூழல்களே கும்மி நிகழ்த்துவதற்குரிய களத்தினை உருவாக்கியதாக அறிய முடிகிறது. இவ்வகையில் கும்மி குறித்த வடிவங்கள் பல்வேறு பாடுபொருளைக் கொண்டு அமைந்துள்ளன. அவை:
– _    வழிபாட்டின் ஓர் அங்கமாகக் கலைகள் நிகழ்த்தப்படுவதால் இறை உணர்வைத் தூண்டும் இதிகாச புராணக் கதைகளைப் பாடும் நோக்கில் உருப்பெற்ற கும்மிப்-பாடல்கள்.
– _    நாட்டின் சீர்திருத்த முன்னேற்றத்திற்காக உருப்பெற்ற கும்மிப்பாடல்கள்
 _    மாந்தர்கள், தலைவர்கள் தொடர்பான கதைகளே சமூகக் கதைகளாக உருப்பெறு-கின்றன. இவ்வகையில் குறிப்பிட்ட தனிநபரின் சிறப்பினை உணர்த்தும் வகையில் உருப்பெற்ற கும்மிப் பாடல்கள்.
_-    ஊர் மற்றும் நகரின் பெருமைகளை எடுத்துக் கூறும் போக்கில் உருப்பெற்ற கும்மிப் பாடல்கள்.
வழிபாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்-தும் வகையில் இறைவனைப் போற்றும் துதிக-ளாகவே கும்மிப்பாடல்கள் தோன்றியதைக் காணமுடிகிறது. இதனைப் பின்வருமாறு அறியலாம்.
“கற்பகவல்லி சொல்லுவாள் நெல்லை
அம்பிகை காந்திமதி வடிவாள்
இப்பொழுது செய்தருளுகின்றாள் நாடுமான்றாக
இணங்கிக் கும்மியடிப்பமென்றாள் – தலை
வணங்கிக் கும்மியடிப்பமென்றாள்.’’
(காந்திமதியம்மை கும்மி, 1883-, ப.3)
நாட்டைச் சீர்திருத்தும் வகைகளில், நாட்-டின் நிலைமையைப் பின்வரும் கும்மிப்பாடல்கள் தெரிவிப்பதைக் காண முடிகிறது.
“சாத்திரஞ் சொல்வதை நம்பாதே_ஒரு
சாமியிருப்பதை நம்பாதே
ஆத்திரம் ஒன்று இருந்தாக் காலது
ஆனந்தம் முண்டாகும் ஆடவனே’’
(வியப்பை விளைவிக்கும் விகட ஞானக்கும்மி, 1915, -ப.1)
“சந்தமடியிந்த மேலாறுகண்ட
ஆரறிவாரடி ஞானவழி
சிந்தை தெளிந்த பெரியோரைக்கண்டு
சேவித்துக் கும்மியடியுங்கடி
சித்தர் சொற்படி சித்தாந்தங்கண்டு
தெளிந்து கொள்ளடி வேதாந்தம்
தத்துவமாகிய வுற்பத்தி சூக்கும்
சார்பு கேளடி ஞானப்பெண்ணே’’
(ஞானக்கும்மி, 1920, -ப.20)
என்ற கூற்றுகள் மூலம் அனைவருக்கும் பொதுவான நியாயங்களையும் மூடநம்பிக்கை-யினை எதிர்க்கும் வகையிலும் கும்மிப்பாடல்கள் உருப்பெற்றதைக் காண முடிகிறது.
குறிப்பிட்ட பகுதியின் பெருமையினை எடுத்துக் கூறும் போக்கில் கும்மிப்பாடல்கள் உருப்பெற்றன.
“திரிசிரன் என்னும் றாக்ஷஸன் இந்த
ஜில்லாவை ஆதியில் ஆண்டதினால்
திரிசிர புரமென்னும் பெயரை வைத்து முன்னோர்
திருச்சிராப்பள்ளி என்னுரைத்தாய்’’
(திருச்சி பெயர்க்காரண கும்மி, 1932, ப.3)
என்ற கூற்றின் மூலம் திருச்சி என்ற பெயர் வந்ததன் காரணத்தைக் கும்மிப்பாடல் வடிவில் உணர்த்தியதைக் காண முடிகிறது.
கும்மிப் பாடல்களின் தொடக்கமானது இறைத்துதியை முதன்மையாகக் கூறி, பின்னர் செய்திகளை வழங்கியதைக் காணமுடிகிறது. கட்டங்கள் என்ற பெயரில் உரிய மெட்டுக்-களுடன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி-யதைக் காண முடிகிறது. கோபிகா வஸ்திரா-பரணக்கும்மி (1911) 33 கட்டங்களாக நிகழ்வு-களைக் கூறிச் செல்வதைக் காண முடிகிறது.
“சாடையறிந்து வனம்போனார் கந்தன்பேடை மயில்
வள்ளியர்களுடனே, தருணம்மிது தானென்றுமே
கருணையகந்தே கூடினர் சல்லாபமாக இருந்தான்’’
(முருகர் ஒயிற்கும்மிப் பாட்டு, 1873,-ப.24)
என்ற கூற்றின் மூலம் கும்மிப்பாடல்கள் தொடக்க காலங்களில் செய்திகளை உரைநடை-யில் கூறி காலப்போக்கில் பாக்கள் வடிவில் மாற்றிக் கொண்டதைக் காண முடிகிறது. பிறமொழி கலப்பினைக் கும்மிப்பாடல்களில் காண முடிகிறது.
“ரோ கண்ணாயெந்து ஒந்துசுத்து ஹன்ன ஹீடாயிது
ஹன்ன நம்மலெய்ல்லி ஹாகு நஞ்சப்பண்ணா     சன்னாங்க
ருதாதே ஹன்னப்பெந்து இன்னிஷ்டு நளிகேஹாகு
    திம்போஷ்டு
கொம்பண்ணி ஹேளிதி வரல்ல கூதுகொள்ளி
எரடோ பந்திஹாகி யெல்லடு யெத்தரு ஹிறாளு
நித்தே
மாடிபெளுகுஹாகி இஷ்டாரெல்லா நித்தே
பெட்டேபுட்டு
பெளுகாமுந்தே ஹேளண்ணா சிந்துனா கேளுபேகு’’
(ரங்கநாத ராமாயண ஒயிற்கும்மி 1920-பக்.16)
மேற்கண்ட கூற்றின் மூலம் கன்னட மொழி கலப்பில் ரங்கநாதரின் சிறப்பினைக் கும்மி வடிவில் கூறியதைக் காண முடிகிறது.
கும்மிப்பாடல்களை உருவாக்குவதில் பெண் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுந்தரம்மாள் எழுதிய பிரகலாத சரித்திரக் கும்மி (1910), ரங்கநாயகி அம்மாள் எழுதிய கோபிகா வஸ்திராபரணக்கும்மி (1911), பவானி அம்மாள் எழுதிய ஸீதாதேவி அக்னிப்பிரவேசக் கும்மி (1915), லக்ஷ்மி அம்மாள் எழுதிய வரமங்கை நாச்சியார் கலியாண வைபவ சோபனக்கும்மி (1921), வி.ஆர். லக்ஷ்மி அம்மாள் எழுதிய பராசக்தியின் ஸ்ரீபுரசக்கர வர்ணனை என்னும் கும்மிப்பாட்டு (1948) ஆகியவை குறிப்பிடத்-தக்கவை. இவர்கள் பெரும்பாலும் வழிபாடு மற்றும் புராணம் சார்ந்த கும்மிப்பாடல்களைத் தேர்வு செய்து எழுதியதைக் காண முடிகிறது. பெண் சார்ந்த படைப்புகளை மையமிட்டே எழுதியதைக் காண முடிகிறது.
அச்சு வடிவில் உருப்பெற்ற கும்மிப்பாடல்-களின் பயன் குறித்துப் பின்வருமாறு அறிய முடிகிறது.
“திருமால் அவதாரங்களுள் சிறந்தது நரஸிம்ஹம் பக்தனைப் பரிபாலிக்கும் விரதமே பூண்டுற்பவித்த விஷ்ணுவின் பூர்ண அம்சம். பிரளயகால ருத்ரகோடி போல் விளங்கிய அவரது கோப வடிவைக் காண முடியாது சதுர்முகனாதியோரும் அச்சமெய்தினர். லக்ஷ்மியும் நெருங்க இயலாது போயிற்று. தன் நாயகனைச் சார்ந்த வடிவாய்க் காணவேண்டி அம்மகாலக்ஷ்மி கடிகாசலத்துள்ள லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆயிரவிதழ்க் கமலத்தில் கன்னியாய் அவதரித்து அருந்தவம் புரிந்தாள். திருமகளின் பிரிவாற்றாத நரகேசரி கருடாரூடராய் ஜம்பூத்வீப-மெல்லாம் தேடி முடிவில் முற்கூறிய விடத்தில் கண்டுகளித்துக் கடிமணம் புரிந்தார். இச்சரிதை ‘கடிகாசல மகாத்மியம்’ பதினேழாம் அத்தியாயத்-தில் காணலாம். இந்தத் திருமண வைபவத்தைத் தினமும் வாசிப்பதாலும் கேட்பதாலும் சர்வமங்கலங்களும் உண்டாகுமென்று ஸ்ரீ நரசிம்மனே இந்திரனிடம் சொல்லியிருக்கிறார்.’’
 (கடிகாசல நரசிம்மர் கலியாணக் கும்மி, 1935, – முகவுரை)
என்ற கூற்றின் மூலம் வாசிப்பு சார்ந்த நிலையில் கும்மிப் பாடல்கள் மிகுந்த பயன் விளைவிப்பதைக் காண முடிகிறது.
அச்சான கும்மிப் பிரதிகள் வாயிலாகக் கீழ்க்கண்டவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது.
_- இலக்கியங்களில் கூறப்பட்ட கொம்மை அச்சுப் பிரதிகளில் கொம்மியாகத் திரிந்தமை.
_- -பெண்களுக்கு உரிய வடிவமாகக் கும்மிப் பிரதிகள் உருப்பெற்றமை.
_- -வழிபடுவதற்கான கும்மிப் பாடல்கள் அதிக அளவில் அச்சிடப்பட்டமை.
-_- ஊர் சார்ந்த பெயர்க் காரணம் தெரிவு செய்யும் வகையில் புதுமையை உணர்த்தும் விதமாகக் கும்மிப்பாடல்கள் அச்சிடப்பட்டமை.
_- மூடநம்பிக்கையை எதிர்க்கும் விதமாகக் கும்மிப்பாடல்கள் அச்சிடப்பட்டமை.
-_- பெண் ஆசிரியர்கள் அதிக அளவில் பிரதிகளை எழுதியமை
ஆகியவற்றினை அறிந்துகொள்ள முடிகிறது.
அச்சு வடிவில் கிடைப்பவை
1.    திருவாசகக்கும்மி, கிறிஸ்துவுக்குப் பழைய ஏற்பாட்டின் காலத்திலிருந்த முன்னடை-யாளங்களும் அவர் செய்த அற்புதங்களும் அவர் திருவாய் மலர்ந்தருளிய உவமை-களும் அடங்கியிருக்கின்றன. – தரங்கம்பாடி, 1869, பக்.48.
2.    முருகர் ஒயிற்கொம்மிப்பாட்டு, ஆசிரியர் வேங்கடாசல பண்டிதர், திருவண்ணா-மலை அருணாசல ஐயர் _ – பரிசோதித்-தவர். மானேந்தியப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. 1873, பக்.24.
3.    சிவசுப்ரமணியர் மணம்புரிந்த வள்ளி-யம்மன் கும்மி, _- பார்வையிட்டவர் இல்லை, முத்துச்செட்டியாரால் பதிப்பிக்கப்பட்டது, 1876, பக்.48.
4.    சிவகங்கை சமஸ்தானம் காரைக்குடியி-லிருக்கும் முத்து வீரப்பாசாரியவர்கள் குமாரர் முத்து கருப்பாசாரியவர்கள் பேரில் புவனே வீரபாண்டிய பரமாகிய மழவாபுரி சுப்ரமண்ய தீக்ஷிதர் புத்திரர் சிதம்பர பாரதியவர்களியற்றிய பல சந்தக்கும்மியும், சிதம்பர பாரதி புத்திரர் சுப்பிரமணி பாரதியியற்றிய தங்கச்சிந்தும் வேம்பத்தூர் சங்க வித்வான்களிலொருவ-ராகிய பெரியசாமி புத்திரர் முத்து வேங்கட சுப்பையரவர்கள் இயற்றிய ஜெயசிங்க பதிகமும்.
5.    கோட்டை பட்டணத்திலடங்கிய கலுறத்துக் காமிலொலி இராவுத்த சாகிபவர்கள் குமாரராகிய பாசிம்-பட்டணத்தில் மறைந்திராநின்ற காரண மகத்துவமாகிய காமிலொலி நயினா முகம்மது சாகிபு அவர்கள் பேரில் ஒலிநகரமாகிய இராமநாதபுரம் சமஸ்தான வித்வான் ஜம்பையூர் சர்க்கரை கவிராயர் குமாரர் முத்துசாமி கவிராயர் பாடியது, பரிசோதித்தவர்-_ பாசி. பட்டணம் நயினார் முகம்மது புலவர், ப.வெ. முகம்-மது சாகிபு முயற்சியால் மருதண ராவுத்-தரால் பதிப்பிக்கப்பட்டது, 1878, பக்.18.
6.    காந்திமதியம்மை பேரில் கும்மிப்பாடலும் கீர்த்தனைகளும், ஆசிரியர் அழகிய சொக்கநாதப்பிள்ளை, சி.ஏ. இலட்சுமணப் பெருமாள் விருப்பத்தின்படி பதிப்பிக்கப்-பட்டது, 1883, விலை அணா.க, பக்.18.
7.    திருமணிக்கும்மி, திரவிய நாடார், 1899, பக்.8.
8.    கோபால கிருஷ்ணகும்மி, -, 1910, பக்.22.
9.    பிரகலாத சரித்திரக் கும்மி, சுந்தரம்மாள் விருப்பத்தின்படி பதிப்பிக்கப்பட்டது, 1910, பக்.16.
10.    கோபிகா வஸ்திராபரணக் கும்மி, ரங்கநாயகி அம்மாள், 1911.
11.    திருநாகூர் காரணச்சிந்து வண்ணச்சந்தக் கும்மி, ஆசிரியர் அம்பல மஸ்தான், இவரே பதிப்பித்தார், 1949, பக்.16.
12.    ஸீதாதேவி அக்கினிப் பிரவேசக் கும்மி, பவானி அம்மாள், விலை அணா -1 பைசா 6, பக்.16.
13.    நீலகிரிகண் எழுந்தருளிய ஸ்ரீரங்கநாதர் மீது இராமாயண ஒயிற்கும்மி, ஆசிரியர்- ப. துரைசாமி முதலியார், பார்வை-யிட்டவர் கோயம்புத்தூர் பெரியோர்கள், வெ. நஞ்சப்ப கவுடரவர்களால் பதிப்பிக்-கப்பட்டது, 1920, பக்.20.
14.    வரமங்கை நாச்சியார் கலியாண வைபவ சோபனக் கும்மி, லக்ஷ்மி அம்மாள், பரிசோதித்தவர்கள் -வானமாமலை பத்மனாப பண்டிதர் மற்றும் ஆழ்வார் திருநகரி ஜோஜ்பாய் வெங்கு அய்யங்கார், வானமாமலை மங்கை திருவோட அம்மா-ளுடைய அனுமதியினால் பதிப்பிக்கப்-பட்டது, 1921, பக்.31.
15.    முத்து வேலாயுதம் சுவாமி கருப்பராய சுவாமி பேரில் பாடிய உற்சவ மகத்துவக் கும்மி, -, 1927, பக்.20.
16.    அமிர்தவல்லி பரிணயம் என்னும் கடிகாசல நரசிம்மர் கலியாணக்கும்மி, றி. ஹனுமந்தராவ், றி.க்ஷி. ஸ்ரீனிவாசய்யங்கார், அவர்களால் பதிப்பிக்கப்பட்டது, 1935.
17.    பராசக்தியின் ஸ்ரீபுரசக்கரவர்ணனை என்னும் கும்மிப்பாட்டு, வி.ஆர். லக்ஷ்மி அம்மாள், 1948, பக்.137.
18.    இராமாயண சந்தக்கும்மி, ஆசிரியர் சுப்ரமண்ய பாவலர், 1955, பக்.36.
19.    ஆரிய தேசாபிமானக் கும்மி, -, 1893, பக்.20.
20.    வியப்பை விளைவிக்கும் விகட ஞானக் கும்மி, -, 1915, பக்.8.
21.    ஞானக்கும்மி, பு. முனிசாமி நாயுடு, 1916, பக்.24.
22.    நீதிநெறி கும்மி, சி.ப. திரவிய நாடார், 1950, பக்.72.
23.    இராமஸ்வாமி ஐயர் குமாரராகிய இராமசுப்பையா பேரில் சந்தக்கும்மி, குமாரசாமி உபாத்தியாயர், சி.எஸ். நாராயணசாமி ஐயர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது, 1910, பக்.21.
24.    புவனேந்திரன் கும்மி, சங்கரலிங்கம் பிள்ளை, 1912, பக்.70.
25.    சந்தக் கும்மி, மஹாதேவய்யர், 1914.
26.    கட்டபொம்மன் கும்மிப்பாடல், வி. மாணிக்கத்தாரால் பதிப்பிக்கப்பட்டது, 1983, பக்.34.
27.    திருநாங்கூர் வழிநடை ஒயிற்கும்மி, சி.எஸ். குப்புசாமி பிள்ளை, 1910.
28.    குளகையயிற்கும்மி, வயித்தியநாத சர்மா, 1912, பக்.16.
29.    திருச்சினாப்பள்ளி ஜில்லாவிற்கு ஆதியில் பெயர்வந்த திருச்சி பெயர்க்காரணக்கும்மி, ஸி. அண்ணாசாமி பாளையக்காரர், 1932, பக்.3.

Share.

About Author

Leave A Reply