தமிழ் வாசிப்பு வீரசோழியம்

0
 கா. அய்யப்பன்

தொல்காப்பியம் தொடங்கிய தமிழ் இலக்கண
மரபு தொடர்ச்சியான வரலாற்றினைக் கொண்டுள்ளது.
அதனூடாக 30க்கும் மேற்பட்ட இலக்கண நூல்கள்இன்று
நமக்குக் கிடைக்கின்றன. இப்படியான இலக்கண
நூல்களின் உருவாக்கம் என்பது மொழி மாற்றத்தினூடாக
புரிந்து கொள்ளத்தக்கது. மணிமேகலை, குண்டலகேசி
என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பௌத்த சமயக்
கொடையில் மிக முக்கியமான இலக்கண நூலாக
இருப்பது வீரசோழியம். தமிழ்ச்சூழலில் இந்நூலின்
உருவாக்கமும் அது இன்றுவரை நிலை பெற்றிருப்பதும்
மிக முக்கியமான நிகழ்வாகும். தொல்காப்பியத்திற்குப் பிறகு
பல நூற்றாண்டுகளைக் கடந்து தமிழ் மொழியின் மாற்ற
த்தினூடே செய்யப்பட்ட ஒரே பிரதியும் வீரசோழியமே.
சோழர்கள்ஆட்சியில் குறிப்பாக வீரராசேந்திரன்
ஆண்ட 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தமித்திரனாரால்
செய்யப்பட்ட இலக்கணப் பிரதி வீரசோழியம். அது தம்
காலத்துக்கு முந்தைய இலக்கண மரபினையும், தம் காலத்திய
வடமொழிச் செல்வாக்கினையும் உட்கொண்டு
எழுந்திருக்கிறது.
வீரசோழியத்திற்குப் பிறகு தமிழ் இலக்கண மரபில்
குறிப்பிடத்தக்கதொரு இலக்கணப் பிரதி உருவாகவில்லை
எனலாம். ‘நன்னூல்’ எனும் நூலினைக் குறிப்பிட்டுச்
சொன்னாலும்; அது தமிழ் மொழியின் அமைப்பு மாற்ற
முறைக்கு எதிராக தொல்காப்பியத்திற்கு நேராக உருவான
ஒரு நூலாக மட்டுமே கொள்ள முடியும். நச்சினார்க்கினியர்,
பேராசிரியர், இலக்கணக்கொத்து நூலார். பிரயோக விவேக
நூலார் முதலானோர் வீரசோழிய மரபினை உட்கொண்டு
செயல்பட்டிருப்பினும்; தாம் கொள்வதில் இது இது
வீரசோழிய மரபு என வெளிப்படையாகக் கூறினாரில்லை.
இப்படியானதொரு சூழலுக்குக் காரணம் அது ஒரு
பௌத்தப் பிரதி என்பதே.
நம்முடையது ‘ஐந்திலக்கண மரபு’ என்று வாய்க்கூசாமல்
சொல்லும் நம்மவர்கள்அப்படியான மரபுக்கு ஆதாரமாக
அமைந்த வீரசோழியத்தை நினைப்பதில்லை. தமிழில்
ஐந்திலக்கண முறையில் அமைந்து நமக்குக் கிடைக்கும்
முதல் நூல் வீரசோழியம். தமிழ்ச்சூழலில் சிலர் குறிப்பாக
சி.வை.தா., மு.அருணாசலம் முதலானோர் வீரசோழிய
நூலும் அதற்கமைந்த உரையும் பௌத்த சமயத்தவரால்
செய்யப்பட்டது என்பதையே ஏற்க மறுக்கின்றனர். மாறாக
சமணர் என்றும், சைவம் என்றும் வலியுறுத்துகின்றனர்.
எழுத்ததிகாரம்_ சந்திப்படலம் _28, சொல்லதிகாரம் _
வேற்றுமைப்படலம், தொகைப்படலம், தத்திதப்படலம்,
தாதுப்படலம், கிரியாபதப்படலம் _ 57,
பொருளதிகாரம்_பொருட்படலம் 21, யாப்பதிகாரம்_
யாப்புப்படலம்36, அலங்காரம் _அலங்காரப்படலம் 39 என
முறையே ஐந்து அதிகாரங்களையும், பத்துப்படலங்களையும்,
181 காரிகைகளையும் கொண்டுள்ளது வீரசோழியம்.
‘அவலோகிதன்’ எனும் பௌத்தத் துறவியிடம் அகத்தியன்
தமிழ்க் கற்றான் என்கிற தமிழின் பூர்வீகத்தைக்
கட்டுடைக்கும் பாயிரத்தினையும் கொண்டிருப்பது அதன்
தனித்தன்மைகளுள்ஒன்று. வீரசோழியத்திற்குப்
புத்தமித்திரனாரின் சமகாலத்தில் வாழ்ந்த அவரது மாணவர்
பெருந்தேவனாரால் உரை செய்யப்பட்டிருக்கிறது. அவரது
பொழிப்புரையைத் தாண்டி இன்று வரை எந்த உரையும்
எழுதப்படவில்லை.
வீரசோழிய நூல் மற்றும் உரையாசிரியரின் சமயம்
பௌத்தம் என்பதற்கு அவர்களின் பெயர் மட்டும் அல்லாது,
நூலுள்ளும் பல கருத்துகள்விரவிக் கிடக்கின்றன.
பெருந்தேவனார் உரையுடன் 1881, 1895களில்
சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களாலும், 1942, 1970களில்
க.ரா.கோவிந்தராச முதலியாராலும், 2005 இல்
தி.வே.கோபாலையராலும் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.
மூலம் மட்டும் 1886இல் அ.இராமசுவாமி அவர்களால்
பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய
அளவே பதிப்பு கண்ட வீரசோழியத்திற்கு இது சிறந்த
பதிப்பு என்று சொல்லக்கூடிய நிலையில் ஒன்றும் இல்லை.
தொல்காப்பியம்; ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அளவில்,
நூறில் ஒருபங்கு கூட வீரசோழியத்திற்கு இல்லை.
வீரசோழியம் என்கிற இலக்கணப்பிரதி பௌத்தக்-கொடையா
க மட்டும் இல்லாது இலக்கண உருவாக்கத்தின்
தேவையை வெளிப்படையாகச் சுட்டும் பிரதியாகவும்
அமைந்துள்ளது. பௌத்தம் தொடர்பான விவாதங்களை
முன்னெடுக்கும் இன்றையச்சூழலில், அறிவுத் தளத்தில்
இயக்கம் கொண்ட புத்தமித்திரனார், பெருந்தேவனார்
ஆகியோர்களின் செயல்பாட்டினையும் உட்கொண்டு
விவாதிக்கும் தேவை நமக்கிருக்கிறது.

Share.

About Author

Leave A Reply