காப்புரிமைச் சட்டம்

0
இரா.முத்துக்குமாரசாமி*
படைப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் தாங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கும் அல்லது உருவாக்கும் ஒவ்வொன்றுக்கும் அதன் உரிமையைப் பாதுகாக்கச் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக ஒரு பொருளை உருவாக்குபவர் தாம் உருவாக்கிய புதிய பொருளை ‘மாதிரிப் பதிவு’ என்ற வகையில் பதிவு செய்தால் அவருக்குப் பாதுகாப்பு கிடைக்கும். இல்லாவிடில் அவர் கண்டுபிடித்தது போன்ற பொருளை வேறு ஒருவர் உருவாக்கி விற்பனை செய்து விடுவார். புதிதாகக் கண்டுபிடித்தவருக்கு இதனால் பொருள் இழப்பு ஏற்படும்.
ஒரு பொருள் என்பதல்ல, புதிதாகக் கற்பனையாற்றலால் ஒருவர் படைக்கும் எழுத்துக்கும் இது பொருந்தும். அது இலக்கிய வடிவில்  கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், காப்பியம் எதுவாக இருப்பினும் சரி அல்லது அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆய்வு முடிவு அறிக்கையாயினும் சரி, எதுவாக இருப்பினும் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது நலம்.
ஒரு படைப்பினைப் பதிவு செய்து விட்டால் அந்தப் படைப்பை நூலாக வெளியிடவோ அல்லது அதனைப் படைக்கப் பெற்ற மொழியிலிருந்து வேறு மொழிகளில் மொழி பெயர்க்கவோ அல்லது அதைச் சுருக்கியோ விரிவாக்கியோ வெளியிடுவது போன்ற பல வடிவ மாற்றங்களின் காப்புரிமை படைப் பாளியிடமே இருக்கும்.
காப்புரிமைச் சட்டத்திற்கு அடிப்படையாக ஒரு நூல் படைக்கப்பட்டால் அதை அச்சிடுவோரோ அல்லது வெளியிடுவோரோ நூலின் ஒரு படியை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற சட்டத்தினை முதன் முதல் 1537 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டு அரசன் ஃபிரான்சிஸ்_மி கொண்டு வந்தார். அது அன்பளிப்பாக ராயல் நூலகத்தில் சேர்க்கப் பெறும். அந்த நூல் ஆசிரியர், பொருள், விலை, அளவு, தாள், மொழி எதுவாக இருந்தாலும் கட்டாயம் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காதவருக்குக் கடுமையான தண்டம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப் பெற்ற ராயல் நூலகம் ஒவ்வொரு அரசர் மாறும்போதும் அவரவர் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் அச்சகம்_உரிமை வழங்கல் சட்டம் 1661-_இல் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அந்நாட்டில் அச்சடிக்கப் பெற்ற ஒவ்வொரு புதிய மற்றும் மறுபதிப்பு நூலிலும் மூன்று படிகள் முறையே ராயல் நூலகம் _ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக நூலகம் ஆகிய மூன்று நூலகங்களிலும் சேர்க்கப் பெற்றன. இச்சட்டத்தில் பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப் பெற்றன. இறுதியாக 1914 _இல் கொண்டு வரப்பெற்ற இம்பீரியல் காப்பிரைட் (காப்புரிமை) சட்டத்தின்படி புதிதாக வெளியிடப் பெற்ற நூலில் ஆறு படிகள் இங்கிலாந்திலுள்ள 6 நூலகங்களில் ஒப்படைக்கப் பெற்றன.
ஒவ்வொரு நாடும் இதுபோல் தத்தம் தேவைக்கேற்பச் சட்டங்களை இயற்றின. 1950 ஆம் ஆண்டில் பாரிசு நகரில் யுனெஸ்கோ ஒரு மாநாட்டை நடத்தியது. அதில் ஒவ்வொரு நாடும் ஆங்காங்கு வெளியிடப்படும் நூல்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து விவரண நூல் பட்டியல்களை (ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீவீமீs) வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தியது. வளர்கின்ற நாடுகளில் அறிவு வளர்ச்சிக்கு இத்தகைய பட்டியல்கள் பெரிதும் உதவும் என்று யுனெஸ்கோ நம்பியது. அச்சிட்ட புத்தகத்தை வழங்க வேண்டுமென்ற அரசாங்கச் சட்டம் முதலில் நாள், கிழமை, மாத இதழ்களுக்கு மட்டுமே வந்தது. 1799_இல் வெல்லஸ்லி பிரபு அச்சக ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். ஒவ்வொரு நாளிதழும் அச்சகத்தார், ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகிய மூவரின் பெயர்களையும் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று அச்சட்டம் வற்புறுத்தியது. 1807_இல் மின்டோ பிரபுவும் 1813_இல் ஹேஸ்டிங்ஸ் பிரபுவும் இவ்விதிகளை மீண்டும் வலியுறுத்தினர்.
1823_இல் ஜான் ஆடம் கொண்டு வந்த சட்டத்தில் இந்தியர்கள் யாரும் சொந்தமாக அச்சகம் நடத்தக்கூடாது. அச்சகம் தொடங்கிய மேனாட்டாரும் புத்தகமோ, பருவ இதழோ அச்சிட வேண்டுமென்றால் அரசிடமிருந்து லைசென்ஸ் பெற வேண்டும். மீறி வெளியிடப்படும் புத்தகம், பருவ இதழ் மீது தண்டம் விதிக்கப்பட்டது.
1835_இல் பெண்டிங் பிரபு விலகியபோது கவர்னர் _ ஜெனரல் பொறுப்பிற்கு சர் சார்லஸ் மெட்கஃபே வந்தார். அவர் கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் அச்சகம் தொடங்கலாம். அரசின் முன் அனுமதியின்றி நூல்களோ, பருவ இதழ்களோ வெளியிடலாம். ஆனால் அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டால் அச்சகத்தாரும், வெளியீட்டாளரும் கடுமையாகத் தண்டிக்கப்படு வார்கள் என்று அறிவித்தார்.
ஆளும் கட்சியின் ஒப்புதலோடு மெட்கஃபே கொண்டு வந்த சட்டம் 1835ஆம் ஆண்டு அச்சகச் சட்டம் (றிக்ஷீமீss கிநீt ஷீயீ 1835) எனப்பட்டது. இதன் மூலம் ஆடம்ஸின் கடுமையான அச்சக ஒழுங்குமுறைகள் மாற்றப்பட்டன.
இந்தியக் காப்புரிமைச் சட்டத்திற்கு முன்னோடியான ஒரு சட்டம் 1867ஆம் ஆண்டு புத்தகங்களைப் பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. புத்தகங்களின் உள்ளடக்கத்தை அரசு அறிந்து கொள்ளும் வகையில் புத்தகப் பதிவு முறை கட்டாயமாக்கப் பட்டது. 9ஆம் விதியின்படி புத்தகத்தை அச்சிடும் அச்சகங்கள், புத்தகம் அச்சான ஒரு மாதத்திற்குள் அரசில் உள்ள புத்தகம் மற்றும் பருவ இதழ்களின் பதிவாளருக்கு (ஸிமீரீவீstக்ஷீணீக்ஷீ ஷீயீ ஙிஷீஷீளீs ணீஸீபீ றிமீக்ஷீவீஷீபீவீநீணீறீs) அச்சிடப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு படிகளை அளிக்க வேண்டும். அப்பதிவாளரின் பணி, பெறப்படும் ஒவ்வொரு நூலையும் பெற்று, அவற்றைப் பற்றிய குறிப்புகளைப் பட்டியலிட்டு, அந்நூல்களை முறையாகப் பாதுகாத்து வைக்க வேண்டும். மாவட்டங்களில் வெளியாகும் நூல்களைப் பெறவும் அவற்றைச் சென்னையிலுள்ள பதிவாளருக்கு அனுப்பவும் வேண்டியது மாவட்டப் பதிவாளர்களின் பணியாகும்.
இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான செய்தி, மாநிலப் பதிவாளர் தாம் பெறும் நூல்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறு பதிவாளர் பெறும் நூல்களைப் பட்டியலிட்டு அரசு கெசட்டில் வெளியிட வேண்டும். 1867 ஆம் ஆண்டு முதல் சென்னை ஜார்ஜ் கோட்டை அரசிதழில் ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடப் பெற்றது. இம்முறை நாடு விடுதலையடையும் வரை தொடர்ந்து
80 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்தது.
இவ்வாறு பதிவாளர் பெற்ற நூல்கள் அனைத்தும் சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் கிழிந்து போன, சிதைவுற்ற நூல்களை இன்று காண முடியாது. புத்தகப் பதிவாளர் புத்தகங்களின் காப்புரிமைப் பதிவேட்டைப் பராமரித்து வந்தார். புத்தகங்களைப் பதிவாளரிடம் கொடுத்தபின் இரண்டு ரூபாய் கொடுத்தால் பதிவாளர் பதிவேட்டில் அந்நூலின் காப்புரிமையைப் பதிவு செய்து அதற்கான சான்றிதழையும் வழங்குவார். 1867_இல் புத்தகப் பதிவுச்சட்டம் வருவதற்கு முன் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநிலப் பதிவாளர்கள் அனுப்பிய புத்தகங்களைப் பதிவு செய்து வந்தது. புத்தகங்களின் காப்புரிமையைப் பதிவு செய்ய வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. ஆனால் பதிவு செய்ய விரும்புவோர் தத்தம் புத்தகங்களின் உரிமையைப் பதிவுசெய்ய அரசு உதவியது. இவ்வாறு உரிமையைப் பதிவு செய்யாவிடில் நூலின் உரிமையைப் பாதுகாக்க முடியாது. ஒருவர் எழுதிய நூலை வேறு யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். சட்டப்படி அவரைத் தண்டிக்க முடியாது. ஆனால் உரிமையைப் பதிவு செய்துள்ள ஒருவரின் நூல்களை வேறு யாரும் அச்சிட்டாலோ, விற்பனை செய்தாலோ அந்நூலின் படிகளைப் பறிமுதல் செய்வதுடன் அவரது உரிமை மீறிய செயலுக்காகச் சிறைத்தண்டனையும் அவருக்குப் பெற்றுத் தர முடியும்.
Ôஉரிமை பதிவு பெற்றதுÕ என்று புத்தகங்களில் அச்சிடும் முறையை இன்று காண்கிறோம். © என்று குறிப்பிட்டு நூலின் உரிமையாளரிடம் உள்ளது என்றும் அச்சிடும் முறையை இன்று நூல்களில் காணலாம்.
உலக அளவில் புத்தகம் மற்றும் கருப்பொருள் களைக் காப்புரிமைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்து 1886 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற Ôபெர்ன் கன்வென்சன்Õ (ஙிமீக்ஷீஸீமீ
சிஷீஸீஸ்மீஸீtவீஷீஸீ) உலகளாவிய விதிமுறைகளை உருவாக்கியது. இதன் இன்றியமையாத சிறப்பை உணர்ந்து பல்வேறு நாடுகளும் காப்புரிமைச் சட்டத்தை நிறைவேற்றின.
1950_இல் யுனெஸ்கோ எடுத்துக்கொண்ட முயற்சியால் பாரிசில் நடைபெற்ற மாநாட்டின் தீர்மானத்தின்படி இந்திய அரசும் 1955 ஆம் ஆண்டில் மையத் தகவல் நூலகம் (சிமீஸீtக்ஷீணீறீ
ஸிமீயீமீக்ஷீமீஸீநீமீ லிவீதீக்ஷீணீக்ஷீஹ்) ஒன்றைக் கொல்கத்தாவில் நிறுவியது. அத்துடன் யுனெஸ்கோவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி புத்தகம் மற்றும் பருவ இதழ்கள் வழங்கும் சட்டம், 1954  (ஞிமீறீவீஸ்மீக்ஷீஹ் ஷீயீ ஙிஷீஷீளீs ணீஸீபீ றிமீக்ஷீவீஷீபீவீநீணீறீs கிநீt, 1954) ஒன்றை நிறைவேற்றியது.
இதன்படி இந்தியாவில்  களஞ்சிய நூலகங்கள் தோற்றுவிக்கப் பெற்றன. இச்சட்டத்தின்படி இந்தியாவில் வெளியாகும் ஒவ்வொரு புத்தகத்திலும் கீழ்க்காணும் காப்புரிமை நூலகங்களுக்கு ஒரு படி அனுப்ப வேண்டும்.
1.  
மையத் தகவல் நூலகம், கொல்கத்தா.
2.    புதுதில்லி பொது நூலகம்.
3.    டவுன் ஹால் நூலகம், மும்பை.
4.  
கன்னிமாரா மாவட்ட மைய நூலகம், சென்னை.
ஒவ்வொரு எழுத்தாளரும், பதிப்பாளரும் தங்கள் நூல்களை இந்நூலகங்களில் இடம்பெறச் செய்வதன் மூலம் தங்கள் நூல்களின் காப்புரிமையைப் பதிவு செய்தது போலாகும்.
சென்னை அரசில் புத்தகம் மற்றும் பருவ இதழ்கள் பதிவாளர் ஒருவர் உள்ளார். சட்டப்படி இவருக்கும் தமிழ் நாட்டில் உள்ள அச்சகங்கள் தாங்கள் அச்சிடும் நூல்கள் மற்றும் இதழ்களை அனுப்ப வேண்டும். இது சட்டத்தின் கீழ் கட்டாயம் ஆகும். ஆனால் பதிவாளர் என்று ஒருவர் முறையாகச் செயல்படாததால் இதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. மேலும் இவருக்குப் பதிப்பாளர் அனுப்புவதா அல்லது அச்சகத்தார் அனுப்புவதா என்ற ஐயம் வேறு. ஆனால் யாரும் அனுப்புவதில்லை என்பதே உண்மை. இதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்பதே அதைவிட மோசமான நிலைமையாகும்.
காப்புரிமைச் சட்டத்தின் உண்மையான கூறு அதன் உரிமைக் காலத்தைப் பற்றியதுதான். ஒருவர் அரும்பாடுபட்டு கதையோ, நாவலோ எழுதுகிறாரென்றால் அதன் பலனை அவர் முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் பயன்பட வேண்டும். அடுத்து அவருடைய படைப்புகளால் கிடைக்கும் பலன் அவர் மறைந்த பின் அவர் தம் குடும்பத்தாருக்கும் முழுமையாகப் பயன்பட வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரின் மறைவுக்குப் பின் 50 ஆண்டுகள் வரை அவர் படைப்புகளின் உரிமை அவர் குடும்பத்தாரையே சாரும். இந்த உரிமை பெரும்பாலும் அனேக நாடுகளால் ஒத்துக் கொள்ளப் பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டுச் சட்டம் ஒரு நூலின் காப்புரிமை அதைப் படைத்த ஆசிரியரின் வாழ்நாள் முழுவதும் மேலும் அவர் மறைவுக்குப் பின் 70 ஆண்டுகள் வரையிலும் நூலின் உரிமை ஆசிரியருக்கும் அல்லது எழுத்தாளருக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் உரியதாகும். படைப்பாளர் தம் படைப்பை விற்கவோ அல்லது பிறர் மொழிபெயர்க்க அனுமதிக்கவோ செய்யலாம்.
இந்தியாவிலும் படைப்பாளரின் வாழ்நாள் முழுவதற்கும், அதற்கு மேல் 60 ஆண்டுகள் வரைக்கும் உரிமை உண்டு என்பதுபோல் உள்ளது. இது ஆய்வுக்கு உரியது. இது சட்ட நுணுக்கம். இதை இன்னும் தெளிவு, படுத்த வேண்டும்.
ஒரு நூலை இருவரோ அல்லது மூவரோ சேர்ந்து படைத்திருந்தால் அந்த நூலை அந்த இருவர் அல்லது மூவரில் இறுதியாக உயிர்நீப்பவரின் பிரிவுக்குப் பின் 60 ஆண்டுகள் வரை அந்நூலின் காப்புரிமை அவர்களையே சாரும்.
இந்தியாவில் முதலில் பிற நாடுகளைப் போலவே படைப்பாளரின் மறைவுக்குப் பிறகு 50 ஆண்டுகள் வரை மட்டுமே அன்னாரின் குடும்பத்தாருக்கு அவர் படைப்புகளின் காப்புரிமை இருந்தது. வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் காப்புரிமை அவர் மறைவுக்குப் பின் 50 ஆண்டுகட்கு மட்டுமே இருந்ததை மேலும் 10 ஆண்டுகள் அதிகரித்து 60 ஆண்டுவரை இருக்கலாமெனக் காப்புரிமைச் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதனை வரவேற்ற பிற படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளுக்கும் தங்கள் வாழ்நாளுக்குப் பின் 60 ஆண்டுகள் வரை வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க அனைத்துப் படைப்பாளிகட்கும் இக்கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இதற்கு இடையில் தமிழ்நாட்டில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்களின் குடும்பத்தாரின் வேண்டுதலுக்கு இணங்க அன்னாருக்கு உரிமையான நூல்களை நாட்டுடைமையாக்கும் முறை அரசால் பின்பற்றப்படுகிறது.
முதன்முதலாக மகாகவி பாரதியாரின் பாடல்கள் ஒரு தனிப்பட்ட பட அதிபரின் உரிமைக்கு உட்பட்டிருந்த போது அன்றைய அரசு பட அதிபரிடமிருந்து பாரதியாரின் பாடல்களைப்பெற்று நாட்டுடைமையாக்கியது. இதனைத் தொடர்ந்து இன்று நூற்றுக்கு மேற்பட்ட அறிஞர்கள், படைப்பாளர்களின் நூல்களும் படைப்புகளும் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன. இதனைத் தமிழ் வாசகப் பெருமக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.
தமிழ் நூல்களை அச்சிடும் பணி 19ஆம் நூற்றாண்டுக்கு முன் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதலில் 1554_இல் தமிழ் நூல் (கார்டில்லா) லிஸ்பனில் அச்சிட்டபோது தமிழ்ப்பகுதியை அச்சிடும்போது ரோமன் எழுத்துகளையே பயன்படுத்தினர். அச்சுக் கலை வளர்வதற்கு நல்ல அச்செழுத்துகள் தேவைப்பட்டன. முதலில் தமிழ் எழுத்துகள் மரத்தால் உருவாக்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்தி அச்சிடப் பெற்ற புரொயென்சாவன் தமிழ்_போர்ச்சுகீசு அகராதி (1679)யில் தமிழ் எழுத்துகள் மரத்திலும் ரோமன் எழுத்துகள் உலோகத்தாலும் செய்யப் பெற்றிருந்தன. மெட்கஃபேயின் 1835ஆம் ஆண்டு அச்சகச் சட்டம் வந்த பின்னரே இந்தியர்கள் சொந்தமாக அச்சகங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டனர். அதுவரை கிறிஸ்துவ வேதாகமப் புத்தகங்கள் அரசாங்கம், மற்றும் கிறஸ்துவப் பாதிரியார்கள் நடத்திய அச்சகங்களில் அச்சடிக்கப் பெற்றன.
காப்புரிமைச் சட்டம் உருவாவதற்கு முன் 19ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் எவையெனக் கண்டுகொள்வதற்குப் பயன்படும் நூல் ஜான் மர்டாக் வெளியிட்ட தமிழ் அச்சு நூல்களின் பட்டியல் (சிணீtணீறீஷீரீuமீ ஷீயீ ஜிணீனீவீறீ ஜீக்ஷீவீஸீtமீபீ ஙிஷீஷீளீs) தான். இந்நூல் இல்லையேல் 1712 _ 1867ஆம் ஆண்டுகளில் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய குறிப்பே கிடைக்காமல் போயிருக்கும். 1819 _இல் கிளாஸ்கோவில் தோன்றிய ஜான் மர்டாக் பள்ளியாசிரியராகப் பணியாற்ற 1841_ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். பள்ளி மாணவர்களின் தேவைக்கான பாடநூல்களை அச்சிடுவதிலும் அவற்றை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பரப்புவதிலும் அவர்ஆர்வம் காட்டினார். நூல் விற்பனைக் காகத் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த போது ஆங்காங்கு கிடைத்த, தமிழில் அச்சான நூல்களைப் பற்றிய பட்டியலை 1850 முதல் தயாரித்தார். தாம் தயாரித்த பட்டியலையே 1865 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.
முன்னரே குறிப்பிட்டது போல 1867_இல் புத்தகம் வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த போது தமிழில் அச்சான நூல்கள் அரசுக்குச் சட்டப்படி வழங்கப் பெற்றன. அவற்றைப் பற்றிய குறிப்புகளும் சென்னைக் கோட்டை அரசுப் பதிவிதழில் வெளியாயின. இவற்றைக் கொண்டு 1867 முதல் வெளிவந்த தமிழ் நூல்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்துத் தமிழ் நூல் விவரணப் பட்டியல் என்ற நூற்றொகையினைத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 1960_இல் நிறுவிய நூற்றொகைப் பிரிவு வெளியிட்டுள்ளது. இவ்வெளியீட்டுப் பணியின் பொறுப்பினைத் தமிழறிஞர்
மு. சண்முகம்பிள்ளை தம் தலைமையின் கீழ் அமைந்த குழுவில் செய்து வந்தார். 1957 இல் இந்திய தேசிய நூற்றொகை (மிஸீபீவீணீஸீ ழிணீtவீஷீஸீணீறீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ்) வெளி வரத் தொடங்கும் வரை வெளிவந்த தமிழ் நூல்களைப் பற்றிய குறிப்புகளை தொகுதி தொகுதியாக வெளியிடும் பணியை திரு.மு.சண்முகம் பிள்ளை செய்து வந்தார். 1940 வரை வெளிவந்த நூல்களுக்கான நூற்றொகை வெளிவந்துள்ளது. அவர் மறைவுக்குப் பின் இவ் வெளியீட்டுப் பணி தொய் வடைந்து விட்டது.
இந்திய தேசிய நூலகம் இந்திய தேசிய நூற்றொகையை வெளியிடத் தொடங்கிய பின் பத்தாண்டுகள் பணி சிறப்பாக நடந்தது. அதன் பின் இப்பணியும் தொய்வடைந்தது. தமிழ் நூல்களைப் பற்றிய நூற்றொகையைத் தமிழக அரசே வெளியிடத் திட்டமிட்டது. முதலில் நூல் வடிவில் வந்த இந்தத் தமிழ் நூற்றொகை தட்டச்சுப் பட்டியலுடன் நின்றுவிட்டது. இதற்கெனக் கன்னிமாரா நூலகத்தில் ஒரு பிரிவு செயல்பட்டு வருகின்றது. அண்மைக் காலத்தில் இந் நூற்றொகையை நூல்வடிவில் வெளியிடுவதை விடக் கணினியின் உதவியுடன் குறுந்தகடு வடிவில் வெளியிடுவது எளிது என்று தேசிய அளவில் இப்பணி நடைபெற்று வருகின்றது. இந் நூற்றொகையே நூல்களின் பதிப்புரிமையைப் பதிவு செய்யும் ஆவணமாக இன்று திகழ்கின்றது.  

* தமிழ் அறிஞர்களில் ஒருவர். சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும், மறைமலையடிகள் நூல் நிலையம், சிவஞான முனிவர் நூலகம் (நெல்லை) ஆகியவற்றின் செயலாளராகவும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் – மற்றும் பதிப்பாளர் சங்க தலைவராகவும் சேக்கிழார் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு நூலகச் சங்கம், பன்னாட்டு மொழி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைவராகவும் மற்றும் பல தமிழ் ஆய்வு நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றினார். வேக் பீல்டு பாதிரியார், தாயத்து, கருமணி மலர், கடத்தப்பட்ட டேவிட், சிறுமி எய்தி, இந்திரா பிரியதர்சினி ஆகிய நூல்களை எழுதியவர். நூலகப் பணிக்கான டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் விருது, சிறந்த தமிழ் நூல் பதிப்பாளர் விருது என பல விருதுகளைப் பெற்றவர்.             

Share.

About Author

Leave A Reply