ஆவணக்காப்பகம் – அறிவுசார் உரிமை தொடர்பான கேள்விகள்

0
அபிஷித் பட்டாச்சார்யா *

சமூக அறிவியல் ஆய்வு மையம், கொல்கத்தா, தகவல்களும், ஆவணங்களும் எளிதில் கிடைக்கும் இடமாக மாறி இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், தெற்காசியா, அதிலும் இந்தியா இதில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. இதற்கு நமது பொருளாதாரம்தான் காரணமா? இல்லை, வேறு ஏதேனும் காரணம் உண்டா? நமது பொருளாதாரம்தான் காரணம் என்று நான் கருதவில்லை. கலாசார அமைச்சகமும், மத்திய அரசும், பல மாநில அரசுகளும் இதற்கென அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. பல ஆவணக்காப்பகங்களும், நூலகங்களும் பத்தாண்டுகளுக்கு முன்பே நூல்களைக் கணினிமயப்படுத்தத் துவங்கிவிட்டன. இருப்பினும், தெற்கு ஆசியாவின் மாபெரும் அறிவுக்களஞ்சியத்தை மக்கள் பயன்படுத்த அளிக்க விடாது அறிஞர்களையும், ஆவணக்காப்பாளர்களையும் தடுப்பது எது? இது மனோபாவம் குறித்த பிரச்சனைதானா? இப்போது இருப்பது மனோபாவம் சார்ந்த பிரச்சனைதான். நான் இத்துறை சார்ந்த பலருடன் பழகி வருகிறேன். ஒரு ஆவணத்தைக் கணினி மூலம் மக்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்யலாம் என்று நாங்கள் பேசும்போதெல்லாம், அந்த அறிஞர்கள் காப்புரிமைச் சட்டங்களை எண்ணி பயப்படுவார்கள். இந்தியக் காப்புரிமைச் சட்டம் அப்படி என்ன பேயா, பிசாசா என்று நான் வியந்ததுண்டு. பிறகு நான் இது குறித்து நிபுணர்களோடு விவாதித்த போதுதான், மனோபாவம்தான் தடைக்கல்லாக இருப்பதை அறிந்தேன். காப்புரிமை, காப்புரிமைச் சட்டங்கள் அறிவுசார் கலை, இலக்கியப் படைப்பாளிகளின் நலன்களைக் காக்க உருவாக்கப்பட்டவை. இப்படிப்பட்ட சட்டங்கள் அனைத்து நாடுகளிலும் உண்டு. இந்திய காப்புரிமைச் சட்டம் படைப்பாளிகள், பயனாளிகள் என இருவர் நலனையும் பாதுகாக்கும் வகையில் விரிவாக எழுதப்பட்டது என சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள். பதிப்புரிமைச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட ஒரு படைப்பை மறு வெளியீடு செய்வதில் உள்ள பிரச்சனைகள் என்ன? இச்சட்டத்தின் 52 _வது பிரிவு விளக்கமாகக் கூறுகிறது. அதன் சாரத்தை இங்கே நாம் பார்ப்போம். எந்த ஒரு இலக்கிய, நாடக, இசையின் ஒலிப்பதிவையும், வேறொருவர் அதன் உரிமையாளரின் ஒப்புதலுடன் செய்யலாம். அதற்கு அவர் முன்னனுமதி பெற வேண்டும். அவர் விற்கப் போகும் ஒலிப்பதிவின் அட்டை, லேபிள் போன்றவற்றை உரிமையாளரிடம் காட்ட வேண்டும். உரிமையாளருக்கு உண்டான உரிமைத் தொகையை அளிக்க வேண்டும். மேலும், அவரது அனுமதியின்றி அதில் மாற்றங்கள் எதுவும் செய்யக்கூடாது. அந்த ஒலிப்பதிவின் உரிமையாளரின் அடையாளத்தை மறைக்கும் விதமான அல்லது மக்களைக் குழப்பும்விதமான அட்டை போட்டு வெளியிடக்கூடாது. அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கணக்குகளையும் மூல உரிமையாளர் பார்வையிட அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் குற்றச்சாட்டுகள் எழுந்தால், பதிப்புரிமை வாரியம் அக்குற்றச்சாட்டு உண்மை எனக் கருதியே விசாரிக்கும். உரிமைத்தொகை அளிப்பது உள்ளிட்ட தேவையான உத்தரவுகளை ஒருதலைப்பட்சமாகவும் வழங்கும். இது போன்ற ஒலிப்பதிவுகளைப் பொது இடங்களில் பயன்படுத்துவது பற்றியும் விரிவான சட்டங்கள் உள்ளன. ஒரு குடியிருப்புப் பகுதியில் அங்கு குடியிருப்போருக்கு அளிக்கப்படும் வசதிகளின் ஒரு பகுதியாக, லாபநோக்கற்ற சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒலிபரப்பலாம். அதேபோல ஒரு செய்தித்தாளிலோ, பத்திரிகையிலோ வந்ததை, அதன் ஆசிரியர் அதன் உரிமை தனக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லாது இருந்தால், அதனைப் பயன்படுத்தலாம்.
ஒரு கூட்டத்தில் பேசப்பட்டு பத்திரிகைச் செய்தியாக வந்ததைப் பயன்படுத்தலாம். துண்டுப்பிரசுரமோ, இசைக்குறிப்போ, வரைபடமோ, புத்தகமோ எதுவாக இருப்பினும், அது இந்தியாவில் கிடைக்காது என்றால், நூலகப் பொறுப்பாளர் நூலகத்தின் உபயோகத்திற்காக மூன்று பிரதிகள் வரை எடுத்துக் கொள்ளலாம். நூலகத்தில் உள்ள ஒரு படைப்பை, ஆய்விற்காகப் பிரதி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு ஒரு காலக்கெடு உண்டு . அந்த நூலின் ஆசிரியர் இறந்து 60 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சேர்ந்து எழுதியது என்றால், இறந்த ஆசிரியரது மரணத்திலிருந்து 60 ஆண்டுகள். அரசாங்க கெசட்டில் வெளியான எதுவும் அரசாணைகளைத் தவிர அரசாணை யாக இருப்பின் அது குறித்த விளக்கவுரையோடு கமிட்டிகள், கமிஷன்கள், வாரியங்கள் போன்ற அரசால் அமைக்கப்பட்ட அமைப்புகளின் அறிக்கைகள், அவற்றின் வெளியீட்டை அரசு தடை செய்யாது இருந்தால் நீதிமன்றங்களின், தீர்ப்பாயங்களின் தீர்ப்புகள் ஆகியவற்றையும் வெளியிடலாம். மேலும், ஒரு சட்டமன்றத்தின் சட்டத்தை வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கவும் அனுமதியுண்டு. அதுபோல, ஓவியங்கள், சிற்பங்கள் இவற்றின் புகைப்படங் களையும் வெளியிடலாம். அப்படி இந்தியச் சட்டம் மிக நெகிழ்வாக உள்ளது. இப்படி இருந்தும் தடுப்பது எது? இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் வாசகங்களிலோ, அது குறித்த நிபுணர்களின் விளக்கங்களிலோ பயமுறுத்தும் வகையில் எதுவும் இல்லை. படைப்பாளிகள், பயனாளிகள் இருவருக்குமே பாதுகாப்பளிக்கும் விதமாகத்தான் உள்ளது. (1994 திருத்தங்களால் கணினி நிரல் எழுதுபவர்களுக்குச் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளன) காப்புரிமை பெரும்பாலும் வடிவம் சார்ந்தது. உள்ளடக்கம் சார்ந்தது அன்று என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் காப்புரிமை தொடர்பான அறிவிப்புகளில் எந்த ஒரு ஆவணம் என்றாலும், அதன் மூல வடிவத்தைத் தவிர வேறு வடிவங்களில் மறுவெளியீடு செய்வதைக் குறித்தே இருக்கும். இது பதிப்பாளர், அவரது வியாபாரம் மற்றும் அறிவு, கலைசார் படைப்பாளியின் நலனைப் பாதுகாக்கும் ஏற்பாடாகும். மேலும் காப்புரிமை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் செல்லும். இந்தியாவில் இது 60 ஆண்டுகள். அதன்பின் அந்த ஆவணத்தில் சர்ச்சைக்குரிய தகவல் எதுவும் இல்லை என்றால் அது பொது வெளிக்கு வந்துவிடும். சர்ச்சைக்குரிய தகவல் என்றால், பொதுவாக தேச வரைபடங்களில் எல்லைகளைக் குறிப்பதில் உள்ள சர்ச்சை, இதுகாறும் வெளியிடப்படாத தனிநபர் ஒருவரின் தனிப்பட்ட கடிதங்கள், டைரிக் குறிப்புகள் போன்றவைதான். நூல்களைப் பொறுத்தவரை, ஒரு நூல் வெளியாகி மூன்று ஆண்டுகள் முடிந்தபின், இந்தியாவில் அது எங்கும் கிடைக்கவில்லை என்றால், எந்த ஒரு ஆவணக் காப்பகமும் விலை நிர்ணயிக்காது, அதன் வடிவத்தை மாற்றாது அதை வெளியிடலாம். இன்று ஆய்வாளர்கள் பெரும் பாலும் புகைப்படங்கள், ஓவியங்களைத்தான் ஆய்விற்குப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் உரிமையாளர் பற்றித் தெரியவில்லை என்றால், அது குறித்த அறிவிப்போடு அதை வெளியிட வேண்டும். தகவல் தெரிந்தால் வெளியிடுவது பற்றி அவரிடம் பேசி முடிவு செய்ய வேண்டும். காப்புரிமை தொடர்பாக மிக கவனமாகச் செயல்பட வேண்டியவர்கள் கணினி நிரல்களை வெளியிடுவோர்தான். அவர்களில் பெரும்பாலானோர் உரிமையைத் தம் வசம் வைத்திருக்க விரும்புகிறார்கள். மென்பொருள் கம்பெனிகளின் தொடர்ந்த நெருக்குதல் காரணமாக 1994_ல் இந்திய அரசு பதிப்புரிமைச் சட்டங்களில் மேலும் சில திருத்தங்களைச் செய்தது. தொலைந்து போகும்போது பயன்படுத்துவதற்காக மட்டுமே மென்பொருட்களை நகல் செய்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஷரத்துகள் இணைக்கப்பட்டன. போட்டி, துறையின் வேகமான வளர்ச்சி இரண்டையும் கருதி இக்கம்பெனிகள் மென்பொருட்களின் உற்பத்தி, வணிகம் இவை மட்டுமன்றி, அதன் பயன் பாட்டையும் தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. இன்று கணினிகளின் விலை குறைந்து வருகிறது. சிறு குழந்தைகளும் கணினி பற்றி அறிந்துள்ள காலம். ஆவணங்களைக் கணினி மயப்படுத்தும் இக்காலத்தில் தகவல்கள் அதிக சிரமமின்றி மக்களை அடைய வைப்பதை எது தடுக்கிறது? எந்த ஒரு ஆவணக்காப்பகமும் எந்த ஒரு ஆவணத்தையும் ஆய்வுக்காகப் பயன்படுத்துவது குறித்த நேரிய பயன்பாட்டு (திணீவீக்ஷீ ஹிsமீ) வழிகாட்டலின் அடிப்படையில் அழுத்தமான அறிவிப்போடு வெளியிட முடியும் என்றே நான் கருதுகிறேன்.

* கொல்கத்தாவில் உள்ள சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் ஆவணக்காப்பாளராக பணியாற்றுகிறார். ஆவணக்காப்பகம் சம்பந்தமான பணியில் முழுமையான ஆர்வத்துடன் செயல்பட்டுவருபவர்.

Share.

About Author

Leave A Reply