கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள்

0
அமுதன் அடிகள்

பதினாறாம் நூற்றாண்டில் கிறித்தவம் தமிழகத்தில் காலெடுத்து வைத்தது. கிறித்தவ சமயப் பணிக்காகத் தமிழகம் வந்த கிறித்தவத் துறவிகள் காலத்தின் தேவை கருதிப் பல துறைசார்ந்த தமிழ் நூல்களைப் படைத்தனர்.
அவற்றுள் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட நூல்கள் பற்றி விளக்கும் கட்டுரையாக இது அமைகிறது.
கிறித்தவரின் மொழிபெயர்ப்புப் பணிகள்
16-ஆம் நூற்றாண்டு முதல் கிறித்தவ அறிஞர்கள் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஐரோப்பிய மொழி-களிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்கும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளே இவை.
தொடக்கக் காலத்தில் கிறித்தவ மன்றாட்டு-களே மொழிபெயர்க்கப்பட்டன. ‘ஒரு கிறித்தவன் தன் மீட்புக்காக அறிய வேண்டிய அனைத்-தையும் சுருக்கமாக வழங்கும் சிற்றேடு’ என்னும் நீண்ட பெயரைக் கொண்டு கார்த்தில்யா என வழங்கப்படும் 38 பக்கங்களைக் கொண்ட ஒரு நூல் போர்த்துக்கல் நாட்டு நூலகத்தில் உள்ளது. இது தான் முதன்முதலில் அச்சேறிய தமிழ் நூல். ஆனால், இது தமிழ் எழுத்துகளைக் கொண்டு அச்சிடப்படாமல் தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய எழுத்துகளில் பெயர்த்தெழுதப்-பட்ட நூலாகும்.
அண்டிறீக்கி பாதிரியார் மொழிபெயர்த்த 16 பக்கங்களைக்  கொண்ட தம்பிரான் வணக்கம் என்னும் மன்றாட்டு நூல் 1578-ஆம் ஆண்டு கேரளத்திலுள்ள கொல்லம் நகரில் அச்சிடப்-பட்டது. இந்தியாவில் அச்சேறிய முதல் தமிழ் நூலாக நமக்குக் கிடைப்பது இதுதான். கத்தோ-லிக்கக் கிறித்தவர்கள் தங்கள் வழிபாட்டின்-போது  பயன்படுத்தும் மந்திரங்களும் பிரார்த்-தனைகளும் கத்தோலிக்க சமயப் போதனைகளின் சுருக்கமும் இந்நூலில் காணக் கிடக்கின்றன. அடுத்து கிரிசித்தியானி வணக்கம் என்னும் பெயரில் 122 பக்கங்கள் கொண்ட நூலை கொச்சியில் 1579-ஆம் ஆண்டில் அச்சிட்டார். கிறித்தவப் போதனைகளை வினா-விடை முறையில் தொகுத்துக் கூறும் மொழிபெயர்ப்பு இது.
இவ்விரண்டு நூல்களும் “வணக்கம்’’ என்னும் பெயரில் திருச்சிராப்பள்ளி தமிழ் இலக்கியக் கழகத்தால் மறுபதிப்பு செய்யப்-பட்டன.
கொம்பேசியோனாயரு என்னும் ஒப்புரவு அருட்சாதன நூலும் அண்டிறீக்கி பாதிரியாரால் மொழி பெயர்க்கப்பட்டு 1580-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது இதன் பிரதி இலண்டன் நூலகத்தில் உள்ளது.
1586-ஆம் ஆண்டு தூத்துக்குடியை அடுத்த புன்னைக்காயலில் அச்சிடப்பட்ட அடியார் வரலாறு என்னும் நூல் 666 பக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய நூல். பல்வேறு புனிதர்-களின் வரலாறும் கிறித்தவப் பெருவிழாக்கள் பற்றிய அறிவுரைகளும் அடங்கிய இந்நூலை அண்டிறீக்கிப் பாதிரியாரே மொழிபெயர்த்தார்.
16-ஆம்  நூற்றாண்டில் தமிழகத்தில் கிறித்தவம் பரவத் தொடங்கிய காலத்தில் இந்-நூல்களை மொழிபெயர்த்திடல் அத்துணை எளிதாக இருந்திருக்காது. ஐரோப்-பியாவில் கற்ற கிறித்தவ சமயப் போதனைகளைத் தாம் புதிதாகக் பயின்ற தமிழில் எடுத்துரைக்கத் தேவையான கலைச்சொற்கள் இல்லாமல் பல போர்த்துகீசியச் சொற்களையே தமிழ் ஒலிக்கு ஏற்றவாறு அவர் மாற்றியமைத்திருப்பதை நாம் காணலாம்.
18,19-ஆம் நூற்றாண்டுகளில் பல தமிழ் நூல்கள் ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் பெயர்க்கப்பட்டன. அவற்றுள் திருக்குறள் சிறப்பிடம் பெறுகிறது.
வீரமாமுனிவர்
திருவள்ளுவரின் திருக்குறள் வெளிநாட்ட-வரின் கவனத்தை ஈர்த்தது. அவர்களுக்கு அது கவர்ச்சியுள்ளதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்தது. தமிழர்களின் பெருமையையும், தனிச்-சிறப்பு வாய்ந்த மொழியையும் பண்பாட்டையும் தம் திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்பால் ஐரோப்பிய நாடுகளுக்கு முதன் முதலில் வெளிப்படுத்திய பெருமைக்குரியவர் வீரமாமுனிவர் ஆவார்.
எல்லீஸ்
எல்லீஸ் குறள் நூல் முழுவதையும் மொழிபெயர்த்து விளக்கவுரை கூறவில்லை. அவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு வரன்முறை-யின்றிக் குறள்களையும் அதிகாரங்களையும் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் அறத்துப்பாலோடு நிறுத்திக்கொண்டார். அதைக்கூட முழுவது-மாகக் செய்யவில்லை. அறத்துப்பாலுக்கு விளக்கம் கூறும்போதே எல்லீஸ் பொருட்பாலி-லிருந்தும் சில குறள்களை ஆங்காங்குச் சுட்டுகிறார். அதனால் அந்தக் குறள்களையும் அவர் மொழிபெயர்க்க வேண்டி இருந்தது.
கிரால்
ஜெர்மன் அறிஞர் டாக்டர் கிரால் என்பவரால் குறள் ஜெர்மன் மொழியிலும் இலத்தீன் மொழி-யிலும் பெயர்க்கப்பட்டது. அவருடைய தீடீர் மறைவால் டாக்டர் கிரால் குறளை முழுமையாக மொழிபெயர்க்க இயலவில்லை. டாக்டர் போப் இம்மொழிபெயர்ப்பைப் பயனுள்ள ஒன்றாகக் கருதுகிறார்.
கிராலுடைய தமிழ் நூலடங்கல் மூன்றாம் தொகுதி-யில் ஜெர்மன் மொழிபெயர்ப்பும் நான்காம் தொகுதியில் தமிழ் மூலமும் அதற்கு இலத்தீன் இலக்கணக் குறிப்புகளும் கொடுக்கப்பட்-டுள்ளன.
ஏரியல்
ஏரியல் என்ற பிரெஞ்சுக்காரர் குறளின் சில பகுதிகளை மட்டுமே பிரெஞ்சில் மொழி-பெயர்த்தார். எனினும் இதனால் குறள் பிரெஞ்சு மக்களுக்கு அறிமுகமாகியது. குறளின் பெருமை-யைக் கூறும்பொழுது ஏரியல் ‘தமிழிலக்கி-யங்களில் தலையாய நூல்’ என்றும் ‘மனித சிந்தனைகளில் உயர்ந்ததும் தூய்மையானதுமான வெளிப்பாடுகளில் ஒன்றே குறள்’ என்றும் கூறுகிறார்.
டாக்டர் ஜி.யு.போப்
(அ) திருக்குறள்
குறள் முழுவதையும் மொழிபெயர்த்த முதல் ஐரோப்பியர் டாக்டர் போப் தான். அவர் ஆங்கிலச் செய்யுள் வடிவில் குறளை மொழி-பெயர்த்துள்ளார்.
போப் தமது முன்னுரையில் குறளில் அமைந்துள்ள இலக்கணத்தை விளக்குகிறார். வள்ளுவரின் மொழித்தன்மை – இலக்கணம் பற்றி ஆராய்ந்த முதல் நூல் இதுவேயாகும். அது ஏறக்குறைய விரிவான வர்ணனை ஆய்வாகும். போப் இத்துறையில் முன்னோடி.
(ஆ) நாலடியார்
பின்னர் போப் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரது நோக்கம், தமிழர்களை மரபுவழிப்பட்ட விளக்கங்களையே தரும் சோர்வினின்று மாற்றவும், ஐரோப்பிய அறிஞர்களைத் தமிழறிஞர்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ளச் செய்யவும், உயர்ந்த தமிழ் இலக்கியத்தை ஆயும்போது ஐரோப்பிய முறைகளைப் பின்பற்றச் செய்யவுமே என்பது தெரிய வருகிறது.
குறளில் செய்திருப்பது போலவே நாலடியாரி-லும் போப் இலக்கண நடையை ஆய்வு செய்துள்ளார். இப்பாடல்களின் நடையைப் பற்றிப் பேசும்போது ஆங்கிலத்தில் உள்ள சானட் என்ற வகைப் பாடலைப் போல வெண்பாவும் இலக்கணக் கட்டுப்பாடுடைய சிறந்த அமைப்பு உடையது என்று அவர் கூறுகிறார்.
(இ) திருவாசகம்
திருவாசகத்தை போப் மொழிபெயர்த்ததன் நோக்கம் இந்து சமயத்தையும் தமிழ்மக்களையும் ஆங்கிலேயர் நன்கு புரிந்து கொள்வதற்காக-வேயாம்.
போப், நூலுக்கு நீண்டதொரு பின்னிணைப்புக் கொடுத்துள்ளார். இப்பின் இணைப்பில் சைவ சமயத்தின் முக்கியமான கொள்கைகளை விளக்கிப் பதினைந்து நீண்ட குறிப்புகள் உள்ளன.
நூலின் முடிவில் போப் ‘அகராதியும் பொருத்தங்களும்’ என்று ஓர் இயல் தந்துள்ளார். போப்பின் எல்லா நூல்களிலும் காணப்படுகின்ற இது, தமிழிலக்கியத்துக்கு ஒரு புதிய அம்ச-மாகும். இதில், சொற்களுக்கு வேர்ச்சொற்கள், தோற்றம், வளர்ச்சி போன்ற பல்வேறு பொருட்கள் தரப்பட்டுள்ளன.
தங்கள் சமய நூல்களை ஐரோப்பிய மொழி-களிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதாகத் தொடங்கிய கிறித்தவர்களின் மொழிபெயர்ப்புப் பணி, பின்னர் தமிழ் நூல்களை ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கும் பணியாக மாறி தமிழ் மொழிக்குப் பெரும்பயனை விளைவித்துள்ளது என்பதில் ஐயமில்லை. தமிழ் நாட்டு இலக்கியங்களும் சமயக் கருத்துகளும் உலகெங்கும் பரவிட இவை வழிவகுத்துள்ளன.
கிறித்தவரின் அகராதிப்பணி
தொடக்க கால அகராதிகள்
யாப்பு அமைப்பில் அல்லாமல் முதலில் தோன்றிய தமிழ் அகராதி 16-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். 1546-ஆம் ஆண்டு முதல் 1600 வரை ஆண்டிறீக்கி பாதிரியார் ஓர் அகராதியைத் தொகுத்தாக அவர்தம் மடல்கள் மூலம் அறியப்படுகிறது. எனினும் அது நமக்குக் கிடைக்கவில்லை.
அடுத்த 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இஞ்ஞாசி ப்ருனோ அடிகளார் ஓர் அகராதியைத் தொகுத்ததாக அறிகிறோம். அதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. அவரது காலத்தில் வாழ்ந்த பல்த்தசார் தகோஸ்தா அடிகளார் தொகுத்த அகராதி 1680-ஆம் ஆண்டில் கேரளத்து அம்பலக்காட்டில் அச்சிடப்பட்டது. அதுவும் நமக்குக் கிடைக்க-வில்லை.
அந்த்தாம் தே ப்ரோயன்சா அடிகளார் இயற்றி 1679-ஆம் ஆண்டில் அம்பலக்காட்டில் அச்சிடப் பெற்ற தமிழ் – போர்த்துகீசிய அகராதி 1966-ஆம் ஆண்டில் மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டின்போது தவத்திரு சேவியர் தனிநாயக அடிகளாரால் மறுபதிப்பு செய்யப்பட்டது. இது 16,546 சொற்களைக் கொண்டது. தமிழ்ச்சொற்களுக்குப் போர்த்து-கீசிய மொழிபெயர்ப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ள இவ்வகராதி, ஐரோப்பாவிலிருந்து சமயப் பணி புரிவதற்காகத் தமிழகம் வந்த கிறித்தவத் துறவிகள் பயன்பாட்டிற்காகத் தொகுக்கப்பட்டது.
இதையடுத்து, 18-ஆம் நூற்றாண்டில் பணியாற்றிய லூயி நோயல் தேபூஸ் அடிகளார் இலத்தீன் – தமிழ் அகராதி (1710), ப்ரெஞ்சு – தமிழ் அகராதி (1724), தமிழ் – இலத்தீன் அகராதி (1710), தமிழ் ப்ரெஞ்சு அகராதி என நான்கு அகராதிகளைத் தொகுத்ததாக அறிகிறோம். இலத்தீன் மொழிக்கும் வடமொழிக்கும் உள்ள தொடர்பினை முதலில் சுட்டிக் காட்டியவர் இவரே.
வீரமாமுனிவரின் அகராதிகள்
வீரமாமுனிவர் எனத் தமிழ் உலகத்தில் அறியப்படும் பெஸ்கி அடிகளார் தொகுத்த சதுரகராதியே முதல் தமிழ் அகராதி என்பது தவறான செய்தி என மேற்கூறியவற்றால் நாம் உணரலாம். எனினும் முதல் தமிழ்_தமிழ் அகராதியைத் தொகுத்து வழங்கியவர் பெஸ்கியே என்பதில் ஐயமில்லை.
தமிழ்_இலத்தீன் பேச்சு மொழி அகராதி பெஸ்கியால் (1744) தொகுக்கப்பட்டது. முதலில் தமிழ்ச் சொற்கள் தமிழ் அகர நிரல் முறையில் நிறுத்தப்பட்டு அவற்றுக்குரிய பொருள் இலத்தீன் மொழியில் கூறப்படுகின்றது. சில இடங்களில் பிரெஞ்சிலும், போர்த்துகீசியத்திலும் பொருள் விளக்கம் தரப்படுகின்றது. ஏறத்தாழ 3000 சொற்கள் இவ்வகராதியில் இடம்பெறு-கின்றன.
தமிழ் இலக்கணங்கள் கூறுகின்ற ஒலி மரபினையட்டி மொழி முதல் எழுத்துகளைக் கொண்ட சொற்கள் இடம் பெற, தமிழ்_-இலத்தீன் பேச்சு மொழி அகராதியில் இலக்கண மொழி நெறிக்கு மாறாக டகர, ரகர, லகரங்களை மொழி முதலாகக் கொண்ட சொற்களும் இடம் பெறுகின்றன.
தமிழில் வழங்கும் சொற்களையும், பொருள்களையும் விளக்குவதே சதுரகராதியின் இயல்பாய் இருக்க, அச்சொற்களைக் கொண்-டுள்ள மரபுத்தொடர்புகளையும் பழமொழி-களையும் நிரல்படுத்தி பொருள் விளக்கத் தமிழ்_இலத்தீன் பேச்சு மொழி அகராதி முற்படு-கிறது. பயன்பாட்டு முறையைத் தெளிவுபடுத்து-வதற்காக முழு வாக்கியங்களைப் பயன்படுத்தவும் முனிவர் தயங்கவில்லை. தமிழ்ப் பழமொழி-களுக்கு இணையான பிறமொழிப் பழமொழி-களும் சில இடங்களில் சுட்டப்படுகின்றன. பொருள் தெளிவிற்காகச் செய்யும் வரிகளும் அறவுரைகளும் இவ்வகராதியில் இடம் பெறுகின்றன.
முனிவரின் நூல்களுள் தமிழ்_இலத்தீன் பேச்சு மொழி அகராதியிலேயே மருத்துவக் குறிப்புகள் மிகுதியாய் அமைந்துள்ளன. நோய்களைச் சுட்டும் சொற்களுக்குப் பொருள் பெற முற்படும் அவற்றின் வகைகளையும் நோய்களைப் போக்கும் மருந்து வகைகளையும் மருந்து தயாரிக்கும் முறைகளையும் முனிவர் விளக்கிக் கூறுகின்றார்.
தமிழ்_இலத்தீன் பேச்சு மொழி அகராதி-யோடு இணைந்த பகுதியாக அமைந்திருப்பினும் முனிவரின் போர்த்துகீசிய_இலத்தீன் – தமிழ் அகராதி தனி அகராதியாகவே கருதப்படுகின்றது. ஏனெனில் இவ்வகராதிக்கென முனிவர் தனி முன்னுரையை வகுத்துத் தந்துள்ளார். இவ்வகராதியில் ஏறத்தாழ 4390 சொற்கள் இடம்பெறுகின்றன. ‘தேவையான அடிப்படைச் சொற்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்-திருப்பதால் இது அளவில் பெரிதன்று. போர்த்துகீசிய மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கும்போது அவை அனைத்தும் இங்கு கொடுக்கப்படவில்லை.. அவற்றுள் மிக அதிகமாகப் பயன்படுவதும் மிக அவசியமானதும் ஆகிய ஒன்றிரண்டே கொடுக்-கப்பட்டுள்ளன. அதேபோல போர்த்துகீசியச் சொற்களுக்கு இணையான எல்லாத் தமிழ்ச் சொற்களும் கொடுக்கப்படாமல், அவற்றுள் எவை மிக அதிகமாகப் பயன்படுகின்றனவோ அச்சொற்கள் மட்டும் கொடுக்கப்பட்-டிருக்கின்றன’ என அகராதியின் சுருக்கத்தைப் பற்றி முனிவர் தமது முன்னுரையில் விளக்கு-கின்றார்.
சதுரகராதியில் அகர நிரன் முறையில் முதலில் நிறுத்தப்படும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் ஆகும். தமிழ்_இலத்தீன் பேச்சு மொழி அகராதியிலும் முதலில் தமிழ்ச் சொற்களே அகர நிரன் முறையில் அமைக்கப்படுகின்றன. போர்த்துகீசிய_இலத்தீன்_தமிழ் அகராதியில் போர்த்துக்கீசிய சொற்கள் முதலில் அமைகின்றன.
சதுரகராதி
முனிவர் அகராதிகளுள் சதுரகராதி ஒரு மொழி அகராதி, தமிழ்_இலத்தீன் பேச்சு மொழி அகராதி இரு மொழி அகராதி, போர்த்துகீசிய _இலத்தீன்_தமிழ் அகராதி மும்மொழி அகராதியாகும்.
பெயரகராதி
சதுரகராதி பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுதிகளைக் கொண்டது. இவற்றுள் பெயரகராதியில் 12,187 சொற்கள் இடம்பெற்றுள்ளன. பெயரகராதி எனத் தலைப்பு இட்டிருப்பினும் பெயர்ச் சொற்களோடு வினை, இடை, உரிச்சொற்களும் இதில் ஒன்பது மெய்களும் முதலாக உடைய சொற்கள் மட்டுமே பெயரகராதியில் இடம் பெறுகின்றன. ஏனெனில் அவையே முதற்கண் வரத் தக்கவை என்பது முனிவரின் இலக்கணக் கொள்கை-யாகும்.
சொற்களுக்குப் பொருள் தரும்போது சொல்லுக்குரிய பொருள்களை சொல்சொல்-லாக நிறுத்திக் கூறப்படுவதே பெரும்பான்மை எனினும் சிலவற்றிற்குப் பொருள் சொல்லாக மட்டும் அமையாமல் விளக்கங்களாகவும் கூறப்படுகின்றது.
நிகண்டுகள் கூறிய பொருள்களோடு சில புதிய பொருள்களையும் முனிவர் பொருள் அகராதியில் சுட்டுகின்றார். அரி என்னும் சொல்லுக்கு திவாகரம் 23 பொருள்களும், பிங்கலம் 41 பொருள்களும், சூடாமணி 47 பொருள்களாகவும் கூறுகின்றார். அப்பொருள்-களுள் அடர்வு, சிங்கராசி, சிலம்பு, செம்மறிஆட்டுக்கடா, நெடுக்கம், மரகதம், மழைத்தூறல், கூட்டுணு ஆகியன முனிவர் காட்டும் அப்பொருண்மை தொடர்புடைய புதுச் சொற்களே.
பெயரகராதி எங்கனும் பரந்து கிடக்கின்ற வட சொற்கள் பல வடிவங்களில் உள்ளன. அவற்றுள் தற்சமச் சொற்களும், தற்பவச் சொற்களும் உண்டு.
பொருளகராதி
பெயரகராதியில் பல்வேறு இடங்களில் அகரநிரல்படி வரும் பெயர்கள், பொரு-ளகராதியில் பொருளுக்குரிய பெயர்களாகச் சேர்ந்து இடம் பெறுகின்றன. சான்றாகப் பெயரகராதியில் கும்பயோனி, குறுமுனி என்னும் பெயர்களுக்கு அகத்தியன் எனப் பொருள் தரப்படுகின்றது. முத்தமிழறியோன் என்னும் பெயருக்குரிய பொருள்களுள் ஒன்றாக அகத்தியன் கூறப்படுகிறது. இச்சொற்களே பொருள் அகராதியில்  ஒரே இடத்தில் அகத்தியன் என்னும் பொருளுக்குரிய பெயர்-களாக அகத்தியன், கும்பயோனி, குறுமுனி, முத்தமிழறியோன் எனக் குறிக்கப்படுகின்றன.
பெயரகராதியில் உள்ள அளவிற்குப் பொருளகராதியில் வட சொற்கள் மிகுதியாக இல்லை எனினும், தமிழில் வழங்கிய சொற்-களுக்கு இணையான வடசொல்லை நிறுத்தி, பொருந்தும் பெயர்களைச் கூற முனிவர் முனைந்திருக்கிறார்.
தொகை அகராதி
நிகண்டுகள் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி எனக் குறித்ததைச் சதுரகராதி தொகை அகராதி பெயரால் சுட்டுகின்றது. நிகண்டுகள் விளக்கிய தொகை, பொருள் எண்ணிக்கையிலும் மிகுதியானவற்றுக்குத் தொகை அகராதி விளக்கம் தருகின்றது.
பிற நிகண்டுகளில் காணப் பெறாத விளக்கங்-களைச் சதுரகராதி கூறுகிறது. எடுத்துக்-காட்டாக, சிற்றிலக்கிய வகைகள் 96 எனத் தமிழ் இலக்கிய வரலாறு குறித்தாலும் அவற்றின் பெயர்-களைத் தொகை அகராதி தான் விளக்கங்-களுடன் வழங்குகின்றது.
தொடை அகராதி
முனிவர் தொடை அகராதி படைத்ததன் நோக்கம் சொற்களின் பொருள்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பது மட்டுமன்று, செய்யுளின் எதுகை, மோனைத் தொடைகளை அமைக்கத் துணையாகும் சொற்களை வகுத்துக் கூற விரும்பியதுமாகும்.
பிற அகராதிகள்
இலங்கையில் பணியாற்றிய யாக்கோம் கொன்சால்வஸ் அடிகள் 1731-இல் ஒரு தமிழ் அகராதியும் 1735-இல் போர்த்துகீசிய_தமிழ்_-சிங்கள அகராதியும் தொகுத்ததாக அறிகிறோம். 1743-ஆம் ஆண்டில் தோமினிக் தே வலேன்ஸ் ப்ரெஞ்சுத் – தமிழ் அகராதி ஒன்றையும், குஸ்தோதியோ ஆர்னோ போர்த்துகீசிய_தமிழ் அகராதி ஒன்றையும், யுசேபியோ தோ ரொசாரியோ 1772-இல் போர்த்துகீசிய_தமிழ்_-சிங்கள அகராதியையும் 1793-இல் ஒனராத்தோ தே ஊதினே போர்த்துகீசிய_தமிழ் அகராதியை-யும் தொகுத்ததாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவை அச்சிடப்பட்டனவா என்பதை அறிய இயலவில்லை.
மேற்கூறிய அகராதி ஆசிரியர் அனைவரும் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள்.
சீர்திருத்தக் கிறித்தவ சபையாரின் அகராதிகள்
1706-ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் வந்திறங்கிய பர்த்தலோமியஸ் சீகன்பால்கு 40,000 சொற்களைக் கொண்ட ஓர் அகராதியை 1710-ஆம் ஆண்டிலேயே தொகுத்ததாக அறிகிறோம். 1719-ஆம் ஆண்டில் 4000 சொற்களைக் கொண்டு ஒரு தமிழ் அகராதி தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டதாக அறிகிறோம். அதன் பிரதிகள் கிடைக்கவில்லை. சீகன்பால்கு ஐயர் தமிழ்_ஜெர்மன் அகராதி ஒன்றையும் தமிழில் பொருள் அகராதி ஒன்றையும் தொகுத்தார். அவையும் நமக்குக் கிடைக்கவில்லை.
யோவான் சார்த்தோரிஸ் 1737-ஆம் ஆண்டில் தமிழ்_இலத்தீன் அகராதியையும், யோவான் ஏர்ன்ஸ்ட் க்ருண்ட்லர் ஒரு தமிழ் அகராதியை-யும், சீமோன் காட் ஒரு போர்த்துகீசிய_-தமிழகராதியையும், பெஞ்சமின் ஷ§ல்ட்சே ஜெர்மன்_தமிழ் அகராதி ஒன்றையும், தெலுங்கு_-தமிழ்_விவிலிய அகராதிகளையும் தொகுத்தனர். மேலும், நிக்கோலவுஸ் தால், கிறிஸ்டோப் தேயோடோசியுஸ் வால்த்தர் ஆகியோர் தொகுத்த அகராதிகளும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. யோவான் பிலிப் பாப்ரிசியுஸ் 1744-ஆம் ஆண்டு தொகுத்த தமிழ் – ஆங்கில அகராதியும், யோவான் பீட்டர் ராட்லர், ரேனியஸ் நைட், ஸ்பால்டிங், வின்சுலோ தொகுத்த அகராதிகளும் குறிப்பிடத்தக்கவை. பாப்ரிசிஸ் தொகுத்த அகராதி 9000 சொற்களைக் கொண்டது. ராட்லர் தொகுத்த அகராதி 37000 சொற்களைக் கொண்டது.
பிலிப் பெப்ரீசியஸ், ஜான் கிறிஸ்டியன் பிரெய்தாப்ட் ஆகியோர் தயாரித்ததே மலபார் ஆங்கில அகராதி ஆகும். 1779-இல் அச்சிடப்பெற்ற இவ்வகராதி முதலில் தமிழ், பின் அதற்கான இலத்தீன் சொற்களைத் தொகுத்து ஆக்கப்பட்டு (மலபார் மற்றும் லத்தீன்), பிறகு மலபார்_ஆங்கில அகராதியாக மாற்றப்பட்டு அச்சாயிற்று.
மலபார்_ஆங்கில அகராதி, இலக்கியத்தி-லிருந்தும் பொது வழக்கத்திலிருந்தும் சொற்-களைக் கொடுத்துள்ளது. பாதிரிமார்களுக்கும், வணிகர்களுக்கும் மிக உதவியாய் அமைந்தது. சொற்களைத் தொகுக்கும்போதும் மலபார் மொழியில் கிரந்த அடையாளங்களைக் காட்டும்-போதும் உடுக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சொற்களும், மரபுச்சொற்றொடர்களும் சேர்ந்து இதில் மொத்தம் ஒன்பதாயிரம் சொற்கள் உள்ளன.
3. கிறித்தவர்களின் காப்பியப் பணி
கிறித்தவக் காப்பியங்களுள் தலைசிறந்ததாகக் கருதப்படுவது தேம்பாவணி. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத வீரமாமுனிவர் தம் 30-ஆம் அகவைக்குப் பின் தமிழைப் பயின்று அதில் பெருங்காப்பியம் இயற்றும் அளவிற்குப் புலமை பெற்றார் என்பதும் உண்மையிலேயே வியப்புக்குரிய செய்தியாகும்.
தேம்பாவணி இயற்றப்பட்ட ஆண்டு இதுவெனத் துணிதல் அரிதாகும். ஆயினும் 1726 என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 1853-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் அச்சிடப்-பட்ட தேம்பாவணி மூன்றாம் காண்டத்தின் இறுதியில் தேம்பாவணி உரையினை எழுதி முடித்த ஆண்டு 1729 எனக் குறிப்பிடப்பட்-டுள்ளது.
3615 பாடல்களையும் 36 படலங்களையும் கொண்ட தேம்பாவணி 90 சந்தங்களைக் கொண்ட சிறப்புப் பெற்றது. 12,000 பாடல்-களைக் கொண்ட கம்பராமாயணத்தில் 87 சந்தங்களையே கம்பர் பயன்படுத்தியிருக்க, 3615 பாடல்களைக் கொண்ட தேம்பாவணியில் தாம் 90 சந்தங்களைப் பயன்படுத்தியுள்ள பாங்கினை முனிவர் தமது செந்தமிழ் இலக்கணத்திலும் திறவுகோலிலும் பெருமிதத்தோடு குறிப்பிடு-கிறார்.
ஆகிர்த நகர் மரியாள்  எழுதிய ‘கடவுளின் நகரம்’ என்னும் நூலே தேம்பாவணிக்கு முதல் நூலாக அமைந்த செய்தியைப் பாவுரைப் பதிகத்தாலும் பாயிரப் பகுதியாலும் நாம் அறியலாம்.
முனிவர் தம் இலக்கண நூல்களின் பல இடங்களில் தேம்பாவணிப் பாடல்களை மேற்கோளாகக் காட்டி மகிழ்கின்றார். அவரது திறவுகோல் நூலில் மட்டும் 13 இடங்களில் தேம்பாவணியைப் பெயர் சுட்டி மேற்கோள் காட்டுகின்றார்.
யேசு பெருமானின் வளர்ப்புத் தந்தையாகிய புனித வளனாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதப் பெற்ற தேம்பாவணி விவிலியத்-தின் பழைய, புதிய ஏற்பாடுகளில் அடங்கியுள்ள பல நிகழ்ச்சிகளையும் செய்தி-களையும் விரித்துக் கூறுகின்றது. வளனாரே ‘தேம்பாவணி’ என இக்காப்பியத்தில் சிறப்புப் பெயர் பெறுவதால் பாட்டுடைத் தலைவரின் சிறப்புப் பெயரையே இக்காப்பியம் தாங்கியுள்ளது எனலாம்.
சீவக சிந்தாமணியையும், கம்பராமாயணத்-தையும் நுணுகிக் கற்றறிந்தவர் முனிவர் என்பதை அவருடைய தேம்பாவணிக் காப்பியம் மட்டுமல்ல, இலக்கண நூல்களுமே குறிப்பதை நாம் காணலாம். இவ்விரு நூல் பயிற்சியுமே முனிவரைக் காப்பிய ஆசிரியராக உயர்த்தின எனலாம்.
4. கிறித்தவர்களின் உரைநடைப் பணி
அண்டிறீக்கிப் பாதிரியார்  தமது மொழி பெயர்ப்பு நூல்களை உரைநடையிலேயே வடித்தார் என்பது உண்மையே. எனினும் அவை மொழிபெயர்ப்பு நூல்களாகவே கருதப்படு-கின்றன. ஆகவே 1606_1656 ஆண்டுகளில் தமிழகத்தில் வாழ்ந்த ராபர்ட் தெ நொபிலி என்னும் தத்துவ போதகரின் நூல்களே தமிழில் எழுந்த முதல் உரைநடை நூல்களாக ஆராய்ச்-சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
நொபிலியின் நூல்கள்
ஞானோபதேச காண்டம், மந்திர வியாக்கி-யானம், சத்திய வேத இலட்சணங்கள், ஞான தீபிகை, பேதகப் பரீட்சை, மந்திர மாலை, ஞான சங்ஷபம், புனர் ஜென்ம ஆட்சேபம், நித்திய ஜீவன சல்லாபம், சிலுவையின் விசேஷ சல்லாபம், பத்துச் சல்லாபம், உபதேச சல்லாபம், தூஷண திக்காரம், விசுவாச சல்லாபம், ஆத்தும நிர்ணயம், சேசுநாதர் சரித்திரம், தேவமாதா சரித்திரம், ஞானோபதேசம், சின்னக் குறிப்பிடம், ஞானோபதேசக் குறிப்பிடம், கடவுள் நிர்ணயம், அக்கியான நிவாரணம் ஆகியவை நொபிலியால் தமிழில் இயற்றப்பட்ட உரைநடை நூல்களென நொபிலி ஆராய்ச்சியாளர் அருள்திரு ச.இராமாணிக்கம் அடிகளார் நிறுவியுள்ளார்.
நொபிலியின் தமிழ்நடை பதினேழாம் நூற்றாண்டுக்கு உரிய வடமொழி கலந்த நடை. வடமொழி கலந்த தமிழ்நடையே உயர்ந்த நடையாக அன்றைய அறிஞர்களால் கருதப்-பட்டதால் நொபிலியும் அந்நடையிலேயே எழுதினார் எனக் கொள்வது பொருந்தும்.
கேரள மாநிலத்து அம்பலக்காட்டில் அமைந்-திருந்த யேசு சபைக் குருக்களின் அச்சகத்தில் 1665-ஆம் ஆண்டு முதல் நொபிலியின் உரை-நூல்கள் அச்சாகத் தொடங்கின. அவரது ஞானோபதேசம் நூல் பல்தசார் த கோஸ்தா அடிகளாரால் 1661-ஆம் ஆண்டில் போர்த்துக்-கீசிய மொழியில் பெயர்க்கப்பட்டதாக அறிகிறோம்.
நொபிலி அடிகளாரின் உரைநடை நூல்கள் கத்தோலிக்க கிறித்தவ சமயத்தின் கோட்பாடு-களை மிகத் தெளிவான முறையில் எடுத்துரைக்-கின்றன என்பது கத்தோலிக்க சமய அறிஞர்களின் கருத்தாகும்.
வீரமாமுனிவரின் உரைநடை நூல்கள்
நொபிலிக்கு அடுத்த நூற்றாண்டில் 1711_1747 ஆண்டுகளில் தமிழகத்தில் பணிபுரிந்த வீரமா-முனிவரின் உரைநடை நூல்கள் குறிப்பிடத்-தக்கவை. தேம்பாவணி என்னும் பெருங்காப்-பியமும் திருக்காவலூர்க் கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்களும் இயற்றிய வீரமாமுனிவரின் உரைநடை நூல்களில் சிறந்த தமிழ்நடை பயின்று வருவது குறிப்பிடத் தகுந்தது.
வேத விளக்கம், பேதக மறுத்தல், வேதியர் ஒழுக்கம், லுத்தேர் இனத்தியல்பு, பரமார்த்த குரு கதை, வாமன் கதை, திருச்சபைக் கணிதம், நிருபங்கள் ஆகியவை வீரமாமுனிவர் இயற்றிய உரைநடை நூல்களாகும். இவற்றுள் வேதியர் ஒழுக்கம் இலத்தீன், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டது. கத்தோலிக்க-ரல்லாத பிற கிறித்தவச் சபையாரும் இந்நூலை அச்சிட்டுப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்-தக்கது.
முனிவரின் பரமார்த்த குரு கதை தமிழில் எழுந்த முதல் அங்கத நூல் எனப் போற்றப்-படுகிறது. தமிழக மக்களுக்கு அறிமுகமான கதைகளுடன் தாம் ஒரு சில கதைகளைச் சேர்த்து வழங்குவதாகவும் நகைச்சுவை கலந்த இக்கதைகளைப் படிப்பதன் மூலம் பேச்சுத்தமிழைக் களைப்பின்றிக் கற்கலாம் என்று தாம் நம்புவதாகவும் முன்னுரையில் முனிவர் கூறுகின்றார்.
இந்நூல் 1822, 1861-ஆம் ஆண்டுகளில் இலண்டனிலும், 1845, 1851, 1859, 1865-ஆம் ஆண்டுகளில் புதுச்சேரியிலும் சென்னை (1871) பெங்களூரிலும் (1877) அச்சிடப்பட்டது. இது பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டு பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பல பதிப்புகளைக் கண்டது. ஜெர்மன், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இந்நூல் பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டதாக அறிகிறோம். வீரமாமுனி-வரின் நூல்களுள் மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற நூல் இதுவே என்பதில் ஐயமில்லைShare.

About Author

Leave A Reply